tamilnadu epaper

நமக்கென்ன போ...

நமக்கென்ன போ...

 

 " வெல மீனு கிலோ எவ்வளவுப்பா...?"

மீன் கடைக்காரரிடம் விசாரித்தார் மீனாட்சி

       "முந்நூறு ரூவா சார்..."

   "ஒரு கிலோ போடுப்பா... நல்லா கிளீன்

பண்ணனும் சரியா..."

        ஒரு கிலோ எடை போட்டு ஏற்கனவே 

கிளீன் பண்ண வைத்தவர்களின் வரிசையில் இவன் மீனையும் வைத்தான் 

கடைக்காரன்.

      " என்னப்பா ஒண்டியா கஷ்டபடுற...

ஒத்தாசைக்கி ஆள் வச்சிக்க வேண்டியதுதானே...வேலையும் சீக்கிரம்

ஆவும் இல்ல..."

         "சொந்த தம்பி தான் ஒத்தாசைக்கி இருந்தான் அவனுக்கு உடம்புக்கு ஆகல..." சொல்லிவிட்டு வேளையில் முனைந்தான்.

       பக்கத்தில் குழந்தையை வைத்துக் கொண்டு வெகு நேரமாக ஒரு பெண்

நின்று கொண்டிருந்தாள்.

       "என்னம்மா மீன் வாங்க வந்தியா...?"

மீனாட்சி கேட்க,

           "ஆமா சார்...ஒரு மணி நேரமா நிக்கிறன்...வரிசையில அஞ்சாவதா இருக்குற தட்டு தான் எனது... இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமுன்னு தெரியல..."

         "என்னப்பா...அந்தபொண்ணு மீன

முதல்ல கிளீன் பண்ணி குடுப்பா பாவம்..."                                           

    " வரிசையா தான் சார் கிளீன் பண்ண முடியும்...நிக்கிறவங்கெல்லாம் 

ஆள் இல்லையா..." நேர்மையான அதிகார தோரணையில் கடைக்காரன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர்

பைக்கில் வந்து நின்றார்.

      "வாங்கய்யா... என்னங்கய்யா வேணும்..."

கடைக்காரன் பவ்யமாக எழுந்து நின்று கேட்க,

      " கொடுவா ரெண்டுகிலோ இறால் ஒரு

கிலோ போடுப்பா..."அவர் சொன்னவுடன் 

மற்றவர்களுடைய வேலையை அப்படியே

நிறுத்துவிட்டு அவர் கேட்டதை எடை

போட்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தான்

கடைக்காரன்.

          தொடர்ந்து ஜீப் ஒன்று வரவே,அவரும் உயர் பதவியில் இருப்பவர் போலும் அவருக்கும் வேலையை முடிக்க கிட்ட தட்ட அரை மணிநேரத்துக்கு மேல் ஆகி விட்டது

       ஏற்கனவே மணி கணக்கில் கால் கடுக்க

நின்றவர்களின் மீனாட்சி உள்பட அனைவரின் மனதிலும் ஆதங்கமும் ஆத்திரமும் எழத்தான் செய்கிறது .இது

போன்ற அவலங்கள் எங்கும் எதிலும்

இருக்கத்தான் செய்கிறது. தட்டிக்கேட்க மனம் துடித்தாலும் நமக்கென்ன போ என்ற எண்ணம் சமாதானப் படுத்துகிறது.

 

 

-சுகபாலா

திருச்சி