திரிகூட ராசப்ப கவிராயர் எழுதிய அற்புதக் காவியம் குற்றாலக் குறவஞ்சி ஆகும். இயற்கை எழிலின் தோற்றத்தை அதற்கேற்ற குணத்தில் பாடல் வரிகளாக புனைந்து எழுதுவதில் திரிகூட ராசப்ப கவிராயருக்கே உண்டான திறமை எனச் சொல்லலாம். ஆறு நடந்து வருவதைப்போல அழகிய பாடல் வரிகள் அந்தக் காவியம் முழுவதும் நம் நெஞ்சைக் கொள்ளையிடுகின்றன.... குற்றாலக் குறவஞ்சியில் ஒரு பாடலை அவர் எழுதுகையில் …..
’ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி’
என்ற வரிகள் அனைவராலும் போற்றப்படுகின்றவை .
“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே.
ஒடுங்கிக் கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே.
வாடி இளைத்திருக்கக் காண்பது பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது என்றால் தொடர்ந்து முத்துக்களை ஈனும் சங்கு மட்டுமே. நிலத்தில் போடுவது நெல்விதைகளை மட்டுமே.
புலம்புவது பெண்களின் கிண்கிணிச் சிலம்புகள் மட்டுமே.
இங்கு தேடுவது நல்லறத்தையும் புகழையும் மட்டுமே.
இப்படிப்பட்டது எங்கள் நாடு”.
நம் கவியரசர் கண்ணதாசன் இந்த வரிகளை ஒட்டி தமது கவித்திறத்தால் திரைஇசைப்பாடலாக்கி நமது நெஞ்சங்களைக் கொள்ளையிட்டுவிட்டார். அனைவரது உள்ளமும் உச்சரிக்கும் இந்தப் பாடல் வரிகளை.
‘ஊட்டி வரை உறவு’ (1967). படத்தில் குற்றாலக் குறவஞ்சியின் வரிகள் கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணத்தில் நமது நெஞ்சங்களைத் தழுவும்…..
‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக ’
…………….என்று தொடங்கும் அந்தப் பாடலின் இடையே,
‘ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு?
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக ‘
இன்னொரு திரைப்படம் வாழ்க்கை வாழ்வதற்கே ….இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார். ஒரு பாடலில்
“ ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம் “ என்னும் வரிக்கு ஏற்ப தமது வரிகளில்
‘ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
அசையக் காண்பது கன்னியர் உள்ளம்’
பிரதிபலித்திருப்பார். இலக்கிய வரிகளை நயமாக இசைக்கு ஏற்ப தக்க தருணங்களில் எடுத்தாளுவது கண்ணதாசன் அவர்களின் கை வந்தக் கலை என்றே கூறலாம். இவை மட்டுமல்ல அவர் கையாண்ட இலக்கிய நயம்மிக்க வரிகள் ஏராளம். எளிய பாமர மக்களும் இலக்கிய வரிகளை உச்சரிக்கும் வண்ணம் திரையிசைப் பாடல்களாக பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.
.முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம்