ஏய்......... நான் உன்னைப் புடிச்சிட்டேனே! நான் தான் ஜெயிச்சேன் என்று மழலையாய்
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் குரல் கேட்டு கனவுகளிலிருந்து நிஜத்திற்கு வந்தாள் நித்யா.
தானும் இப்படிக் குழந்தையாகவே இருந்திருக்கலாமோ? கவலைகள் எதுவுமின்றிப் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகளாய் அந்தப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்து எண்ணிக் கொண்டாள்.
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்...... பாடல் வரிகள் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. கனவுகளில் எதுவும் வரலாம். நினைவுகள் தானே கைவசம். ஏக்கத்தில் வெளியில் வீசும் காற்றை விட மூச்சுக்காற்று உஷ்ணமாய் வந்தது.
ரவி என்ன பதிலோடு வருவான் என்ற எதிர்பார்ப்பும் ஒரு விதப் பதட்டத்தை அவளுள் உண்டு பண்ணியது.
ஹாய்! டார்லிங் என்றபடியே வந்தான் ரவி.
வாங்க ரவி என்றபடியே சிமெண்ட் தளத்தில் அவன் உட்கார இடம் தந்து இடைவெளி விட்டு நகர்ந்தாள்.
சுற்றிலும் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையும் பேசிக் கொண்டிருந்த பெரியவர்களையும் அவனும் ஒரு நிமிடம் உற்று நோக்கினான். அவளுக்கு ஓடிய அதே எண்ணங்கள் அவனுக்கும் ஓடியது.
எதிர்பார்ப்போடு இருக்கும் இவளிடம் என்ன பதில் சொல்வது? எப்படித் தொடங்குவது என்று தடுமாறினான்.
என்ன ரவி யோசிக்கிறீங்க? அம்மா என்ன சொன்னாங்க? என்றாள்.
அது வந்து..... என்று இழுத்தான்.
ரவி! ப்ளீஸ்.... எதுவானாலும் சொல்லுங்க.
அம்மாக்கு விருப்பமில்லை என்பதை எப்படிச் சொல்வது?
மூன்று வருடங்களுக்கு முன் நித்யாவைச் சந்தித்தது இவனுக்கு நினைவில் இருந்தது. ஏதேச்சையாக ஒரு நாள் பஸ்சுக்குக் காத்திருக்கும் பொழுது
பஸ் ஸ்டாப்பில் சந்தித்தான். இனம் புரியாமல் அவள் மேல் ஒரு ஈடுபாடு வர எந்த எண்ணமும் இல்லாமல் இருந்த அவளுக்குள் அன்பை விதைத்தான். இவளுக்குள் அவன் மேலான அன்பு பல மடங்கு பெருகியது.
ஒருமுறை அவனுடைய அம்மாவிற்கு ரத்தம் தேவைப்பட பழகிய கொஞ்ச நாட்களிலேயே மறு பேச்சின்றித் தானே முன்வந்து ரத்தம் தந்தாள்.
தேவைப்படும் பொழுதெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காது கணக்கின்றிப் பணம் தந்தாள்.
அவனுக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது முழுவதுமாகக் கவனித்தாள்.
ரவி! என்ற குரலுக்கு நினைவிலிருந்து மீண்டு.... வீட்டில் இருப்பவர்களை விட தன் மேல் அன்பு செலுத்தும் இவளை அம்மாவின் பதிலைச் சொல்லி எப்படி மறுப்பது?
இவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?
சிந்தித்தவன் தனக்குத்தானே முடிவெடுத்தான். இவன் வேலையில்லாமல் இருந்த பல நாட்களில் மனக்கவலைகளுக்கு மயிலிறகால் மருந்திட்டவள் அவள்.
அம்மாவின் பேச்சால் இவளை இழக்க முடியாது. ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் நீ வீட்ல பேசி தேதி முடிவு பண்ணு நித்யா என்றவாறே எழுந்தான். இவள் தன் மேல் வைத்திருக்கும் அன்பை இழக்க விரும்பாதவனாக அம்மாவைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.
ரவி......கண்களில் நீரோடு எழுந்தாள்.உங்க சூழ்நிலை எனக்குப் புரியுது.எனக்காக எதுவும் முடிவு பண்ணாதீங்க என்றவளின் கைகளை மென்மையாகப் பிடித்து நான் இருக்கிறேன் என்று கிளம்பினான்.
தனக்காக இவன் எவ்வளவு போராடுவான் என்று எண்ணும்போதே மகிழ்ச்சியில் இதயம் நிறைந்தது. காதலின் வலிக்கு அன்பை மருந்தாக்கித் தந்ததை உணர்ந்தாள்.
அன்பு உண்மையானால் தேர்வின்றி மதிப்பெண் பெறுவது சுலபம் என மனம் நிறைந்தது.
********************************
தமிழ்நிலா