சாந்தி படிக்க ஆசைப்பட்டு எவ்வளவு முயன்றும் பத்தாம் வகுப்பில் முக்கி முனகி மூன்று முறை முயற்சித்தும் தோல்வியையே கண்டாள்.
கட்டிட தொழிலாளியான அவளின் அப்பா முருகேசன் திட்டினார் "உன் தங்கச்சிய பாரு உன்னைய விட ரெண்டு வயசு சின்னவ நல்லா படிக்கிறா எப்படியும் அவ நாளைக்கு நல்ல நிலைமைக்கு வந்திடுவா உன் எதிர்காலத்த நெனச்சாதான் பயமா இருக்கு"
"நானும் தான் இராத்திரி பகல்னு நேரம் பார்க்காம படிக்கிறேன் முடியில ஞாபகத்துல நிக்கிறது இல்லப்பா"
"அப்படி சொல்லாத என்னைய பாரு படிக்காததால தினக்கூலியா தினம் கஷ்டப்படுறேன் சமுதாயத்தில் மரியாதை கிடைக்காது படிப்புதான் உயர்த்தும் அந்தஸ்தை கொண்டு வரும்"
அப்பா சொல்வது நிசம்தான் இருந்தாலும் எனக்கு ஒத்து வரவில்லையே என அவள் வருந்தியதுண்டு.
சிறு வயதிலிருந்தே தன் தாத்தாவின் செல்ல பேத்தியாய் அவரின் தையல் எந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு சின்ன துணிகளை கத்தரியால் வெட்டி வெட்டி மகிழ்வது அவளின் வாடிக்கையாய் அந்நாட்களில் இருந்து வந்தது.
இந்நாட்களில் அவளின் தங்கை யமுனா கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டுக்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள்.
சாந்தி தன் தாத்தாவிடம் பிளவுஸ் தைக்க கற்றிருந்தாள்.
பொங்கள், தீபாவளி என விசேஷ நாட்களில் தன் தாத்தாவுடன் சேர்ந்து அவளும் துணிகளை தைத்து தரும் அளவிற்கு தையற் கலையில் தேறினவள் ஆனாள்.
இப்பொழுது எல்லாம் மாடலாக பிளவுஸ் தைப்பதிலும் ஆரிய ஒர்க் செய்வதிலும் தேர்ந்தவளானாள் குறைந்த பட்சம் மாதந்தோறும் இருபதாயிரம் குறையாமல் வீட்டிலிருந்த படியே சம்பாதித்து வந்தாள்.
இப்படியிருக்கு ஒரு நாள் கட்டிட வேலையில் எட்டாவது மாடியில் முருகேசன் நின்றிருக்க அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு அக்கட்டிடம் நிலை கொள்ளாமல் விழுந்து அங்கிருந்த இருபது பணியாட்கள் மரித்து போனார்கள் முருகேசனும் புதையுண்டு மாண்டு போனான்.
வீடு துக்கத்தை தழுவி இருந்தது "அக்கா இனி நான் படிக்க போகல" என்றாள் யமுனா
"ஏன் உனக்கு என்னாச்சு"
"இனி யாரு என்னைய படிக்க வைப்பா செலவு நிறைய ஆகும்"
"இந்த அக்கா இருக்கேன் என் தொழில் நம்மள கைவிடாது அப்பா இடத்துல இருந்து உன்னைய நான் படிக்க வைக்கிறேன்" என்றாள்.
தொடர்ந்து தன் அம்மாவை பார்த்து "அம்மா இந்த குடும்பத்தை நான் காப்பாத்துறேன் அப்பா இல்லையேன்னு கவலை படாடாத " என்றாள்.
அவள் அம்மாவின் கண்கள் கலங்கியது மனதுள் புது நம்பிக்கை பிறந்தது
தையல் மெஷினை அவள் தாத்தா ஒரு நல்ல சிநேகிதனை பார்ப்பது போல பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
கவிமுகில் சுரேஷ்
தருமபுரி