இயற்கை வளம் மிகுந்த ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தது. தன் குட்டிகளுக்கு தினந்தோறும் பயிற்சிகளை அளித்து வந்தது. தினமும் காலையும் மாலையும் விடாமல் கடுமையான பயிற்சிகளை தந்தது. சிங்கக் குட்டிகள் மிகவும் சோர்வாக உள்ளது...என்னால் முடியவில்லை என்று கூறினாலும் தந்தை சிங்கம் விடாமல் பயிற்சிகளை கொடுத்து வந்தது. இதனால் இரண்டு குட்டி சிங்கங்களும் தந்தை மேல் மிகுந்த கோபம் கொண்டது. தந்தைக்கு நம் மீது பாசமே இல்லை. நம்மை அதிகமாக வருத்துகிறார் என்று நினைத்து தன் தாயிடம் சென்று புலம்பியது. அம்மா எங்களுக்கு திறமை இருக்கிறது. எங்களால் எங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். அதுவுமில்லாமல் அப்பா தான் இந்த காட்டிற்கே ராஜா... அப்படி இருக்கும்போது எங்களை ஏன் வருத்தி...தினம் தோறும் பயிற்சிகளை கொடுக்கிறார். எங்களால் இந்த பயிற்சிகளை செய்ய முடியவில்லை அப்பாவிடம் நீங்கள் கொஞ்சம் கூறுங்கள் என்று இரண்டு குட்டிகளும் அழுது கொண்டே கூறியது. அதற்கு தாய் சிங்கம் தங்க குட்டிகளே... உன் அப்பா காட்டிற்கு ராஜாவாக இருந்தாலும் உனக்கான திறமை உனக்கு வேண்டும். திறமை இருக்கிறது வலிமை இருக்கிறது என்பதற்காக பயிற்சி செய்யாமல் விட்டு விட்டால் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்த தெரியாமல் போய்விடும். தங்கம் சுடச்சுட தான் ஒளிரும். அதுபோலத்தான் நீங்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டு துன்பத்தை தாங்கி கொண்டால் தான் நீங்கள் அடுத்து சிங்க ராஜாவாக மிளிர முடியும். பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் நல்லதையே செய்வார்கள். அப்பா அம்மா கூறுவதையோ... திட்டுவதையோ.. அடிப்பதையோ நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறி புரிய வைத்தது. சிங்கக் குட்டிகளும் புரிந்துகொண்டு இனி நாங்கள் அப்பா சொல்வது போல் செய்கிறோம் என்று கூறி மகிழ்ந்தது .
குரள் : சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
- முனைவர் உமாதேவி பலராமன்,
117 பைபாஸ் சாலை
திருவண்ணாமலை.
606601.