இந்திரா காந்தியின் இயற்பெயர்
இந்திரா பிரியதர்ஷினி நேரு . பிரியதர்ஷினி என்றால் பார்வைக்கு அழகானவர் என்று பொருள் . இவர் அலகாபாத்தில் 1917ம் ஆண்டு நவம்பர் 19-ல் பிறந்தார். தந்தை ஜவஹர்லால் நேரு. தாய் கமலா நேரு. இவர் இந்தியாவிலும் பிறகு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் சுவிட்சர்லாந்து, ஜெனிவா ஆகிய நாடுகளிலும் படித்தார்.
1942- ல் இவர் இந்திய தேசிய காங்கிரஸின் சக உறுப்பினரான
ஃபெரோஸ் காந்தியை மணந்தார். இவருடைய மகன்கள் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி. 1960 ல் ஃபெரோஸ் காந்தி மறைந்தார்.
நேரு சிறையில் இருந்தபோது மகள் இந்திராவுக்கு உலக வரலாற்றையும் நாட்டு நடப்புகளையும் கடிதங்களாகவே எழுதி அனுப்பினார். அதன் மூலம் இந்திரா காந்தி உலக
ஞானத்தையும் பெற்றார். தாயாரை பிரிந்து தனிமையில் வாடிய நேரத்தில் வீட்டிலேயே நேரு அமைத்திருந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து இந்திரா காந்தி தன் அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
1959-ல் கட்சியின் கௌரவ தலைவர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. 1966-ல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லால் பகதூர் சாஸ்திரி மந்திரி சபையில் இந்திரா காந்தி செய்தி ஒலிபரப்பு அமைச்சராக பணியாற்றினார்.
அவரது மரணத்திற்குப் பின் நாட்டின் பிரதமராக 1966 ஜனவரி 19- ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது தனது ஆளுமைத் திறனை திறம்பட வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்நாட்டு மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபட்டது. அதனால் இந்தியாவுக்கு அகதிகளாக லட்சக்கணக்கானோர் படையெடுத்தார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு அவர்களை சுதந்திரமாக வாழ வழிவகை செய்யும் வகையில் பாகிஸ்தானுடன் போர் அறிவித்து அதில் வெற்றியும் கண்டார்.
சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடியல் கிடைக்கும் வகையில் வங்காள தேசம் என்ற நாட்டை உருவாக்கி கொடுத்தார்.
இவர் ஆட்சி காலத்தில் 1974 -ல் ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா அணுசக்தி சோதனை நடத்தி உலக நாடுகள் மத்தியில் அணுசக்தி வல்லமையை நிலை நிறுத்தியது. பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பை 12-6-1975 அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்தது.
இதைத் தொடர்ந்து1975 ஜூன் 20ம் நாள் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தார். இதைத் தொடர்ந்து 1977-ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
அவசர நிலைக்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 1980-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தி பதவிக்கு வந்தார்.
பிந்தரன் வாலாவின் சீக்கிய சுதந்திரப் போராட்ட பிரிவினைவாத குழு தனிநாடு கேட்டு போராட்டம் நடத்தியது. அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித் தலமான பொற்கோயிலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற 1984-ல் ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதற்கு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று பெயர்.
அப்போது நடந்த போரில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியால் இந்திரா காந்தி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
சீக்கியர்களும் இந்திரா காந்தி மீது கோபம் கொண்டனர். இதன் காரணமாக சீக்கியர்களான அவரது சொந்த மெய்க்காவலர் இருவராலாயே இந்திரா காந்தி டெல்லியில் அவரது வீட்டிலேயே 1984 அக்டோபர்31-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் (30-10-1984) ஒரிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் பேசும்போது "என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன் நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை பலப்படுத்தும் வளப்படுத்தும்"என்று பேசினார்.
-க.ரவீந்திரன்,
22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,
ஈரோடு - 638002.