சபேசன் (75 வயது) மனைவி சீதாவுடன் சென்னையில் தனது மகன் சாரங்கனின் வீட்டில் வசிக்கிறார். சாரங்கன் அவன் மனைவி லதா இருவரும் வேலை பார்க்கின்றனர். அவர்களின் ஒரே மகன் சுபன், தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். காலையில் சீதா சீக்கிரமாக எழுந்து குளித்து சமையல் வேலைகளைச் செய்வாள். சபேசன் பேரன் சுபனை எழுப்பி குளிப்பாட்டி பள்ளிச் சீருடை போட்டு விடுவார். அதற்குள் காலை உணவும் மதிய உணவும் தயாராகிவிடும். பேரனைக் கூட்டிப்போய் குடியிருப்பின் வாசலில் பள்ளிவாகனத்தில் ஏற்றி விடுவார்.
அவர் திரும்பி வரும் போதுதான் சாரங்கனும் லதாவும் எழுந்து அரக்க பரக்க குளித்து வேலைக்குக் கிளம்புவார்கள். காலை உணவை முடித்துவிட்டு சீதா கட்டிக் கொடுக்கும் மதிய உணவுடன் அலுவலகம் கிளம்புவார்கள்.
"சீதா.....வா ... கொஞ்ச நேரம் இப்படி உட்காரு. சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதே. நம்ம கல்யாணம் ஆனதிலிருந்து இன்றுவரை ஓய்வே இல்லாம உழைக்கிறியே. அன்னிக்கு எனக்கு எங்கப்பா அம்மாவுக்கு, அப்புறம் எனக்கும் பிள்ளைகளுக்கும். சரி அவங்களுக்கு தான் கல்யாணம் ஆயாச்சே இனி அவங்கபாட்ட அவங்க பாத்துப்பாங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்னு பாத்தா பொண்ணு பிரசவத்துக்கு வந்தா... ஆச்சுன்னு பாத்தா பையன் இங்கே வாங்கன்னு சென்னைக்கு கூட்டி வந்துட்டான். ஏதோ நான் அரசாங்க வேலை பாத்ததுனால அறுபது வயசுல ஓய்வு கொடுத்தாங்க. ஆனா உனக்கு?"
"எனக்கு என்னங்க வேணும்.... திங்கணும். தூங்கணும். அது நல்லாத்தானே நடக்குது. ஏதோ இத்தனை காலமாச்சு. ஒருநாள், ஒருவேளை நீங்க தலைவலி காய்ச்சல்னு படுத்ததில்லே. இப்படியே தொடரணும். என்ன, நான் உங்களுக்கு முன்னால் சுமங்கலியா போகணும்."
"பாத்தியா... பாத்தியா.... உன் சுய நலத்தை. நீ சுகமாப் போயிடுவே. அப்புறம் நான் தனியாத் திண்டாடணுமா. கிடையவே கிடையாது. இருந்தா ரெண்டு பேரும் சேந்து இருக்கணும். செத்தா சேர்ந்தே சாகணும்."
மாலை 3.00 மணி. சுபன் பள்ளியிலிருந்து வந்தான். அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து விளையாட அனுப்பினர்.
பொழுது சாய்ந்தது. சாரங்கன், லதாவுடன் வந்தான். இருவரும் வரவேற்பறையில் உட்கார்ந்தனர். மற மௌனத்தைக் கலைத்தார் சபேசன்.
" சாரங்கா, லதா உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்னு பாக்கறேன். அதாவது நாளைக்கு நானும் சீதாவும் 'தனிக்குடித்தனம்' போலாமான்னு பாக்கறோம்." சாரங்கனும், லதாவும் திடுக்கிட்டுத் திரும்பினர். "என்னப்பா சொல்றீங்க. தனிக்குடித்தனமா, விளையாடாதீங்க."
"மெய்யாத்தான் சொல்றேன். நான் ஓய்வு வாங்கிட்டேன் அலுவலகத்துல. ஆனா உங்கம்மா அன்னீலேந்து இன்று வரை உழைச்சு உழைச்சு. பாவம். அவளுக்கு ஓய்வு வேண்டாமா. அதான்ப்பா.நாங்க ரெண்டு பேரும் தனியா கிராமத்துல போய் இருக்கலாம்னு பாக்கறோம்."
"அப்பா, இப்ப அதெல்லாம் வேண்டாம்." என்றான் சாரங்கன். லதாவும் "ஆமாம் மாமா, இங்கே நல்லாத்தானே இருக்கீங்க."
மறு நாள் பொழுது விடிந்தது. வீடே அமைதியாக இருந்தது. தாத்தா பக்கத்தில் படுத்திருந்த சுபன் எழுந்து தாத்தாவை எழுப்பினான். தாத்தாவிடம் எந்த சலனமும் இல்லை. பாட்டியும் பக்கத்தில் படுத்திருந்தாள். அவளது கை சபேசனின் மார்பில்... அவளிடமும் எந்த அசைவு மில்லை. சுபன் அழுதுகொண்டே "அம்மா.... அம்மா...." என்று வெளியே வந்தான். இவனது சத்தம் கேட்டு லதா எழுந்து வந்தாள். படுக்கையறைக்கு வந்து மாமனார் மாமியாரைப் பார்த்தாள். பக்கத்தில் வந்து தொட்டுப் பார்த்தாள். உடம்பு ஜில்லென்றிருந்தது.
"என்னங்க. இங்கே வாங்க. பாருங்க." சாரங்கன் வந்தான் பார்த்தான். "ஓ....." வென்று கதறினான். "லதா. மருத்துவரை அழை." மருத்துவர் வந்தார். கையை விரித்து உதட்டைப் பிதுங்கினார்!
"ஆமாம். நேற்று 'தனிக்குடித்தனம்' போகப்போறதாச் சொன்னாங்களே... போயிட்டாங்களா...?