tamilnadu epaper

காலை ஏழரை மணி

காலை ஏழரை மணி

 

,

 

 கண்விழித்ததுமே அந்த செய்திதான் மோகனுக்குக் கிடைத்தது. 

 

யாரோ ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டதற்காக ஊர் முழுவதும் கடையடைப்பாம். பஸ் இல்லையாம். ஆட்டோ ஓடாதாம். 

 

அவசர அவசரமாய் அறைத் தோழர்களை எழுப்பி விசயத்தை சொல்ல, எல்லோருமே உடனே வெளியே கிளம்பினர்.

 

பாவம் ஒரு டீ குடிக்க கூட முடியாத நிலை.

 

அடுத்த தெரு... அடுத்த தெரு... என்று அந்த ஏரியாவில் உள்ள எல்லா தெருவுக்கும் சென்று பார்த்தனர்.

 

எங்கும் சிங்கிள் டீ கூட கிடைக்கவில்லை.

 

"என்னப்பா டீக்கே இப்படி இழுபறியா இருக்கு... இன்னிக்கு டிபன் லன்ச் எல்லாம் கோவிந்தாதானா?" அழுது விடுபவன் போலானான் குமார்.

 

சொற்ப ரன்னில் அவுட் ஆகி திரும்பும் பேட்ஸ்மேன்கள் போல மீண்டும் அறைக்கே வந்தனர்.

 

இறந்து போன அந்த அரசியல் தலைவரை திட்டி தீர்த்தான் மோகன்.

 

 பட்டினியாவே காலை நேரம் கழிந்தது.

 

  "யப்பா... இதுக்கு மேல என்னால தாங்க முடியாது" மோகன் வயிற்றை பிடித்துக் கொண்டு கதறினான்.

 

 மாலை 4 மணி கொலைப் பட்டினியில் சுருண்டு கிடந்தனர் அவர்கள் ஐவரும்.

 

அப்போது கதவு தட்டப்பட, தள்ளாட்டமாய் எழுந்து போய்த் திறந்தான் மோகன்.

 

 திருநங்கைகள் நான்கு பேர் கையில் பாக்கெட்டோடு நிற்க, "என்ன? கேட்டான்.

 

  "சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக்கங்க" என்றாள் ஒருத்தி.

 

  "எவ்வளவு?"

 

  "சும்மா... ஃப்ரீ தான்... எங்க சங்கத்து சார்புல இந்த ஏரியாவுல... மேன்சன்ல தங்கி இருக்கிற பேச்சிலர் பசங்களுக்கு இன்னிக்கு இலவசமா உணவு சப்ளை பண்றோம்"

 

மோகன் தயங்க,

 

  "வாங்கிக்கங்க சார்" என்றாள் இன்னொருத்தி 'கர...கர' குரலில். 

 

இதற்குள் மற்ற நண்பர்களும் எழுந்து வர, "எத்தனை பேர் இருக்கீங்க?" கேட்டாள் ஒருத்தி.

 

பதில் பேசாமல் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, 

 

 "என்னப்பா?... என்ன ஆச்சு?... ஏன் தயங்குறீங்க?".

 

  "அது வந்து.... போன வாரம்... நீங்க இந்த தெருவுக்கு வந்திருந்தப்போ... நாங்க.." இழுத்தான் மோகன்.

 

  "அய்யய்ய அதை இன்னும் மறக்கலையா நீங்க?.. விடுங்க சார் அதெல்லாம் ஒரு விஷயமா... நீங்க பண்ணின கிண்டல் கேலியை விட அதிக கிண்டல்களை நாங்க பார்த்திட்டோம்!" என்றபடி அவளே ஐந்து பொட்டலங்களை எடுத்து அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு வெளியேற.

 

தலை குனிந்தனர் மோகனும் அவன் நண்பர்களும்.

 

சென்ற வாரம் இதே நான்கு திருநங்கைகளை இதே தெருவில் வைத்து படுபடு ஆபாசமாய் கேலி செய்ததும், அதை பார்த்து தெருவில் சென்று கொண்டிருந்த அத்தனை பேரும் சிரித்து மகிழ்ந்ததும் அவர்கள் ஞாபகத்தில் வந்து போக.

 

அவர்கள் விழியோரம் அனிச்சையாய் ஈரம் கசிந்தது.

 

 "டேய்.. இனிமேல் நாம எந்தக் காரணத்தைக் கொண்டும் திருநங்கைகளை கேலி செய்யக்கூடாது!" என்றான் மோகன்.

 

  "ஆமாம்டா... நம்ம பசியை அறிந்து... நம்மைப் பெத்த அம்மாக்கள் மாதிரி நமக்காக அவங்க சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுக்குறாங்கன்னா... அவங்களைக் கையெடுத்துக் கும்பிடணும்டா நாம".

 

முற்றும்.

-----

முகில் தினகரன், கோயம்புத்தூர்.