எனக்கு இளங்கோவின் அப்பாவை நினைக்கையில் கோபமே வந்தது.
காரணம்?... அவருக்கு ஜோதிட ஜாதக சாஸ்திர சம்பிரதாயங்களில் எக்கச்சக்க நம்பிக்கை.
ஆறு மாசத்துக்கு முன்னாடி ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு சாமியாரை சந்தித்து இளங்கோவின் எதிர்காலம் குறித்து விசாரித்திருக்கிறார். அந்த சாமியாரோ, "பெரியவரே உங்க ஜாதகமும் உங்க மகன் ஜாதகமும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாத ஜாதகங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் மகன் மரணமடைவான்"னு புளுகை அள்ளி வீச,
அவ்வளவுதான் நேரே சொந்த கிராமத்திற்கு சென்று, பழைய வீட்டில் தனியாய் வாழலானார்.
"அந்தச் சாமியார் பேர் என்ன?" இளங்கோவிடம் கேட்டேன்.
"புலிப்பாணி முனிவர்" என்றான்.
****
இளங்கோவின் அப்பா இருக்கும் கிராமத்திற்குச் சென்று, அவரைச் சந்தித்தேன்.
"ஐயா நான் கோயம்புத்தூரில் இருந்து வரேன் இளங்கோவோட சினேகிதன்"
"தம்பி எப்படி இருக்கான் என் மகன்? எனக்கு எந்நேரமும் அவன் நினைப்புதான் தம்பி!... அவனைப் பார்க்கணும்..பேசணும்னு மனசு தவிக்குது ஆனா பாழாய் போன ஜாதகம் தடுக்குது" என்றார் கவலையோடு.
"ஐயா... யாரோ ஒரு சாமியார் வயத்து பிழைப்புக்காக எதையோ சொல்ல அதையே நம்பிகிட்டு".
"அப்படிச் சொல்லாதப்பா... புலிப்பாணி முனிவர் கடவுளோடு அவதாரம் அவர் வாக்கு ஆண்டவன் வாக்கு".
" அப்படியா?... இதைக் கொஞ்சம் பாருங்க" தோள் பையிலிருந்து அந்த செய்தித்தாளை எடுத்து நீட்டினேன்.
"போலிச் சாமியார் கைது புலிப்பாணி முனிவர் என்ற பெயரில் திரிந்த புரட்டு சாமியாரை காவல்துறை கைது செய்தது... பொய்யான தோஷங்களைக் கூறி மக்களை ஏமாற்றி பணத்தையும் நகைகளையும் கவர்ந்துள்ள இவன் வலையில் சிக்கி கற்பை இழந்த பெண்களும் ஏராளம்"
படித்து முடித்த பெரியவரிடம் புலிப்பாணி முனிவரின் புகைப்படத்தை காட்டி, "ஐயா இந்த சாமியார் தானே?".
மேலும் கீழும் தலையாட்டிய பெரியவர் சட்டென எழுந்து, " நான் உடனே என் மகனைப் பார்க்கணும்" என்றார்.
அடுத்த இருபதாவது நிமிடம், பேருந்தில் நானும் பெரியவரும் அருகருகே அமர்ந்திருந்தோம்.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை