மஞ்சளா? சிகப்பா? என்று நமக்குப் புதிர் போட்டு அடங்கிக் கிடந்ததற்குப் பிறகு வாய்ப்புக் கிடைத்த போது எழக்கூடிய விஸ்வரூபமாய் நீல வானைக் கிழித்துக்கொண்டு சூரியக் கதிர்கள் தன்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த காலை வேளை.
அதிகாலை எழுந்ததிலிருந்து பவானிக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. தோழி வீட்டிற்குச் செல்லும் சந்தோஷம் அவள் உடல் முழுவதும் புதிய ரத்தத்தைப் பாய்ச்சியது.
சிறுவயதிலிருந்தே இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். பள்ளி, கல்லூரி என இருவரும் ஒன்றாகவே இருந்த நினைவுகள் இன்னும் அவள் மனதில் மாக்கோலமிட்டது.
இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஏற்பட்ட இடைவெளியை ஊடகங்கள் தான் இணைத்துக் கொண்டிருக்கிறது.
இதோ.... தோழியைப் பார்க்கக் கிளம்பி விட்டாள்.
அம்மா.... கிளம்பலாமா? டிரைவர் கேட்டபடியே அவள் கையிலிருந்த பைகளை வாங்கிக் காரினுள் வைத்தார்.
ம்.......போலாம்பா என்றபடியே காரினுள் ஏற மின்சாரத் தடையால் நின்ற இயந்திரம் மீண்டும் இயங்குவது போல நினைவுகள் வேகமெடுத்து நினைவுகளை மீட்டெடுத்தது.
அம்மா! நீங்க சொன்ன லொகேஷன் வந்திடுச்சு என்று சொல்லவும் இறங்கினாள்.
இவளை விடவும் ஆர்வத்தோடு தோழி வரவேற்றாள். இருவரும்
பழைய நிகழ்வுகளைப் பேசிக் களைத்தனர்.
மாலையில் பிள்ளைகள் வரவும் சிறிது நேரம் பேசிக்
கொண்டிருந்தாள்.
ராகுல்... டியூஷன் கிளம்பு என்று தோழி வரவும்
டியூஷனா? எதுக்கு?
நீ இவ்ளோ படிச்சிருக்க அவனுக்கு எதுக்கு டியூஷன் ?
அதை ஏன் கேக்கற? நல்லாப் படிச்சிட்டிருந்தான். என்னாச்சுன்னு தெரியல. நூத்துக்கு நூறு மார்க் வாங்கிட்டு இருந்த பையன் இப்போ பாஸ் பண்றதே கஷ்டமா இருக்கு. வேற வழி இல்லாம டியூஷன் வச்சிருக்கேன். கலகலப்பாக இருந்த அவளின் முகம் கவலையானது.
ஏன் திடீர்னு என்னாச்சு?
என்னன்னே தெரியல பவானி.
பாவம் பையன் கஷ்டப்படறானேன்னு ஸ்டடி ரூம்ல ஏசி போட்டுக் கொடுத்தேன். லேப்டாப்னு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தேன். அது மட்டுமில்ல ஆசையா அலெக்சா கண்ட்ரோல் வேணும்னு கேட்டான்னு அதையும் பண்ணிக் கொடுத்தேன்.ஆனா என்ன பிரயோஜனம்? என்று கவலையோடு முடித்தாள்.
நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத கீதா. அவனுக்கு விருப்பமா இந்த வசதிகள் செஞ்சு கொடுத்தது சரி ஆனா இப்ப செஞ்சது தப்பு.
என்ன சொல்ற பவானி? என்று திகைத்தாள்.
ஆமா! கீதா ..நாம படிச்ச காலத்தை நினைச்சு பாரு. ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்வோம். அப்போ மூளை சுறுசுறுப்பாக இயங்கிட்டே இருக்கும். படிச்சிட்டு இருக்குற ரூம்ல பயங்கரமா வேர்க்கும். கொஞ்ச நேரம் வெளியில் வந்துட்டு ஃப்ரெஷாயிட்டு மறுபடியும் போய் படிப்போம். அப்போ இன்னும் நல்லா படிக்க முடிஞ்சது.
உடம்பும் மனசும் சுறுசுறுப்பா இருக்கும் போது நம்ம ஆரோக்கியமும் நினைவாற்றலும் அதிகமாக வேலை செய்யும்.
ஆனா அதுக்கெல்லாம் வழியில்லாம எல்லாத்துக்கும் மெஷின நம்பினதால படிப்பு குறைஞ்சிடுச்சு. இதையெல்லாம் மாத்திப் பாரு கண்டிப்பா அவன் அதிகமா மார்க் வாங்குவான். நம்ம பண்ற பெரிய தப்பு என்ன தெரியுமா? கஷ்டம் தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கிறோம்னு சொல்றது. நல்லாப் புரிஞ்சுக்கோ கஷ்டப்படாமல் பிள்ளைகளை வளத்தலாம் ஆனா கஷ்டம் தெரியாம புள்ளைங்கள வளர்த்தக் கூடாது. எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தா வசதிகளை அனுபவிக்கத் தான் தோணும். படிப்புல கவனம் எப்படி வரும்?
பவானி சொல்றது சரிதானோ? என யோசித்து எலக்டீரிசியனுக்கு போன் செய்தாள் கீதா.
***************************
-தமிழ்நிலா