tamilnadu epaper

தெனாவெட்டு

தெனாவெட்டு

 

இன்டர்வியூவிற்காக வந்து ஹாலில் காத்திருக்கும் இளைஞர்களைக் கடந்து செல்லும் போது அவனைக் கவனித்து விட்டார் எம்.டி. கிருபாகரன்.

 

  "மற்றவர்களெல்லாம் பவ்யமாய் அமர்ந்திருக்க இவன் மட்டும் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கானே... ரொம்ப தெனாவெட்டான ஆளாயிருப்பானோ?"

 

வரிசையாக ஒவ்வொரு பெயராக அழைக்கப்பட, எல்லோரும் உள்ளே சென்று தங்களது இன்டர்வியூவை முடித்து விட்டு வெளியேற, குமாரின் பெயர் மட்டும் கடைசி வரை அழைக்கப்படவே இல்லை.

 

அப்போது அவனை நோக்கி வேகமாய் வந்த அட்டெண்டர், "சார் உங்க பேரு?" கேட்க ,

 

 "குமார்" என்றான்.

 

  "உங்களுக்கு இன்டர்வியூ இல்லையாம்... நீங்க போகலாம்!"

 

  "ஏன்?"பதறினான் குமார்.

 

  "நீங்க இன்டர்வியூக்கு வந்து உட்கார்ந்திருக்கிற மாதிரியா உட்கார்ந்திருந்தீங்க?... கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு... அதுவும் எம்.டி. வரும் போது கூடக் கழட்டாம உட்கார்ந்திருக்கீங்க... அதான் எம்.டி. உங்களை திரும்பி போகச் சொல்லிட்டார்"

 

அதைக் கேட்டு ஓங்கி சிரித்தான் குமார்.

 

 "என்ன சார்... மறுபடியும் தெனாவெட்டா சிரிக்கறீங்க?" அந்த அட்டெண்டரே கோபப்பட.

 

  "மிஸ்டர் அட்டெண்டர் இன்டர்வியூக்கு வரும் போது ஒருத்தன் கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு... அதை கழட்டாமல் உட்கார்ந்திருக்கான்னா... என்ன காரணம்னு? யோசிக்கணும்"

 

  "சரி... என்ன காரணம்?"

 

  "யோவ் எனக்கு "மெட்ராஸ் ஐ"... இரண்டு கண்ணும் கோவைப் பழமாட்டம் சிவந்து கிடக்கு... ஆக்சுவலா இன்னைக்கு இன்டர்வியூக்கு வர வேண்டாம்னு தான் நினைச்சேன்... ஆனாலும் உங்க கம்பெனியோட அழைப்பை மதிச்சு கருப்புக் கண்ணாடியை போட்டுக்கிட்டு வந்தேன்... அதுவும் ஏன் தெரியுமா?... என்னை இன்டர்வியூ பண்ற உங்க எம்.டி.க்கு இந்த "மெட்ராஸ் ஐ" தொற்றிக் கொள்ள கூடாதுன்னுதான்!.. இதைக் கூட புரிஞ்சிக்காத எம்டி கிட்ட வேலை பார்க்கிறதை விட கூலி வேலைக்கு போகலாம்!" சொல்லிவிட்டு வேக வேகமாய் வெளியேறினான் குமார்.

 

(முற்றும்)

----

முகில் தினகரன், கோயமுத்தூர்.