சரிம்மா சுரத்தே இல்லாமல்" />

tamilnadu epaper

காத்திருப்பு

காத்திருப்பு

காலையில் அவசர அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தாள் கவிதா.

 

"கவிதா... இன்று மதியம் பெர்மிஷன் போட்டுவிட்டு வா சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க மறந்திடாதே...என்றாள் அம்மா.

 

சரிம்மா சுரத்தே இல்லாமல் கூறினாள் கவிதா.

 

எத்தனை வருடங்களாக இந்த பெண் பார்க்கும் படலம்?

எத்தனை மாப்பிள்ளைகள் பார்த்தாகிவிட்டது? 

வருபவர்கள் எல்லாம் மாப்பிள்ளை பேறுகாலத்தில் இருந்து ஆன செலவைக் கேட்டால் என்ன செய்வது?

 

நமக்கும் வயதாகிக் கொண்டே போகிறது.

வரும் மாப்பிள்ளைகளும் வாயில்லா பூச்சிகள்... இவைகள் தான் அவள் சலிப்புக்கு காரணம். 

 

மதியமே வீட்டிற்கு வந்து விட்டாள் கவிதா.

 

அம்மா என்னவோ கல்யாண வீடு போல பரபரப்பாக இருந்தாள்.

 

கல்லூரி முடித்து வேலைத் தேடிக் கொண்டிருக்கும் தம்பி ரகுவை அம்மா கூப்பிட்டு...

 

டேய் ரகு...

நீ போய் நம்ம கணேஷ் ஸ்வீட்ஸ் இல் பாதுஷாவும், ரத்தினம் கடையில் காஃபி தூளும்,நமது சிவா கடையில் பாலும், அண்ணாச்சி காய்கறி கடையில் நாலு வாழைக்காயும் வாங்கிக் கொண்டு வா.

காரத்திற்கு நாம சுடச்சுட பஜ்ஜி போட்டு வைத்து விடலாம் என்று பையையும் ,பணத்தையும் கொடுத்தாள்.

 

சரி அம்மா என்று கூறி கிளம்பிய ரகுவை...

 

வீட்டின் முற்றத்தில் ஏதோ வேலை பார்ப்பது போல் நின்று கொண்டிருந்த கவிதா 'ரகு... இங்கே வா என்று கூப்பிட்டு 

இதை வாங்கிக் கொண்டு வந்து அம்மாவுக்கு தெரியாமல் என்னிடம் கொடு...

என்று ஒரு தாளையும் ரூபாயையும் அவன் கைகளில் திணித்தாள்.

 

சரிக்கா என்று வாங்கிக் கொண்டு வெளியில் சென்று சீட்டில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்தான்.

 

அவன் கண்களில் நீர் கசிந்தது. பாவம் அக்காவும் எவ்வளவு நாள் தான் காத்திருப்பாள்?

 

சீட்டில் "கோத்ரேஜ் ஹேர் டை ஒரு பாக்கெட்" என்று எழுதியிருந்தது.

 

கவிஞர் க.மோகனசுந்தரம்

ஊரப்பாக்கம்