பால்யா என்ற வேடன் உயர்ந்த ஞானியாக மாறினான்.
பால்யா தன் வாழ்க்கையில் இரண்டு வகை காரியங்களைத்தான் செய்து கொண்டிருந்தான். தன் முன்னால் எதிர் படும் மிருகங்களைக் கொள்வான். அதைச் சுட்டுத் தின்பான். இதுதான் அவன் வாழ்க்கை.
ஒரு நாள் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்குக் கிளம்பினான். தன் எதிரில் சிறிதும் பயமில்லாமல் தம்புராவை மீட்டிக் கொண்டு, " நாராயணா! நாராயணா! என்ற மகா மந்திரத்தை ஓதிக் கொண்டு ஒருவர் வருவதைப் பார்த்தான்.
அவரைக் கொல்வதற்கு வில்லில் நாணை ஏற்றி அவரைக் குறிப் பார்த்தான்.
அந்த மனிதரோ ஒரு சிறிது கூட பயப்படாமல் அமைதி குலையாமல் பரிவும் கருணையும் பொங்கும் பார்வையுடன் அவனை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார். அவருடைய விரல்கள் தம்புராவை மீட்டிக் கொண்டு இருக்கின்றன. வாய் " நாராயணா! நாராயணா!" என்ற மகா மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இருக்கிறது.
பால்யா தன் வாழ்நாளில் இத்தகைய காட்சியைக் கண்டதே இல்லை.
அவனையும் அவன் கையில் இருக்கும் வில்லையும், அம்பையும் பார்த்தால் பயந்து ஓடும் பிராணிகளைத்தான் அவன் இது நாள் வரை பார்த்து இருக்கிறான். இல்லா விட்டால் தன் மீது பாய்ந்து தன்னைக் கொல்ல வரும் கொடிய பிராணிகளைத்தான் பார்த்து இருக்கிறான்.
ஆனால் நாரதரோ அமைதியாக அன்பு ததும்பும் பார்வையுடனும்,கருணை பொங்கும் குரலுடனும் நாராயண மந்திரத்தை ஓதிக்கொண்டு அவனிடம் சிறிதும் பயமில்லாமல் அவனிடம் சிறிதும் பயமில்லாமல் வந்து கொண்டு இருக்கிறார்.
பால்யாவினால் தன் கையில் இருக்கும் வில்லில்பூட்டிய நாணை இழுத்து அவர் மீது அம்பை விட முடிய வில்லை. அவரைப் பார்த்து வியந்து போய் நிற்கிறான்.
" உன் அம்பு ஏன் நின்று விட்டது பால்யா? "
என்று அன்பு ததும்ப கேட்கிறார் நாரதர்.
" தங்கள் அமைதியைப் பார்த்து. "
நாரதருடைய அன்பும் அமைதியும் கொடிய வேடனின் தன்மையை மாற்றி விடுகிறது. இது எப்படி அவரால் முடிந்தது?
நாரதர் பால்யாவைத் துஷ்ட குணமுள்ள, கொடிய வேடனாக பார்க்க வில்லை. அவனையும் நாராயணனாகவே பார்க்கிறார். அவன் உள் இருந்து அவனை இயக்கும் இறைவனை அவனிடம் அவர் கான்கிறார்.
இந்தக் கொடிய வேடனுக்கு நாராயண மந்திரத்தை உபதேசிக்கிறார்.
அவரை மகாத்மாவாக உயர்த்தி விடுகிறார்.
அந்தப் பால்யா என்னும் வேடன்தான், அழியாத இலக்கியத்தைப் படைத்த உலக மகா காவியமாகிய இராமாயணத்தை உருவாக்கிய மகான் வால்மீகி.
தகவல்
M. ராதாகிருஷ்ணன்
அஞ்சல் துறை ( ஓய்வு )
வளையாம்பட்டு போஸ்ட்
வாணியம்பாடி -635751