tamilnadu epaper

எல்லாமே விதிப்படிதான்

எல்லாமே விதிப்படிதான்

 

 

எல்.கே.ஜி. படிக்கும் மகள் உதயாவிற்கு இரண்டு தினங்களாக ஜுரம்.

வழக்கம் போல் மருந்து கடையில் காய்ச்சல் மாத்திரை வாங்கிக் கொடுத்தான் முருகன்.

 

ஆனால் ஐந்து நாட்களுக்கு மேலாகியும் ஜுரம் இறங்காமலே போக டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினான்.

 

பரிசோதித்த டாக்டர் அது வைரஸ் ஃபீவர் என்றும், மிகவும் முற்றிய நிலையில் இருப்பதாகவும், சிறுமியின் உடலில் எதிர்ப்புச் சக்தி சுத்தமாய் இல்லாதிருப்பதாகவும் சொல்ல, தாய் புவனா கதறினாள். 

 

 "ஆண்டவா ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு...ன்னு ஒரே ஒரு பொட்டப் புள்ளையப் பெத்து வச்சிருக்கேன் அதையும் என்கிட்ட இருந்து பறிச்சிடாதப்பா"

 

  "புவனா நீ ஆஸ்பத்திரியிலேயே இரு நான் போய் நம்ம குடும்ப ஜோதிடரை பார்த்துட்டு வரேன்" முருகன் கிளம்ப,

 

  "ஏங்க... உங்க ஜோதிட நம்பிக்கைக்கு ஒரு எல்லையே இல்லையா?...பெத்த பொண்ணு சாகுமா?... பொழைக்குமாங்கற நிலையில் கிடக்கும் போது கூட உங்களுக்கு ஜோதிடம் தான் முக்கியமா?"

 

மனைவி சொல்வதைக் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் ஓடினான் முருகன். போனவன் அடுத்த இருபதாம் நிமிடம் திரும்பி வந்தான். "த பாரு புவனா... நம்ம குடும்ப ஜோதிடர் சொல்லிட்டாரு நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகாதாம்!... அவளுக்கு ஆயுசு கெட்டியாம்!... 80 வயசு வரை வாழ்வாளாம்"

 

   உள்ளுக்குள் புவனாவும் சந்தோஷித்துக் கொண்டாள்.

 

ஆனால், அவர்கள் இருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாய் அந்த செய்தி வந்தது. "ஸாரி... மிஸ்டர் முருகன்... எங்களால் உங்க பொண்ணைக் காப்பாற்ற முடியல!" டாக்டர் கை விரித்தபடி நகர

 

இருவரும் உச்சஸ்தாயில் அழுதனர்.

 

புவனா ஜோதிடரை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித் தீர்க்க, பற்களை "நற...நற"வென்று கடித்த முருகன், "அடேய் ஃப்ராடு ஜோதிடா.... இருடா உன்னை வெச்சுக்குறேன்" 

 

இடுகாட்டில், காத்திருந்த குழிக்கு அருகில் சிறுமி உதயாவின் சவம் சடங்குகளுக்காக காத்திருந்தது.

 

 சாவுக்கு வந்திருந்த ஜோதிடர் சற்றுத் தள்ளியே நின்றிருந்தார்.

 

 புவனாவும் முருகனும் ஆற்ற மாட்டாத கோபத்தோடு அவரை அவ்வப்போது முறைக்க,

 

 சமமாய்க் கிடந்த உதயாவின் தலை அசைந்தது.

 

அடுத்தபடியாய் கண்களை திறந்து சுற்றி இருந்தவர்களைப் பார்த்து அவள் "மலங்க... மலங்க" விழித்தாள்.

 

முருகனும் புவனாவும் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு ஜோதிடரைப் பார்க்க, மெலிதாய்ப் புன்னகைத்தவர், கைகளை மேலே தூக்கி வானத்தைக் காட்டினார்.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோயமுத்தூர்.