சப்தமிடாதீர்கள்...
அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்...
வேகமும் விவேகமும் ஒன்று கூடிட
ஓடியாடி வேலை செய்தவள்
ஓய்வெடுக்கிறாள்
அபூர்வமாய் தனக்கெனக் கிடைத்திட்ட
ஓரிரு நிமிடங்களில்
தன்னையும் மறந்து...
சப்தமிட்டு அவளது உறக்கம் கலைத்துவிடாதீர்கள்
பிள்ளைகளுக்காகவும்
பேரபிள்ளைகளுக்காகவும்
உழைத்து களைத்தவள்
சற்றே அயர்ந்து உறங்கட்டும்
சப்தமிட்டு அவள் துயில் கலைத்துவிடாதீர்கள்...
இதோ...
எனது அலைபேசியின் அழைப்போசையை
அணைத்து வைக்கிறேன்..
பிள்ளைகளிடும் சப்தமதை
ஒடுக்கி வைக்கிறேன்...
குக்கூ... என்று அடிக்கடி கூவியே
தன் இருப்பிடத்தை
நிலைநிறுத்திக் கொண்டிருக்கும்
குயிலின் ஓசை...
நான் எப்போதும் ரசித்து
மனம் மயங்கிய இனிய ஓசை
இப்போது இரைச்சலாய் இருக்கிறது...
அவளின் உறக்கம் கலைத்துவிடுமோ என்ற அச்சத்தில்...
எப்போதும் இரைச்சலாய் இருந்த
அம்மாவின் குறட்டையொலியோ
இப்போது இன்னிசையாய்
இசைக்கிறது மனம்தனில்...
சப்தமிடாதீர்கள்...
அவள்...
உறங்கிக் கொண்டிருக்கிறாள்..
-சசிகலா திருமால்
கீழப்பழுவூர்.