சென்னை,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதான அலுவலகத்திற்கு பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த இமெயிலில், “ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக ஐபிஎல் போட்டி நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும். ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.