tamilnadu epaper

கண்டிஷன்

கண்டிஷன்

 

திருமண தரகர் தங்கசாமிக்கு அவர் ஏரியாவில் நல்ல மவுசு.

மிகவும் நேர்மையானவர்.

காசுக்கு ஆசைப்பட்டு தப்பான ஆட்களுக்கு துணை போகாதவர்.

 

மாப்பிள்ளை பெண் பற்றிய தகவல்களை பொறு த்தவரை அவராகவே விசாரித்து அறிந்து அவருக்கு திருப்தியானால் தான் செயலில் இறங்குவார்.

 

அவரும் ஒரு அருமையான பையனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்,

இதுவரை அமையவில்லை.

பையன் முதுகலை இன்ஜினியரிங் படித்திருக்கிறான்.

 

வேலைக்கு போகாமல் சொந்த கிராமத்தில் சொந்த நிலம் 30 ஏக்கரில் விவசாயம் செய்து கொண்டு ஓஹோ என்று இருக்கிறான்.

 

கண்ணுக்கு அழகாய் இருப்பான், அவன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஒரு தங்கை மாத்திரம் இருக்கிறாள்.

 நல்ல அறிவாளி. மாத வருமானம் என்று பார்த்தால் விவசாயத்திலிருந்து மாதம் குறைந்தது 10 லட்ச ரூபாய் கிடைக்கும். ஐந்து பம்பு செட்டுகள் மூன்று டிராக்டர்கள் இருக்கிறது.

 

கந்தசாமி பிள்ளையின் மகள் கமலாவின் ஜாதகத்துடன் பத்து பொருத்தங்கள் ஒத்து போகிறது. கமலாவுக்கு இதுவரை பத்து பதினைந்து வரன்களை சொல்லிவிட்டார். எதுவுமே பெண்ணின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை.

 

எதற்கும் கடைசியாக பார்த்து விடுவோம் என்று இந்த பையனின்  ஜாதகத்தை அவர்களிடம் காட்டினார். அவனைப் பற்றிய தகவல்களையும் சொன்னார்.

 

" வாழப் போறவ என் பொண்ணுதானே ! அவளுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம். கமலா கிட்ட விவரத்தை எல்லாம் சொல்லுங்க....."

 

என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு

கடைக்குப் புறப்பட்டு விட்டார் கந்தசாமி.

 

"என்ன தான்

உன் எதிர்பார்ப்பும்மா ? "

என்று கமலாவிடம் கேட்டார்.

 

 படிப்பு போட்டோ எல்லாம் ஓகே. ஆனால் வேலை இல்லைன்னு சொல்றீங்க.

விவசாயம் பாக்குற ஒரு கிராமத்தானுக்கு நான் கழுத்தை நீட்ட தயாரா இல்லை.

 

என்னோட கண்டிசனை புரிஞ்சுக்கோங்க. மாப்பிள்ளை என்னை விட ரெண்டே வயது தான் மூத்தவரா இருக்கணும்.

நல்லா படிச்சவராகவும் மாசம் இரண்டு லட்ச ரூபாய்க்கு குறையாம சம்பளம் வாங்குறவராகவும் இருக்கணும்.

 

பெரிய நகரத்தில் வேலை பார்க்கணும். சொந்தமா ரெண்டு அல்லது மூன்று கோடி ரூபாய்க்கு அப்பார்ட்மெண்ட்டோ அல்லது வில்லாவோ இருக்கணும். அவர் கூட பொறந்த பொண்ணுங்க யாரும் இருக்கக்கூடாது.

வீட்டுக்கு ஒரே பிள்ளையா இருந்தா ரொம்ப நல்லது.

 

கமலாவின் கண்டிஷன்களை கேட்ட தங்கசாமிக்கு தலை சுற்றியது.

 

                  ******

 

ஐயா,

இது என் சொந்த கற்பனை என்றும் வேறு எந்த பத்திரிக்கைக்கு அனுப்பவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.

          

               ******

வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர்