வானம் ஆட்களின்றித் தானே வெள்ளையடிக்க முயல இரவு பெருந்தன்மையாக விடை கொடுத்ததில்
புதிய நாள் உதயமாயிற்று.
அலுவலக நேரமானதால் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது. பீம்....பீம் என்று தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே வந்தான் அருண்மொழி. தனக்கு நேரமாகிவிட்டது என்பதைக் காட்டிலும் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் கதவு சரியாக மூடாதது அவனை உறுத்திக் கொண்டே இருந்தது. எப்படியாவது விஷயத்தைச் சொல்லி விட வேண்டுமென்று தொடர்ந்து ஒலி எழுப்பியபடியே பின் தொடர்ந்தான். முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஓரமாக நின்றது ஓரளவு ஆறுதலாக இருந்தது.
முன்னால் நின்று கொண்டிருந்த காரிலிருந்து இறங்கியவன் ஒலி எழுப்பிக்கொண்டு தொடர்ந்து வந்தது எரிச்சலானதால் இவனை அதட்டுவதற்காக நிறுத்தி இருந்தது பின்னர் தான் தெரிந்தது.
கத்தத் தொடங்கியவனிடம் காரின் கதவு சரியாக மூடாததைச் சொன்னான்.
உண்மையான சூழ்நிலையைப் புரிந்து கொண்டவர்கள் அருண்மொழியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றனர்.
அதிகாலைப் பரபரப்பில் தன்னுடைய கடமைகளை முடித்து, தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கும் மகனுக்கு ஜுஸ் மற்றும் உணவு வகைகளை டேபிளில் எடுத்து வைத்து மறக்காமல் சாப்பிடச் சொல்லிவிட்டுத் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவனுக்கு
கார் சாவியை மறந்தது தெரிய வர அதை எடுப்பதற்கு வீட்டிற்குள் சென்றதில் இன்னும் பத்து நிமிடம் தாமதம்.
நொந்து கொண்டே வாகனத்தை விரட்டினான். நேராகச் சென்றால் நேரம் மிச்சமாகும்தான் ஆனால் டோல் கேட்டில் நூறு ரூபாய் தண்டம்.
யோசித்தபடியே வர முன்னால் சென்று கொண்டிருக்கும் காரின் கதவு நன்றாக மூடவில்லை என்பதைக் கண்டு ஒலி எழுப்பியபடியே தொடர்ந்தான். அப்பொழுது நடந்தது தான் இது.
இவ்வளவு தொல்லைகளுக்கிடையில் நல்லது செய்ய நினைத்தது தவறோ என ஒரு நிமிடம் எண்ணினான்.
கதவோரத்தில் கைக்குழந்தையுடன் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணுக்கு காரின் வேகத்தில் கதவு திறந்திருந்தால் என்னவாயிருக்கும் என்று எண்ணியவன் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன? நாம் சரியாகத்தானே செய்தோம் என்று எண்ணியவனாகத் திருப்தியோடு தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்றான்.
***************************
தமிழ்நிலா