tamilnadu epaper

தேவையறிந்து செலவு செய்வோம்

தேவையறிந்து செலவு செய்வோம்

சமீபத்தில் ஒரு நிச்சயதார்த்திற்கு போயிருந்தேன். கிட்டத்தட்ட திருமணம் போல் நடந்தது. வழக்கம்போல் சாப்பிடுபவர்களின் பின்னால் இடம்பிடிக்க நின்று கொண்ட கூட்டம். சாப்பிடுபவர்களுக்கோ சங்கடம். எதுவும் கேட்டு சாப்பிட கூச்சம்.


அப்போதுதான் தோன்றியது இந்த நிச்சயதார்த்தம், இந்த செலவுகள், மழையோ வெயிலோ ஓலாவில் கூலாக வருவோர், இரு, நான்கு சக்கர வாகனத்தில், கூட்ட நெரிசலில், அதுவும் மாலை ஆறுமணிக்கு விழாவிற்கு நான்கு மணிக்கு கிளம்பி விடவேண்டும்.  


பிறகு இரண்டாவதோ மூன்றாவதோ வரிசையில் சாப்பிட்டு கிளம்பி போக்குவரத்து நெரிசலில் வண்டியில் ஊர்ந்து வீடு வந்து சேர்ந்து.... அப்பாடீ! அம்மாடீ! அலர்ந்து போகிறது உடம்பு.


சரி எதற்கு இந்த விபரங்கள்? தற்கால திருமணங்கள் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், தனக்கு பிடிப்பதற்காக குடும்பத்தை எதிர்த்து நண்பர்கள் செய்து வைக்கும் திருமணம் என்று பலதரப்பட்ட வகையில் நடக்கின்றது. ஐம்பது சதவீத திருமணங்கள் பெற்றோர்கள் பிள்ளைகள் சம்மதத்துடன் நடக்கின்றது.


அதிலும் ஈகோ, படிப்பு, சம்பாத்யம், பெற்றோர்களை பாரமாக நினைப்பது, புரிதல் இல்லாமை என்று விவாகரத்திற்கு கோர்ட் வாசலில் நிற்பது என்று அன்றாடம் செய்திகளில் பார்க்கும்போது மனம் சங்கடப்படுகிறது.  


பொறுமை இல்லையா, தேவை இல்லையா, சிந்திக்க தெரியவில்லையா என்று யோசித்து குழப்பமே மிஞ்சுகிறது.


நேரிடையாக திருமணம் செய்து கொள்ளலாம். சிம்பிளாக செய்து கொள்ளலாம். அலங்காரம் முதல் ஆகாரம் வரை எதார்த்தமாக இருக்கட்டுமே! 


ஆடம்பரமாக திருமணம் செய்து கொள்வது அல்ல வாழ்க்கை. ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதுதான் நல்ல திருமண பந்தத்திற்கு உதாரணம்.


இளைஞர்களே! இளைஞிகளே! வருங்கால மணமக்களே! 


நான்கு பேர் வாழ்த்த மட்டும், சுற்றமும் நட்பும் சூழ திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒரு மிகப்பெரிய தொகையை உங்களுக்கே சேமிப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து படிக்க உதவுங்கள். முதியோர் இல்லத்தில் பண்டிகைகளில் பலகாரங்கள், புதுத் துணிகள் வாங்கி அவர்கள் மன, முக மலர்ச்சியில் ஆனந்தம் பெறுங்கள்.


உங்கள் வீட்டு துனண தேவதைக்கு சம்பளம் அதிகரித்து கொடுங்கள். ஊனமுற்றோருக்கு ஊன்றுகோளாக இருங்கள்.


ஏழு நாட்கள் நடந்த கல்யாணங்கள் அன்று. தற்போது மூன்று நாட்களாக, இரண்டு நாட்களாக குறைந்துள்ளது.


இதையும் ஒரு நாள் திருமணமாக கொண்டாடுங்கள். அன்றைய தினமே காப்பகங்களில் அன்னதானம் செய்யுங்கள். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து ஆத்ம திருப்திக்காகவும், பெரியவர்களின் ஆசிர்வாதங்களுக்காகவும், மற்ற சுற்றங்களின், நட்புக்களின் வாழ்த்துக்காகவும் திருமணம் செய்து கொள்ளுங்கள். திறம்பட வாழுங்கள். 


விட்டுக்கொடுத்தல் ஒன்று போதும். வாழ்க்கை என்னும் விதை வளர்ந்து விருட்சமாகட்டும்.


-வி.பிரபாவதி

மடிப்பாக்கம்