விற்க வரும் வீடுகளில் கேட்டுவாங்கிய
தண்ணீரைப் பருகித்தான்
வறண்டுபோன தொண்டையை
நனைத்துக் கொள்கிறார்
வெயிலில் அலைந்து
இளநீர் விற்பவர்!
இன்னமும் புழுக்கம் தருகின்றன
கோடைகாலத்தில் வாசிக்கப்படும்
மழைகுறித்த கவிதைகள்!
வெயிலுக்குப் பயந்து
மரத்தடியில் ஒதுங்கியிருந்தது
நிழல்!
இருதோள்கள் அணைத்துச்
நடுவில் சென்ற நதி இறந்தபின்
தள்ளிநின்று பார்த்துக் கொள்கின்றன
கரைகள்!
குழந்தைக்கு முன்பே
உருகி அழத்தொடங்கியிருந்தது
குச்சியிலிருந்து நழுவிவிழுந்த
குழந்தையின் ஐஸ்க்ரீம்!
தன் நீரை
தானே பருகிக் கொள்கிறது
கோடைகாலக் கிணறு!
யார் வந்து நீரூற்றினாலும்
அப்பா இறந்துபோனதை
அறிந்ததுபோல
வாட்டமாய் நிற்கின்றன
அவர் வளர்த்த செடிகள்!
மீண்டும் எப்போது திறக்கப்படுமென்று
பரிதவித்து நிற்கின்றன
குழந்தைகளைக் காணாத
பள்ளிவளாகத்துச் செடிகொடிகள்!
பொன்னிற திராட்சைக் கொத்துக்களாய்
தலைகவிழ்ந்தபடி பூத்துத் தொங்கும்
சரக்கொன்றைப் பூக்களால்
சித்திரை மாதம்
சித்திர மாதமாக மாறிவிடுகிறது!
-கீர்த்தி