ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்த புறாவுக்கு இரண்டு புறா குஞ்சுகள் இருந்தது. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தது. இவை இரண்டுக்கும் தாய்புறா உணவு கொண்டு வந்து கொடுக்கும். நாட்கள் கடந்து சென்றது. இரண்டு புறாக்களும் பருவ வயதினை அடைந்தது. தன் குஞ்சுகளின் திறமையை பரிசோதிக்க நினைத்த தாய்புறா, இரண்டு புறாக்களையும் அழைத்து, உங்களுக்கு இரை தேடிச் செல்லும் அளவுக்கு இறகுகள் வளர்ந்துவிட்டது. இனி நீங்கள் தனியாக சென்று இரையை தேடி கொண்டு வரவேண்டும்.
நீங்கள் தேடிச் செல்லும் இரகசியத்தை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளக்கூடாது என்றது. தன் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு புறாக்களும் இரையை தேட ஆரம்பித்தன. இரண்டில் ஒரு புறா தேடுவதற்கு முன் சேற்றில் விழுந்து தன்னை அழுக்காக்கி கொண்டபின் இரை தேடச் செல்லும். போதிய அளவு இரை தேடிய பின் ஆற்றில் சேற்றை கழுவிக் கொண்டு இருப்பிடத்திற்கு செல்லும்.
இதைப்பார்த்த மற்றொரு புறா, நீ அழுக்கோடு என்னுடன் வருவதால் எனக்கு கேவலமாக இருக்கிறது. உன்னை பார்க்கும் மனிதர்கள் உன்னை ஒதுக்கி விடுகின்றார்கள், என்னை பார்க்கும் மனிதர்கள் என் அழகை ரசிக்கின்றார்கள். நீ முட்டாளைப்போல நடந்துகொள்ளாதே என தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். இரண்டு வாரங்கள் கழிந்தது. தாய்புறா தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து சோதனை செய்தது. அதில் ஒரு புறா நன்றாக கொழுத்துப்போய் இருந்தது. மற்றொரு புறா எலும்பும் தோலுமாய் இருந்தது.
உடனே தாய்புறா, கொழுத்துப்போய் இருந்த புறாவை அழைத்து, நீ இவ்வளவு கொழுத்துப்போய் நன்றாக இருக்கின்றாய். ஆனால் உனது சகோதரன் மட்டும் ஏன் இப்படி எலும்பும் தோலுமாய் இருக்கிறான் எனக் கேட்டது. அதற்கு அந்த புறா, அம்மா! நான் தினமும் காலையில் இரை தேடுவதற்கு சேற்றில் குளித்துக்கொண்டு இரைதேடச் செல்வேன். நான் அழுக்காக இருப்பதால் மனிதர்கள் யாரும் என்னை கண்டு கொள்ளமாட்டார்கள். நான் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் எனது வயிறு நிறைய இரைகளை பெற்றுக்கொள்வேன்.
ஆனால், அண்ணன் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அவனால் நிம்மதியாக இரை தேட முடிவதில்லை. மனிதர்கள் அவனது அழகை கண்டு, அவனை பிடிப்பதற்கு துரத்துகின்றார்கள். அதனால் அவன் அதிக இரை தேட முடிவதில்லை. குறை வயிற்றோடு தினமும் இருப்பிடத்திற்கு திரும்பி விடுவான். இதனால்தான் அவன் பசியால் மெலிந்து போய் உள்ளான் எனக் கூறியது.
இதைக் கேட்ட தாய்புறா, தன் குஞ்சின் புத்திக்கூர்மையினை நினைத்து மெய்சிலிர்த்தது. மற்றொரு புறாவை அழைத்து, உனது தம்பி இரை தேட புத்திக்கூர்மையை பயன்படுத்தி இருக்கிறான். அதனால் இனி நீ உன் தம்பி எவ்வாறு நடந்துகொள்கின்றானோ அவ்வாறே நீயும் நடந்துகொள். அது உன்னையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும். நீயும் குறைவில்லாமல் இரை தேடலாம் என அறிவுரை கூறியது.
தத்துவம் :
நாம் எவ்வளவுதான் அழகு, அறிவோடு இருந்தாலும் இடத்திற்கு தகுந்தாற்போல் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்போது தான் வாழ்வில் முன்னேற முடியும்.
நீதி கதைகள்
அவசரம் வேண்டாம் !
காட்டில் இளைஞன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தான். போகும் வழியில் அவனுக்கு பசி கடுமையாக எடுத்தது. என்ன செய்தவதென்று தெரியாமல் இருந்த அவனுக்கு ஒரு மரத்தில் பழங்கள் கனிந்து இருப்பதை கண்டான். உடனே அம்மரத்தில் தாவி ஏறினான். சில கனிந்த பழங்களை பறித்து தின்றான். அங்கு மேலும் ஒரு கிளையில் பழங்கள் இருப்பதை கண்டு அக்கிளைக்கு தாவினான். அக்கிளை சிறியதாக இருந்ததால் அவனின் எடையை தாங்க முடியாமல் அக்கிளை ஒடிந்தது. கிளை ஒடிந்ததால் பக்கத்தில் இருந்த மற்றொரு கிளையை பிடித்துக் கொண்டான். அக்கிளையில் இருந்து கீழே பார்த்தால் தரை வெகுதூரம் இருந்தது. கிளையை விட்டுவிட்டு குதித்தால் நிச்சயம் கை, கால்கள் உடையும் என்பதை அறிந்த அவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். பின் யாராவது இருந்தால் என்னை காப்பாற்றுங்கள் என்று அலறினான். நேரம் ஆகாஆக அவனது உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது.
வெகுநேரம் சென்றபின் அவ்வழியே முதியவர் ஒருவர் வந்தார். அந்த இளைஞன் முதியவரை பார்த்து, என்னை காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டான். முதியவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். கல் பட்டவுடன் இளைஞன் வலியை தாங்க முடியாமல் முதியவரை பார்த்து, உங்களை உதவ சொன்னால் நீங்கள் என்மேல் கல்லை தூக்கி எறிகின்றீர்கள் என கோபத்துடன் கேட்டான். அந்த பெரியவர் அமைதியாக இருந்தார். மறுபடியும் ஒரு கல்லை தூக்கி அவன் மேல் எறிந்தார். அந்த இளைஞன் கோபத்துடன், பெரியவரே, உமக்கு அறிவில்லையா என கேட்டான். அதன்பின் தன்னை சுதாகரித்து கொள்ள மற்றொரு கிளையை பற்றி கொண்டான். அந்த பெரியவர் மீண்டும் அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். அந்த இளைஞன் மிகுந்த கோபத்துடன், பெரியவரே நான் கீழே வந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் என கத்தினான். அதன்பின் பக்கத்தில் பலமாக இருந்த கிளை ஒன்றை பற்றிக் கொண்டான்.
மீண்டும் அப்பெரியவர் அந்த இளைஞன் மீது கல்லை தூக்கி எறிந்தார். கோபங்கொண்ட இளைஞன், இனி உங்களுக்கு வாயால் சொல்லி ஒரு பயனும் இருங்கள், நானே கீழே வருகிறேன் எனக் கூறி முயற்சி செய்து மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். அந்த இளைஞன் பெரியவரை பார்த்து சரமாரியாகத் திட்டினான். உங்களிடம் உதவி தானே கேட்டேன். ஏன் கல்லை தூக்கி எறிந்தீர் எனக் கேட்டான். பெரியவர் அமைதியாக சிரித்தார். பின், தம்பி! நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். அந்த இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர், நான் உன்னை முதலில் பார்த்தபோது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். அதனால் உன் மூளை வேலை செய்யவில்லை.
நான் கல்லை விட்டு எறிந்ததும் உன் பயம் சிறிது மறைய ஆரம்பித்தது. அதன்பின் நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். மீண்டும் மீண்டும் கல்லை எறிந்தேன். அதனால் நீ உன்னை காப்பாற்றிக் கொள்ள பெருமுயற்சி செய்தாய். கடைசியாக உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. இதற்கு காரணம் உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று கூறினார். உண்மையை தெரிந்து கொண்ட அந்த இளைஞன் அந்த பெரியவரிடம், தங்களை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டான். பின் தாங்கள் உதவி செய்ததற்கு மிக்க நன்றி எனக் கூறினான். அதன்பின் அப்பெரியவர் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.
தத்துவம் :
என்னதான் பிரச்சனை இருந்தாலும் கோபம் கண்ணை மூடிவிடும். அதனால் அப்பிரச்சனையில் இருந்து எவ்வாறு வெளி வருவது சிரமமாகிறது. சிறிது அமைதியாக இருந்து அப்பிரச்சனைக்கு உண்டான வழியை தேடினால் நிச்சயம் கிடைக்கும்.
நம்பிக்கையை கைவிடக்கூடாது !
ஒரு ஊரில் ராஜ் என்பவன் மிகவும் நற்குணம் உடையவனாகவும், எப்பொழுதும் தன்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவனாகவும் இருந்தான். ஒரு நாள் ராஜ் சுற்றுலா சென்றான். அங்கு படகில் பயணம் செய்யும்போது அவன் சென்ற படகு கவிழ்ந்துவிட்டது. கடல் நீரினால் அடித்து செல்லப்பட்ட ராஜ், யாருமே இல்லாத தீவு ஒன்றில் கரை ஒதுங்கினான்.
ராஜ் கண் விழித்து பார்த்தப்போது தான் ஒரு தீவில் இருப்பதை கண்டு திகைத்துப் போனான். அதன்பின் தன்னை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அந்த பக்கமாக செல்லும் பெரிய கப்பல்களுக்கு சமிக்ஞை செய்ய தன்னிடம் இருந்த கைக்குட்டையை கொடியாக கட்டி வைத்தான்.
மூன்று மாதங்கள் கழிந்தது. அவனை காப்பாற்ற ஒருவரும் வரவில்லை. அவனின் நம்பிக்கை சிறிது குறைந்தாலும், அந்த தீவில் வாழ தன்னால் இயன்ற அளவு முயன்றான். அங்கே இருக்கும் விலங்குகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள சிறு குடிசை ஒன்றை அமைத்துக் கொண்டான். அங்கே கிடைத்த சிறு சிறு உணவுப் பொருட்களை தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு பசியாறினான்.
இவ்வாறு ஒருநாள் ராஜ் உணவு தேடிவிட்டு திரும்பியபோது அவனது அந்த குடிசை மொத்தமாக எரிந்து சாம்பலாகி இருப்பதை பார்த்து திகைத்துப் போனான். குடிசை இருந்த இடத்தில் வெறும் புகை மட்டுமே வந்து கொண்டிருந்தது. நல்லது செய்த தனக்கு எல்லாமே தீங்காகவே நடப்பதை நினைத்து அழுது புலம்பினான்.
அப்போது ஒரு பெரிய கப்பல் ஒன்று அவன் இருந்த தீவின் திசையில் வருவதைக் கண்டான். கைகளை வேகமாக அசைத்து அவன் கத்த, அந்த கப்பல் மெல்ல அந்த தீவின் அருகே இருந்த கரையோரம் வந்து நின்றது. அவனால் இதை நம்பவே முடியவில்லை. கப்பலில் இருந்து இறங்கி வந்த மாலுமியிடம், எப்படி இந்த தீவிற்கு வந்தீர்கள் என ஆவலுடன் கேட்டான் ராஜ்.
மாலுமி, 'எங்கள் கப்பல் தலைவன் எங்கிருந்தோ புகை வருவதை கவனித்து என்ன என்று தன்னுடைய தொலைநோக்கியில் பார்த்தப்போது நீங்கள் நட்டிருந்த உதவி கேட்கும் கொடி அவர் கண்ணில் பட்டது. யாரோ உதவி கேட்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு இந்த பக்கம் கப்பலை திருப்பி வந்தோம்" என்றார்.
தத்துவம் :
நம் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் நம்பிக்கையோடு இருந்தால் கட்டாயம் ஏதேனும் பாதை தெரியும். நம்பிக்கை தான் வாழ்க்கை.
பலம் பலவீனம் !
ஒரு ஊரில் பிரபலமான கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலில் கோவில் யானைகள் இருந்தன. அந்த கோவிலில் யானைகளை அன்புடன் வளர்த்து வந்தனர். அந்த யானைகளை தினமும் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி நெற்றியில் பட்டை தீட்டி அழகுப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்வதற்கு யானைப் பாகன் ஒருவனை கோவில் நிர்வாகம் நியமித்து இருந்தது.
யானைப் பாகன் ஒரு நாள் வழக்கம்போல் அந்த கோவில் யானைகளை அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றான். அந்த யானைகளைக் குளிப்பாட்டி நெற்றியில் பட்டை தீட்டி அழகுபடுத்தி அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். ஒரு ஒடுக்கமான பாலத்தில் யானைகள் வரும் போது இரண்டு பூனைகள் எதிரிலே வந்தன.
அதில் ஒரு பூனை மட்டும் சேற்றில் விழுந்து எழுந்த நிலையில் சேற்று உடலுடன் தன்னுடைய வாலை ஆட்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தது. சேற்றில் விழுந்து எழுந்து வந்த பூனையைப் பார்த்ததும் யானைகளில் ஒரு யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டது. அந்தப் பூனை, எதிரே இருந்த இன்னொரு பூனையிடம், பார்த்தாயா, உருவத்திலும், பலத்திலும் உயர்ந்த அந்த யானைகளே என்னைக் கண்டு பயந்து எனக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது என்று சொல்லி சிரித்தது.
அந்த பூனை சொல்லி சிரிப்பதைப் பார்த்து யானைகளில் ஒரு யானை, அந்த பூனைக்கு ஒதுங்கி வழிவிட்ட யானையைப் பார்த்து நீ அந்த சேற்றில் விழுந்து எழுந்து வந்த பூனையைப் பார்த்து பயந்துதான் அதற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றாயா? என்று கேட்டது. அதற்கு அந்த யானை நான் தவறி இடறி அந்த பூனையின் மேல் விழுந்து விட்டால் அந்த பூனை நசுங்கி இறந்து விடும்.
மேலும் நான் ஆற்றங்கரையில் நன்றாக குளித்துவிட்டு சுத்தமாக இருக்கிறேன். அதனால் நான் அந்த சேற்றில் விழுந்து எழுந்து வந்த அப்பூனையின் மேல் விழுந்தால் நானும் அந்தப் பூனையைப்போல் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால் தான் நான் ஒதுங்கி அந்த பூனைக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றேன் என்றது.
தத்துவம் :
அடக்கத்தில் சிறந்தவர்கள் தன்னிடம் உள்ள பலம், பலவீனம் பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களின் பலத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்து இருப்பார்கள்.
விலை மதிப்பில்லாதது எது?
ஒரு நாள் மணிகண்டன்; வீட்டில் திருடர்கள் நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள், மணிகண்டனையும், அவனுடைய பெற்றோரையும் பார்த்து, நகையும், பணமும் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சீக்கிரம் சொல்லுங்கள். சீக்கிரம் சொல்லவில்லையென்றால் நாங்கள் உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். அதற்கு மணிகண்டனின் பெற்றோர், திருடர்களைப் பார்த்து, எங்கள் வீட்டில் நகையோ, பணமோ எதுவும் இல்லை. தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்கள். அவர்கள் சொன்னதை திருடர்கள் நம்பவில்லை. மணிகண்டனின் பெற்றோரை அடித்துத் துன்புறுத்தினார்கள்.
அப்போது, திருடர்களைப் பார்த்து பயத்தில் ஒளிந்து கொண்டிருந்த மணிகண்டன்;, தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்தான். திருடர்களிடம் சென்றான். திருடர்களிடம் என் அப்பா, அம்மாவை துன்புறுத்தாதீர்கள். நான் பணமும், நகையும் இருக்கும் இடத்தை சொல்கிறேன். அந்த பீரோவில் நகைகள் மற்றும் பணம் இருக்கின்றன. அந்த பீரோவின் சாவி கட்டில் படுக்கைக்குக் கீழே இருக்கின்றது என்று மணிகண்டன்; கூறினான். எங்களைப் பார்த்து பயந்து பணம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டாயா? என்று திருடர்களில் ஒருவன் கேட்டான்.
அதற்கு மணிகண்டன்;! நான் உங்களைப் பார்த்து பயப்படவில்லை என்றான். அதற்கு அந்த திருடன், எங்களைப் பார்த்துப் பயப்படவில்லையென்றால், நீயும் உன் பெற்றோரைப் போல பணம் இல்லை என்று பொய் சொல்ல வேண்டியதுதானே? எதற்காகப் பணம் இருக்கும் இடத்தைச் சொன்னாய் என்று கேட்டான். அதற்கு மணிகண்டன், என் பெற்றோருக்கு உண்மை மற்றும் பொய் இவைகளின் விலை தெரியாது. எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் உண்மையைச் சொன்னேன் என்று பதில் சொன்னான். அதற்கு அந்தத் திருடன், உண்மை, பொய் இவற்றிற்கு விலை இருக்கிறதா? உண்மைக்கும், பொய்க்கும் விலை இருக்கிறதென்றால், உண்மையின் விலை என்ன? பொய்யின் விலை என்ன? என்று கூறும்படிக் கேட்டான்.
உடனே மணிகண்டன், என் அம்மா, அப்பாவின் உயிர்தான் உண்மையின் விலை என்றான். சிறிது நகையும், கொஞ்சம் பணமும் பொய்யின் விலை என்றான். நகையையும், பணத்தையும் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால், என் அப்பா, அம்மாவின் உயிர் விலை மதிப்பில்லாதது. அவர்களின் உயிர் பிரிந்து போய்விட்டால் மீண்டும் அவர்களின் உயிரைப் பெற முடியாது என்று பதில் சொன்னான். மணிகண்டனின் பதில் திருடர்களைச் சிந்திக்க வைத்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்தவர்கள், மணிகண்டனின் அழகானப் பேச்சால் கவரப்பட்டு, மனம் மாறி அவர்கள் கொள்ளையடித்தப் பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு சென்று விட்டார்கள்.
நீதி :
இவ்வுலகில் விலை மதிப்பில்லாதது அம்மா அப்பா. நாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களின் பாசத்தை அன்பையும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது. நமக்கு வரும் எந்த கஷ்டமான சூழ்நிலையிலும் நம் பெற்றோரை விட்டு கொடுக்க கூடாது.
பொறுமையால் வெல்லலாம் !
குதிரையில் வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இங்கே தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் குதிரையை விட்டு இறங்கினான். குதிரையை அருகிலிருந்த மரத்தில் கட்டினான். அது உண்பதற்காகப் புல் போட்டுவிட்டு சத்திரத்திற்குள் நுழைந்தான். அப்பொழுது அங்கிருந்த குறும்பன் ஒருவன் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான். இதைப் பார்த்த அவன், தம்பி இது முரட்டுக் குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே. உதைத்தால் உன் பற்கள் எல்லாம் போய்விடும் என்று எச்சரித்து விட்டு உள்ளே சென்றான்.
ஆனால் அந்தக் குறும்பன் இந்த எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தவில்லை. மீண்டும் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தான். குதிரையால் வலியைப் பொறுக்க முடியவில்லை. விட்டது ஒரு உதை. அவன் நான்கைந்து குட்டிக்கரணங்கள் போட்டு சிறிது தொலைவில் விழுந்தான். முன் பற்கள் விழுந்ததோடு அல்லாமல் நல்ல காயமும் அவனுக்கு ஏற்பட்டது.
இந்த அநியாயத்தைக் கேட்பார் யாரும் இங்கு இல்லையா? என்று கூச்சலிட்டான் அவன். அங்கே கூட்டம் கூடி விட்டது. என் இந்த நிலைக்கு முரட்டுக் குதிரையின் சொந்தக்காரன்தான் காரணம் என்றான். தனக்கு இழப்புத் தொகையோ அல்லது குதிரை உரிமையாளனுக்கு தண்டனையோ தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான். வழக்கு தொடங்கியது.
குதிரை சொந்தக்காரனைப் பார்த்து நீதிபதி, இந்த முரட்டுக் குதிரை உன்னுடையதுதானா? என்று கேட்டார். ஆனால் அவனோ ஏதும் பேசவில்லை. உன் குதிரையால்தான் இவனுக்கு இவ்வளவு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறாய் என்று மீண்டும் கேட்டார் நீதிபதி. அப்பொழுதும் அவன் ஒன்றும் பேசவில்லை. இதைக் கண்ட நீதிபதி இவன் செவிட்டு ஊமை போல் இருக்கிறான். என்ன கேட்டாலும் பதில் பேசாமல் இருக்கிறானே என்றார்.
உடனே வழக்கு தொடுத்தவன், என்ன வாயிலே கொழுக்கட்டையா வைத்து இருக்கிறாய்? இது முரட்டுக் குதிரை. வால் முடியைப் பிடித்து இழுக்காதே. உதைத்தால் பல்லெல்லாம் போய் விடும் என்று அப்பொழுது கத்தினாயே. இப்பொழுது செவிட்டு ஊமை போல நடித்து ஏமாற்றவா பார்க்கிறாய் என்று கோபத்துடன் கத்தினான். இதைக் கேட்டதும் நீதிபதிக்கு உண்மை புரிந்தது.
வழக்கு தொடுத்தவனைப் பார்த்து, அவர் எச்சரித்த பிறகும் குதிரையின் வால் முடியைப் பிடித்து இழுத்தாயா? என்று கேட்டார். அவன் தலை குனிந்து நின்றான். குதிரையின் சொந்தகாரன், நீதிபதி அவர்களே தங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே ஊமை போல நடித்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றான். வழக்கு தொடுத்தவனைக் கடுமையாக கண்டித்து அனுப்பிய நீதிபதி குதிரை சொந்தக்காரனின் அறிவு கூர்மையைப் பாராட்டினார்.
தத்துவம் :
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai