பொங்கல் விடுமுறை முடிந்தும் அந்த கிராமத்தில் தன் உறவினர்களை விட்டு பிரிய மனமின்றி பத்து வயது நிரம்பிய குழந்தை மீரா
"அம்மா எனக்கு நம்ம வீடு பிடிக்கல அங்க யாரும் என்னோட விளையாட வர மாட்டேன்றாங்க இங்க நிறைய அக்கா அண்ணா எல்லாம் இருக்காங்க" என தன் மனபாரத்தையும், ஏக்கத்தையும் இறக்கி வைத்தாள்.
மீராவின் அம்மா அகிலா தன் மகள் சொல்வது உண்மைதான் என்பதாய் மௌனம் கொண்டிருந்தாள்.
சென்னையில் அவசரப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நவநாகரீகம் எனும் பெயரில் அபார்ட்மெண்டில் குடியிருந்து என்ன கண்டோம்.
பல வருடம் அங்கிருக்கும் எவரும், எவரிடமும், பழகுவதும், பேசுவதும் அவ்வளவு சுலபமில்லை.
தினம் பள்ளிவிட்டு மீரா வீடு வந்ததும் தொலைக்காட்சியே கதியாய் இருப்பாள், சேர்ந்து விளையாட தன் வயதுடைய பிள்ளைகளை அப்பார்ட்மெண்டில் இருக்கும் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.
அதுவும் அங்கிருக்கும் மனிதர்கள் யாரையும் எளிதாய் நம்புவதுமில்லை பக்கத்து வீட்டில் கொலை விழுந்தாலும் என்ன ஏதென்று கண்டு கொள்ளாதவர்கள் தான் அதிகமாய் வசித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இவ்விருவரும் அங்கே வசிப்பது கடினமாய் இருந்தது வாழ்வு சோர்வையே பரிசாக தந்தது.
அகிலாவின் உயிருக்கு உயரான கணவனோ இன்றோடு கேன்சரில் இறந்து மூன்று வருடமாகிவிட்டது அவர் இருக்கும் வரை குழந்தை மீராவுக்கு எந்த கவலையும் கிடையாது.
அவளின் அப்பா பீச்சுக்கு, ரெஸ்டாரெண்டுக்கு, மால்க்கு, சினிமாவுக்கு கூட்டி செல்வார்.
அவர் இல்லாமல் மீராவுக்கு வீடு சிறைக்கூடமாயிற்று சென்னை வாழ்வு பிடிக்கவில்லை.
இப்பொழுதுதான் அகிலா இந்த அருமையான கூட்டு குடும்பத்தை விட்டு தனியாய் சிறப்பாய் வாழ தன் கணவனோடு சென்னை சென்றது எவ்வளவு தவறு என உணர்ந்தாள்.
கூட்டு குடும்பத்தில் சண்டை இருக்கும், சச்சரவு இருக்கும் அதே நேரத்தில் ஒற்றுமை, பாசப்பிணைப்பு, விட்டு கொடுத்தல் எனும் சிறப்புமிகு அன்பின் பிணைப்பும் இருக்கும் இதெல்லாம் யோசித்த அகிலா மீண்டும் தன் மாமனாரிடம்
"மாமா சென்னை போய் சிறைக்கூடமாய் நானும், மகளும் அங்கே வாழ்வதை வீட இங்கே உங்களோடு இருக்க விரும்புகிறோம்" என்றாள்.
எல்லோரும் மகிழ்வுடன் சம்மதிக்க மீரா ஏதோ சொர்க பூமிக்குள் நுழைந்ததை போல சந்தோஷப்பட்டாள்.
இவர்களுடன் அந்த பெரிய பண்ணை வீட்டின் தோட்டத்தில் சில மரங்களில் வசித்து வந்த கூட்டுப்பறவைகள் அவைகளின் பாஷையில் சிலாகித்தது.
கவிமுகில் சுரேஷ்
தருமபுரி