tamilnadu epaper

ஞானம் பிறந்தது

ஞானம் பிறந்தது


மாடிப் படிகளில் குதித்திறங்கி வந்த மகள் கல்பனாவை பார்த்து முகம் சுளித்தார் மோகன் தாஸ்.


மேலே உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் டீ-சர்ட் மட்டும் போட்டுக்கிட்டு, கீழே டைட்டாக ஒரு ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி தன் அருகில் வந்து நின்ற மகளை மேலிருந்து கீழ் வரை அருவருப்பாய்ப் பார்த்த மோகன் தாஸ்,


  "இது என்னம்மா டிரஸ்?... பெத்த அப்பன் எனக்கே கூடப் பார்க்கக் கண் கூசுது" என்றார் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு.


  "டாடி.... இதுதான் இப்ப டிரெண்டிங்... பேஷன்"


  "த்தூ.... கருமம்.... கருமம்.... சகிக்கலை!..." கத்தலாய் அவர் சொல்ல,


  சமையலறையில் இருந்து வெளியே வந்த கல்பனாவின் தாய், "ஏங்க... அது இந்தக் காலத்து பொண்ணுங்க ... கொஞ்சம் மாடர்னாய்த்தான் டிரஸ் போடுவா!.. நீங்க அந்தக் காலத்து ஆளு... உங்களுக்கு அது பிடிக்கலைன்னா விடுங்க! மகளுக்குச் சாதகமாய் தாயும் பேச.


 "விடுங்க!"ன்னு நீ சொன்னா விட்டுட முடியுமா?.. இவ இப்படிப் போனா பார்க்கற இளைஞர்கள் மனசு எவ்வளவு சஞ்சலப்படும்?... அவங்களைத் தூண்டி விடறதே இவங்கதான்... தூண்டி விட்டுட்டு அப்புறம் "அவன் அங்கே கை வெச்சுட்டான்... இங்க கை வெச்சிட்டான்!"னு புலம்பறது என்ன நியாயம்?" மோகன் தாஸ் உச்சஸ்தாயில் கத்தினார்.


 "என்னங்க... திடீர்னு இளைஞர்களுக்கு சப்போர்ட் பண்றீங்க?" சிரித்தபடி கேட்டாள் மோகன் தாஸின் மனைவி.


  "பின்னே?... இளைஞர்கள் தான் இந்த நாட்டோட எதிர்காலத் தூண்கள்!... அவர்களை நம்பித்தானே நாடே இருக்குது"


  "ஏன் டாடி... நான் இப்படிக் கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டுப் போனா இளைஞர்கள் மனசு கெட்டிடும்... அவங்களை தப்பு செய்யத் தூண்டும் அப்படித்தானே?"


 "ஆமாம்.. அதிலென்ன சந்தேகம்?"


 "அப்படின்னா... நீங்க வெற்றிகரமா நடத்திக்கிட்டிருக்கற... சர்க்குலேஷன்ல 'நம்பர் ஒன்'னாக இருக்கிற "நவீனம்" பத்திரிக்கையோட நடுப் பக்கத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு கவர்ச்சிகரமான ப்ளோ-அப் படம் போடறீங்களே அது எதுக்கு?" நேருக்கு நேர் தந்தையின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள் கல்பனா.


  "அது... வந்து... பத்திரிக்கை உலகத்துல நிறைய காம்படிஸன்... அதைச் சமாளிக்க... சர்குலேஷன் உயர்த்த... ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் பண்ணித்தான் தீரணும்" திக்கித் திணறிச் சமாளித்தார் மோகன் தாஸ்.


  "டாடி உங்க பத்திரிகைல நீங்க போடுற படமெல்லாம் வெளிநாட்டில் உள்ள மூன்றாந்தரப் பத்திரிக்கைல வர்ற அரை நிர்வாணப் படங்கள்.. அதைப் பார்த்து உங்க இளைஞர்கள் கெட்டுப் போக மாட்டாங்களா?"


தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது மோகன் தாஸிற்கு.


இதுதான் சமயம் என்று உள்ளே புகுந்த அவரது மனைவி "சர்க்குலேசனுக்காக நீங்க செஞ்சா அது நியாயம்.. ஃபேஷனுக்காக இவங்க செஞ்சா அது குற்றமா?" கேட்டாள்.


சில நிமிடங்கள் தலையைக் குனிந்தபடி யோசித்த மோகன் தாஸ், "ஸாரிம்மா என் கண்ணை திறந்து விட்டுட்டீங்க... இனிமேல் தான் அந்த நடுப்பக்கத்தை நிறுத்திடறேன்... பத்திரிக்கையோட சர்க்குலேஷன் இறங்கி... நஷ்டமே ஆனாலும் பரவாயில்லை... இனிமேல் அதுகளை நான் சத்தியமா போட மாட்டேன்" என்றார்.


  "அதே மாதிரி நானும் இந்த மாதிரி அரைகுறை ஆடைகளை அணிய மாட்டேன் டாடி... இது கூட உங்களை திருத்துவதற்காக நானும் அம்மாவும் போட்ட திட்டத்திற்காக அணிந்த ஆடைதான்" சொல்லி விட்டு மாடிக்குச் சென்று புடவை மாற்றிக் கொண்டு வந்தாள் கல்பனா.


(முற்றும்)


முகில் தினகரன், கோயமுத்தூர்.