சென்னை, ஏப். 25–
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், கலைஞர் பல்கலைக்கழகம் விரைவில் ஏற்படுத்தப்படும்,’’ என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று, ‘காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு உள்ளது போல, கருணாநிதி பெயரில் பல்கலை அமைக்க வேண்டும்’ என, காங்கிரஸ், வி.சி., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து மேலோங்கி, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக உள்ளன. உலக அளவில் இன்றைக்கு பாராட்டக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.
நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்த கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்கு காரணமாக, பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக, கலைஞர் விளங்கி கொண்டிருக்கிறார்.
அப்படி கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டு, பல்வேறு திட்டங்களை உருவாக்கி, பல்கலைகளுக்கு எல்லாம் பல்கலையாக விளங்கி கொண்டிருக்கும் கலைஞர் பெயரில் , விரைவில் அவர் பிறந்த, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதை எவ்வித தயக்கமும் இன்றி, நான் அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் அறிவித்தார்.