tamilnadu epaper

தமிழகத்தில் ஏஐ தொழில் நுட்ப ஆய்வகங்கள் ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

தமிழகத்தில் ஏஐ தொழில் நுட்ப ஆய்வகங்கள்  ஸ்டாலின் முன்னிலையில்   கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை, செப். 1–

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப்பயணமாக முதல்வர் ஸ்டாலின், கடந்த 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். முதல் நாளில் சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, ரூ.900 கோடி முதலீடுகளை ஈர்க்கும் 6 ஒப்பந்தங்களின் கையெழுத்து நிகழ்வுகளில் பங்கேற்றார். 

நேற்று முன்தினம் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ‘ஆப்பிள்’ நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றி. மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்க உள்ளோம். இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக, அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா மவுண்டன் வியூவில் அமைந்துள்ள ‘கூகுள்’ நிறுவனத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அந்நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேசுகையில், " தமிழகத்தில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்தவேண்டும். கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும். ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்துக்கான திறன் ஆகியவற்றில் ‘ஏஐ’ கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை, அதிநவீன ஏஐ திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழகம் தயாராக உள்ளது" என்றார். 

இதையடுத்து, முதல்வர் முன்னிலையில் ஏஐ ‘செயற்கை நுண்ணறிவு’ ஆய்வகங்களை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அதன் உயர் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில், டேட்டா சென்டர் விரிவாக்கம் மற்றும் ‘ஏஐ’ திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.  

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அதிகாரிகள உடனிருந்தனர்.

==========

BOX

தமிழகம் உயரும்!

 

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டேன். அது... வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றிக் கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகத்தை உயர்த்த உறுதி பூண்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.