அண்ணனிடமிருந்து கடிதம் வந்ததிலிருந்தே கற்பனையில் மிதந்தேன். அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தில் 'சீஃப் எக்ஸிக்யூடிவ்”வாக இருக்கும் அண்ணன் ராகுல், அடுத்த வாரம் இந்தியா வரப் போகிறார்.
“சரி அதில் உனக்கென்னடா இத்தனை சந்தோஷம்?” என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகின்றது. அண்ணனுடன் அவரது செகரட்டரி “காத்ரீன்” என்னும் மணமாகாத இளம் வெள்ளைக்காரியும் வருகிறாளாம். இதற்கு நான் சந்தோஷப்படா விட்டால் நான் வாலிபனே இல்லை.
“எப்படி இருப்பாள் அவள்?... “எமி ஜாக்ஸன்” மாதிரி?... இல்லை நம்மூர் “ஹன்ஸிகா மோத்வாணி” மாதிரி?
வித விதமாய் ஜீன்ஸ்… டி-சர்;ட்… ஷூ... என வாங்கிக் குவித்தேன். அழகு நிலையம் சென்று தலை முடிக்கு வண்ணம் பூசினேன். அவளை வளைத்துப் போட வேண்டுமே?.
'டேய்… திவா… பயங்கர லக்குடா உனக்கு?… ஃபாரீன் ஃபிகர்;… ஹூம் அனுபவி” நண்பர்களின் பொறாமைப் பெருமூச்சு மகிழ்ச்சியைத் தந்தது.
அந்த நாளும் வந்தது… அண்ணனும் வந்தார்… உடன் அவளும் வந்தாள்.
காவி நிற சுடிதாரில், கழுத்தெங்கும் ருத்ராட்ச… ஸ்படிக…. துளசி… மாலைகளுமாய்…!
'திவாகர்... காத்ரீன் பயங்கர ஆன்மீகவாதி…. தியானம்… யோகா…ன்னு ரொம்ப சீரியஸ் டைப்!.. நம்ம நாட்டோட கலாச்சாரம்… ஆன்மீக விஷயங்கள்ல ஏக ஈடுபாடு…. பாடல் பெற்ற நம்ம நாட்டு ஆலய ஸ்தலங்களை பார்ப்பதற்காகவே இந்தியா வந்திருக்கா... நீதான் இவ கூடப் போயி கைடு பண்ணனும்”
என் மனக் கோட்டைகள் சரிய, அசுவாரஸியமாகத் தலையாட்டினேன்.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை