tamilnadu epaper

கொழுப்புக் கல்லீரல் - சில தீர்வுகள்.

கொழுப்புக் கல்லீரல் - சில தீர்வுகள்.

பொதுவாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். ஆனால், தற்போது மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் பிரச்சினை பரவலாக ஏற்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver) நோய். எதனால் இந்த நோய் ஏற்படுகிறது, அதிலிருந்து தப்பிப்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.


மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் கொழுப்பு கல்லீரல் நோய், நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்துவைக்கும் கல்லீரலுக்கு, ஒரு கட்டத்தில் அந்தக் கொழுப்பே எதிரியாகிவிடுகிறது. தற்போது இந்த நோய், Metabolic Dysfunction Associated Steatotic Liver Disease என்று அழைக்கப்படுகிறது. இந்திய இளைஞர்களில் 38 சதவீதம் பேருக்கு இந்த நோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


ஆரம்ப நிலையில் பெரிய அறிகுறிகள் தென்படாது. படிப்படியாக தீவிர அறிகுறிகள் தென்படத் தொடங்கும். குறிப்பாக, சோர்வு, வயிற்றின் மேற்புறத்தில் வலி, பலவீனம், திடீர் எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


கொழுப்பு கல்லீரல் நோய் ஏன் ஏற்படுகிறது?

சரியான உணவு நடைமுறை இல்லாதது, உடற்பயிற்சி இன்மை, தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவை கொழுப்பு கல்லீரல் நோய்க்கு முக்கியக் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பருமன், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது, உயர் ரத்த அழுத்தம், அதீத பதற்றம், நீரிழிவு நோய், மன அழுத்தத்தைக் குறைக்க பயன்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றின் காரணமாக மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பரம்பரையில் யாருக்கேனும் உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தாலும் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.



கொழுப்பு கல்லீரல் நோயால், மூளைச் செயல்பாடுகள் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நெஞ்சு எரிச்சல், அஜீரணம் உட்பட தீவிர வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும் புற்றுநோய்க்கும் வழிவகுக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நோயைக் கண்டறிய சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்லீரலின் மேற்புற நிலவரத்தை அறிந்துகொள்ள Abdominal Ultrasound, MRI or CT scan உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்லீரலில் எவ்வளவு கொழுப்பு தேங்கி இருக்கிறது என்பதை அறிய Transient Elastography சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கல்லீரலில் வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை அறிய Liver Biopsy பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


மதுப் பழக்கம் இல்லாதவர்கள் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பிலிருந்து தப்பிக்க உடல் எடையை BMI வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும். சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு போன்றவை கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக்கொள்ள வேண்டும். Omega 3 fatty acids, antioxidants, vitamin E உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் கல்லீரல் பாதிப்பைத் தடுக்க சில உணவு வழிமுறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். பால் கலக்காத காபி, ஓட்ஸ், தானிய உணவுகள் கல்லீரலுக்கு ஏற்றவை. பூண்டு, வெங்காயத்தைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கல்லீரல் பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மேலும் அனைத்தையும் சீராக்கும் கருஞ்சீரக பொடி தேன் கலந்து எடுப்பது மிகவும் நன்மை பயக்கும்.



-ஹீலர் அரவிந்தன்

தஞ்சை.