tamilnadu epaper

தமிழகத்தில் காசிக்கு நிகரான ஆறு தலங்கள்...!

தமிழகத்தில் காசிக்கு நிகரான ஆறு தலங்கள்...!

 

 

இது தொடர்பான ஒரு ஸ்லோகம்

 

"சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்!

 

சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ‌க்ஷேத்ர ஸமான ஷட்!!

 

என்ற இந்த ஸ்லோகத்தின் படி திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) திருவையாறு, திருவிடைமருதூர், (தஞ்சாவூர் மாவட்டம்) மயிலாடுதுறை, பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்(நாகை மாவட்டம்) ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்) ஆகிய ஆறு தலங்கள் தான் காசிக்குச் சமம் என்பது வரலாறு . இதைத்தவிர அவிநாசி, தென்காசியும் கூட காசிக்குச் சமமானவை என்கிறார்கள் ஒரு சில ஆன்மிகப் பெரியவர்கள்.

 

1)திருவெண்காடு

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருவெண்காடு சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர் என நால்வராலும் தேவரப் பாடல் பெற்ற தலம். 

 

அதோடு நவகிரக ஸ்தலங்களில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. 

 

இக்கோயிலில் ருத்ரபாதம் உள்ளது. 

 

இதை வழிபட்டால் நம்முடைய 21 தலைமுறைக்கும் ஏற்பட்ட பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. 

 

திருவெண்காடு ருத்ரபாதத்தை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசிக்கு போய் தரிசித்த பலனைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 

 

இக்கோயிலில் உள்ள புதன் பகவானை தரிசித்தால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பந்து, திருமணம், செல்வச்செழிப்பு, கலைத்துறையில் உயர்வு என எட்டு வகையான அதிகாரங்கள் தேடிவரும்

 

2)திருவையாறு: 

 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும்.

 

காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். 

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மண் லிங்கம் ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. 

 

சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். 

 

சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

இத்தலம் பூலோக கைலாயம். 

 

இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். 

 

மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்குநோக்கி, ‘ஐயாறப்பா' என்று சொன்னால் ஏழுமுறை எதிரொலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. 

 

இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.

 

மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர், 

 

அம்மன் தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி, 

 

ஈசனிடம் இரண்டு நாழி நெல் பெற்று 32 அறங்களையும் குறைவின்றி செய்தவள் ஆதலால், இந்த அம்பிகையை அறம்வளர்த்த நாயகி என்றும் போற்றுவர். 

 

மேலிரு கரங்களில் சங்கு சக்கரத்துடன் திகழ்வதால், இந்த தேவி விஷ்ணு அம்சத்தினளாக அருள்புரிகிறாள் என்கின்றனர் பக்தர்கள்.

 

திருமால், அப்பர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சூரியபகவான், திருநாவுக்கரசர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். 

 

திருநாவுக்கரசர்,திருஞான

சம்பந்தர்,சுந்தரர் ஆகியோர் பதிகம் பாடியுள்ளனர்.

 

சப்த ஸ்தானம் என்று போற்றப்படும் ஏழு தலங்களில் திருவையாறு முதன்மையானது. 

 

திருநாவுக்கரசருக்கு, இறைவன் கயிலாய தரிசனம் தந்த இந்தத் தலத்தைத் தரிசிக்க, காசியம் பதியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

 

3)திருவிடைமருதூர்

 

மிக அழகான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் மூன்று மணிநேரமாவது ஆகும்.

 

இக்கோயிலில் உள்ள மாடங்களும், ஒவ்வொரு பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும். 

 

நான்கு புறமும் நான்கு கோபுரங்களுடன் நுழைவு

வாயில்கள் உள்ளன. 

 

இவ்வூரின் எந்தத் திசையில், எந்தத் தெருவில் நின்று பார்த்தாலும் இக்கோயிலின் ராஜகோபுரம் தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 

 

இக்கோயிலின் கருவறையில் உள்ளது சுயம்பு லிங்கம் என்பதால் அதிக சக்தி கொண்டதாக உள்ளது என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். 

 

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் தன்னுடைய இறுதிக்காலத்தில் இக்கோயிலில் தான் கழித்தார். 

 

பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபடவேண்டிய கோயிலாகும். 

 

இக்கோயிலுக்குள் நுழைந்தால் வேறு நுழைவுவாயில் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும்.

 

4)மயிலாடுதுறை

 

மாயூரம், மாயவரம் என்றும் அழைக்கப்படும் ஊரில் உள்ள மயூரநாதர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த சிவன் கோயிலாகும். 

 

இக்கோயிலின் கிழக்குக் கோபுரம் ஒன்பது நிலைகளுடனும், மற்ற மூன்று கோபுரங்களும் மொட்டைக் கோபுரங்களாக காட்சியளிக்கின்றன. 

 

அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட கோயில்கள் மயிலாப்பூர், மயிலாடுதுறை என இரண்டு தலங்கள் ஆகும். 

 

இக்கோயிலில் ஸ்ரீமயூரநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அபயாம்பிகை மயில் வடிவிலும் அருள்பாலிக்கின்றனர். 

 

பொதுவாக கந்த சஷ்டி விழாவின் போது முருகன் அன்னை பார்வதியிடம் தான் வேல்வாங்குவது வழக்கம். 

 

ஆனால் இங்கு முருகன் தந்தை சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாகும். 

 

இத்தலத்தின் மற்றொரு சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் ஆகும். 

 

அந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்து இத்தல இறைவனை தரிசித்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம்

 

மாயூரம் எனப் புராணங்கள் போற்றும் இந்தத் தலத்து ஈசனை கங்கையை விட புனிதமான காவிரி நதியில் ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தமாடி, சிவனை வழிபட வேண்டும். 

 

ஆக, இந்தத் தலத்துக்கு வந்து இடப தீர்த்தமாகிய காவிரியில் நீராடி, மாயூர நாதரையும் அபயாம்பிகையையும் தரிசிப்பவர்களுக்கு, காசியில் வழிபட்ட புண்ணியம் உண்டு. 

 

மேலும், இந்தத் தலத்துக்கு வடக்கே உள்ள வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார் ஈசன்

 

5)திருச்சாய்க்காடு - சாயாவனம்

 

நாகை மாவட்டத்தில் காவிரிக்கரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்பதாவது கோயில் சாயாவனம் என்னும் சாயாவனேஸ்வரர் கோயில் ஆகும். 

 

பழங்காலம் தொட்டே இந்திர விழா என்னும் பெயரில் சித்ரா பௌர்ணமி விழா 21 நாட்கள் இங்கு நடைபெறுகிறது. 

 

சோழ மன்னன் கோச்செங்கண்ணன் தன்னுடைய நாட்டில் யானை புகாத வகையில், மாடக் கோயில் என்னும் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான். 

 

அதில் இக்கோயிலும் ஒன்றாகும். 

 

எம பயத்தை நீக்கி உயிர்களுக்கு முக்தி தரும் க்ஷேத்திரம் என்பதால், காசி தலத்துக்கு நிகரானதாகப் போற்றப்படுகிறது. 

 

இங்கு சாயவனேஸ்வர ஸ்வாமியும் கோஷாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். 

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனாருக்கு இறைவன் காட்சி கொடுத்த தலம் ஆகும். 

 

இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள முருகப் பெருமான் கையில் வில்லேந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ருசம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

கையில் வில்லுடன் காட்சி தரும் திருச்சாய்க்காடு வேலவனை தரிசிக்க நம் வினைகள் யாவும் நீங்கும் !

 

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற திருச்சாய்க்காடு திருத் தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது

 

6)ஸ்ரீவாஞ்சியம்: 

 

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என மூவரால் தேவரப் பாடல் பெற்ற, ஸ்ரீவாஞ்சியம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் இறைவன் ஸ்ரீவாஞ்சிநாதர் அம்பாள் ஸ்ரீமங்களநாயகியுடன் காட்சியளிக்கிறார். 

 

ஸ்ரீமஹாலட்சுமி ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடைய வேண்டி இங்கு வந்து சிவபூஜை செய்து விருப்பம் நிறைவேறியதால் திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. 

 

காசிக்கு ஒப்பாக கருதப்படும் காவிரிக்கரையில் உள்ள ஆறு சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். 

 

இங்குள்ள அம்மனுக்கு வாழவந்த நாயகி என்ற பெயரும் உண்டு.

 

ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். 

 

அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். 

 

காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. 

 

இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும் புனிதமானது. 

 

இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். 

 

இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். 

 

எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.

 

ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள். 

 

திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு. 

 

சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார். 

 

இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார். 

 

‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று பெயர் பெற்றது. 

 

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும் கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

 

துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியதும், சரஸ்வதி நதிக் கரையில் தவமிருந்த ‘ஸர்வா’ என்ற முனிவர் துடித்துப் போனார். 

 

கலியுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ என்ற கவலை அவரை வருத்தியது. 

 

அப்போது ‘திருவாஞ்சியம்’ என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது. 

 

இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோவிலை நோக்கி ஓடினார். 

 

அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது. 

 

இதனால் முனிவர், ‘சிவாய நம.. திருவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார். 

 

பக்தனின் குரல் கேட்டு, வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை, திருவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார். 

 

ஈசன், கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது. 

 

கலியுகத்தில் நமக்கு ஏற்படும் 

சகல தோஷங்களையும், கிரக பீடைகளையும் களையும் திருத்தலம்

 

திருவாஞ்சியம் ஆகும்.

 

காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது. 

 

காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. 

 

அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். 

 

ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. 

 

அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. 

 

இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். நாய் வாகனமும் இங்கு இல்லை. 

இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள்.

 

திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. 

 

இத்தல பைரவரை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு மிகுந்த தனம் பெறலாம் என்கிறார்கள்.

 

இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

 

இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. 

 

காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களைக் கங்கை ஏற்கிறாள். 

 

இங்கு இருக்கும் குப்த கங்கையில் தனது 1000 கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு ரகசியமாக குப்த கங்கை என்ற பெயருடன்வந்து. தனது பாவங்கள் நீங்கி புனிதம் பெறுவதற்காகமுனி தீர்த்தத்தில் (குப்த கங்கையில்)நீராடி, வாஞ்சிநாதரை வழிபட்டு அருள் பெற்றாளாம்.

 

நவதீர்த்தங்களைக் கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள குப்த கங்கையில் நீராடி ஸ்ரீவாஞ்சிநாதரையும், எமதர்மனையும் வழிபட்டால் 

சகல நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். 

 

இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. 

 

கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! 

 

குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷம்.

 

இக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார்

 

யமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். 

 

அவர் ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி யமனும் ஸ்ரீவாஞ்சியத்தில் தவம் இருந்தார். 

 

தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் வரம் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார். 

 

மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார். 

 

இத்தலத்தில் யமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு.

 

இத்தலத்தில் எம வாகனத்தில்

சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.

 

யமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் (காசிக்கு வீசம் பெரியது ஸ்ரீவாஞ்சியம்)காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.

 

கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். 

 

ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

 

-Kavitha Saravanan.