tamilnadu epaper

கொக்குபோல் இரு..

கொக்குபோல் இரு..


 கோமதியும் கயல்விழியும் நல்ல நண்பர்கள். திறமைசாலிகள். படிப்பிலும் படுச்சுட்டி. ஒரு நாள் வகுப்பறைக்குள் வந்த தலைமை ஆசிரியர் கயல்விழியை அழைத்து,...நம் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிகளை நீ தான் தொகுத்து வழங்கப் போகிறாய். அதற்கு ஏற்ப உன்னை தயார்படுத்திக் கொள் என்றார். கயல்விழிக்கு மிகவும் பெருமையாக இருந்தது. சக மாணவர்கள் அவளை பாராட்டினார்கள். கோமதியும் மகிழ்ந்து பாராட்டினாள். ஆனால் கோமதிக்கு உள்ளுக்குள் சிறு வருத்தம் இருந்தது. தலைமை ஆசிரியர் கயல்விழியை மட்டும் அழைத்தாரே...! நானும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளேனே... நானும் திறமைசாலி தானே.. என்னை ஏன் அவர் கூப்பிடவில்லை என்று மனதிற்குள் வருத்தப்பட்டாள்.

 இரவு உணவு அருந்த அம்மா அழைத்தார். அப்பொழுது எனக்கு மனது சரியில்லை... அதனால் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றாள் கோமதி.அம்மா ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டு கோமதியிடம் பேச்சு கொடுத்தார். கோமதி நடந்தவற்றையெல்லாம் கூறி அழுதாள். கயல்விழியைத்தான் ஆசிரியர் அழைத்தார். என்னை ஆசிரியர் அழைக்கவில்லை என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

 அதற்கு அம்மா... கோமதி... நான் சொல்வதை பொறுமையாக கேள். ஆசிரியருக்கு வகுப்பறையில் எல்லோருடைய பெயரும் தெரியும். தலைமை ஆசிரியருக்கு சிலரின் பெயர்தான் நினைவுக்கு வரும். அவளை அழைத்ததற்காக உன்னை விலக்கினார் என்று கொள்ளக்கூடாது. உங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதற்காகத் தான் வகுப்பறைக்கு வந்து எல்லோர் முன்னிலையிலும்... அவளிடம் ஆண்டு விழா நிகழ்ச்சி பற்றி கூறினார்.

 ஆண்டு விழா நிகழ்ச்சியினை அவள் தொகுத்து வழங்கி அவள் அதில் திறமையை வெளிப்படுத்தட்டும். நீ உன் திறமையை எவ்வாறு வெளிப்படுத்துவாய் என்று யோசி..

 நான் என்ன செய்ய முடியும் அம்மா.,? என்னை தான் அழைக்கவில்லையே.


 முதலில் பொறுமையாக இரு. நீ நன்றாக கவிதை எழுதுவாய்.,. பேசுவாய். ஏன் ? நீ ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உன் திறமையை வெளிப்படுத்தக் கூடாது என்றார்.

 என்னால் முடியாது., எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என எப்போதும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் பொறுமையாக ஒடுங்கிக் காத்து இரு. செயல்படும் நேரம் வரும்போது கொக்கு குறி தவறாமல் தன் இரையை குத்தி பிடிப்பது போல் செயலை செய்து முடிக்க வேண்டும்.

 அதனால் நீ வருத்தப்படுவதை விட்டுவிட்டு.. உனக்கான காலத்திற்கு பொறுத்திரு. அதற்குள் உன்னை தயார்படுத்திக் கொள். வாய்ப்பு வரும்போது கொக்கைப் போல விரைந்து உன் திறனை வெளிப்படுத்து என்று ஆலோசனை கூறினார்.

 அம்மாவின் சொற்களைக் கேட்டபின்,,கோமதி மனத் தெளிவடைந்து... நானும் ஆண்டு விழாவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பேசி...ஆசிரியர்கள் மனதில் இடம் பிடிப்பேன்...என்று கூறி அம்மாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.


 குறள் : கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 

 குத்தொக்க சீர்த்த இடத்து.


-முனைவர் உமாதேவி பலராமன்,

117 பைபாஸ் சாலை

 திருவண்ணாமலை-606601.

9486365350.