tamilnadu epaper

காசியில் 12 சூரியக் கோயில்கள்!*

காசியில் 12 சூரியக் கோயில்கள்!*

*காசியில் 12 சூரியக் கோயில்கள்!*

 

கண்கண்ட தெய்வமான சூரியனுக்கு 12 கோவில்கள் காசி நகரில் உள்ளன. பழமையான இந்தக் கோவில்கள் புராண வரலாற்றுடன் தொடர்புடையவை.

 

* பகீரதன், தன் முன்னோர்கள் நற்கதி பெற தவம் செய்து, பூலோகத்திற்கு கங்கை நதியை வரவழைத்தான். கங்கை பூமிக்கு வந்ததை அறிந்த சூரியன் இங்கு வந்து அதை வழிபட்டார். அவர் வழிபட்ட லலிதாகாட் படித்துறை அருகில் கங்காதித்யர் என்னும் சூரியக்கோவில் கட்டப்பட்டது.

 

* கஷ்யப மகரிஷியின் மனைவி வினதை முட்டைகள் மூலம் குழந்தை பெற்றாள். முதல் முட்டையில் ஆந்தையும், இரண்டாவது முட்டையில் அருணனும், மூன்றாவது முட்டையில் கருடனும் தோன்றினர். இதில் ஆந்தையும், அருணனும் சூரியனை வழிபட்டனர். இதன் மூலம் ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாகும் பாக்கியத்தைப் பெற்றது. அருணன் சூரியனின் தேரோட்டும் சாரதியாகும் பேறு பெற்றார். காசி திரிலோசனர் கோவிலில் அருணன் வழிபட்ட சூரியன் அருணாதித்யர் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார்.

 

* கிருஷ்ணரின் மகன் சாம்பன் தொழுநோய்க்கு ஆளாக நேர்ந்தது. அவன் பட்ட துன்பம் கண்ட கிருஷ்ணர், விமோசனமாக சூரியனை வழிபடும்படி அருள்புரிந்தார். காசிக்கு வந்த சாம்பன் அங்குள்ள சூரியனை வழிபட்டு குணம் அடைந்தான். சாம்பன் வழிபட்ட சூரியன் 'சாம்பாதித்யர்' எனப்படுகிறார்.

 

* கருடன் தன் தாய் வினதையுடன் சூரியனை வழிபட்டு அளப்பரிய பலம் பெற்றார். அதன் விளைவாக விஷ்ணுவின் வாகனமாகும் பேறு கிடைத்தது. தாயும் மகனும் வழிபட்ட சூரிய பகவானை 'சுஷோல்கா ஆதித்யர்' என்று அழைக்கின்றனர். காசியிலுள்ள திரிலோசனர், காமேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இந்த சூரியனுக்கு சன்னிதி உள்ளது.

 

* தொழுநோயால் அவதிப்பட்ட விமலன் என்ற மன்னன், முனிவர்களுடன் ஆலோசனைப்படி சூரிய பகவானை வழிபட்டான். அவனுக்கு காட்சியளித்த சூரியன், 'இனி உன் வம்சத்தில் யாருக்குமே தொழுநோய் வராது' என அருள்புரிந்தார். காசியில் கதோலியா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜங்கம்பாடியில் இவருக்கு கோவில் உள்ளது. இவருக்கு 'விமலாதித்யர்' என்று பெயர்.

 

* சூரியனின் மகன் எமதர்மன் தன் சக்தியைப் பெருக்க விரும்பி, சூரியக் கோவில் கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. 'எமாதித்யர்' என்னும் பெயரில் அருளும் இவருக்கு காசி சங்கடா காட்டில் கோவில் உள்ளது.

 

* சூரியன் அளித்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரவுபதி அனைவருக்கும் அன்னமிட்டாள். அவள் வழிபட்ட சூரியக்கோவில் காசியிலுள்ள அட்சயபீடத்தில் உள்ளது. இங்குள்ள சூரியனுக்கு 'திரவுபதிஆதித்யர்' என்று பெயர்.

 

* விருத்தன் என்னும் வேதியர், சூரியனை வழிபட்டதால் முதுமை நீங்கி மீண்டும் இளமை அடைந்தார். விருத்தன் வழிபாடு செய்த 'விருத்தாதித்யர்' காசியிலுள்ள மீர்காட்டில் கோவில் கொண்டிருக்கிறார்.

 

* மன சஞ்சலம், துன்பத்தை தீர்த்து வைப்பவர் என்பதால் சூரியனை 'லோலார்க்கர்' என்று அழைப்பர். காசியிலுள்ள அதிசங்கமத்தில் இவருக்கு கோவில் உள்ளது. இங்குள்ள லோலார்க்க குண்டம் என்னும் குளம் புகழ்மிக்கது.

 

* காசிக்கு வடக்கிலுள்ள 'அலேம்புரா' என்னும் இடத்தில் உத்திர அர்க்க குண்டம் என்னும் சூரியதீர்த்தம் உள்ளது. வக்ரியா குண்டம் என்றும் இதைக் கூறுவர். இந்த தலத்தில் ஒரு ஆடும், ஒரு பெண்ணும் தவமிருந்து சூரியனின் அருளைப் பெற்றனர். இங்குள்ள சுவாமிக்கு 'உத்திர அர்க்கர்' என்பது பெயர்.

 

* காசியிலுள்ள வருணா சங்கமத்தில் சூரியன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக காசி காண்டம் கூறுகிறது. திருமாலான கேசவனின் அருளால் அமைத்த சிவலிங்கம் இங்குள்ளது. இங்கு அருள்புரியும் சூரியன் 'கேசவாதித்யர்' எனப்படுகிறார்.

 

* கங்கைக்கரையிலுள்ள பஞ்ச கங்கா காட் அருகில் மயூகாதித்யர் என்னும் சூரியக்கோவில் உள்ளது. புராண காலத்தில் சூரியன் இங்கு கபஸ்தீஸ்வரர், மங்களகவுரி என்னும் பெயரில் சிவபார்வதியை பிரதிஷ்டை செய்து லட்சம் ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டார். மனம் இரங்கிய சிவன் சூரியனுக்கு 'மயூகன்' (என்றும் அழியாதவன்) என்று பெயர் சூட்டினார். காசிக்கு சென்றால், காசி விஸ்வநாதரை தரிசிப்பதோடு அங்குள்ள சூரியக் கோவில்களையும் வழிபட்டால் சகல நலமும் பெறலாம்.

 

 

Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

7358228278