முதலாளியம்மா அழைக்க, வேகமாய்ச் சென்றான் டிரைவர் மூர்த்தி. 'என்னப்பா.... தினமும் எல்லா சிக்னலிலும் எல்லா பிச்சைக்காரர்களுக்கும் பிச்சை போடறியாமே?" முதலாளியம்மா கேட்க,
"ஆமாங்க.... தர்மம் தலை காக்கும்!ன்னு சொல்லுவாங்க!"
"அந்த வியாக்கியானமெல்லாம் எங்களுக்கும் தெரியும்... இத்தோட சரி... இனிமே அய்யாவை கூட்டிட்டு போகும்போது எந்த சிக்னலிலும் எந்த பிச்சைக்காரனுக்கும் பிச்சை போடக் கூடாது!.. என்ன?... ஐயா ரொம்ப சங்கடப்படறார்!... அவருக்குக் கேவலமாய் இருக்காம்!.. இனிமே நீ பிச்சை போட்டே... உன்னை வேலையிலிருந்தே தூக்கிடுவேன்!" மிரட்டலாய் சொன்னாள் முதலாளியம்மா.
அதிர்ந்து போன மூர்த்தி எதுவும் பேசாமல் நகர்ந்தான். அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தையும் நிறுத்திக் கொண்டான்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள், பிசியான நேரத்தில் நடு ரோட்டில் கார் "பொசுக்"கென்று ஆஃப் ஆகிப் போனது.
மூர்த்தியும் விடாது முயற்சித்தான். கார் ஸ்டார்ட் ஆகாமல் அடம் பிடித்து நின்றது பின்னாலிருந்து வாகனங்களின் ஹாரன் சப்தம் முழங்கியது.
"என்னப்பா? என்ன பண்றே?... வண்டிய எடுப்பா" பின் இருக்கையிலிருந்து முதலாளி பரபரத்தார்.
விசில் அடித்தபடி ஓடி வந்த டிராபிக் கான்ஸ்டபிள் கத்த, காரிலிருந்து கீழிறங்கி, அதைத் தள்ளிக் கொண்டு போய் சாலை ஓரமாய் நிறுத்த பலரையும் உதவிக்கு அழைத்தான் மூர்த்தி.
எல்லோரும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.
கைகளை பிசைந்தபடி நின்ற மூர்த்தியைக் காப்பாற்றும் விதமாய் ஓடி வந்தனர் ஐந்தாறு பிச்சைக்காரர்கள் அதில் ஒருவன் ஊனம் வேறு.
எல்லோருமாய் சேர்ந்து காரை சாலையின் இடதுபுற ஓரத்திற்கு கொண்டு வந்து சேர்க்க, டிராபிக் கிளியர் ஆனது. இதற்குள் அலுவலகத்திற்கு போன் செய்து வேறொரு காரை ஏற்பாடு செய்திருந்தார் முதலாளி ஐயா
அந்தக் கார் வந்ததும், "மூர்த்தி.. காரை ரிப்பேர் பண்ணி எடுத்துட்டு வா... நான் முன்னாடி போறேன்' என்ற முதலாளி, காரில் ஏறும் முன், "மூர்த்தி... மறக்காமல் இவர்களுக்கு இன்னைக்கு பிச்சை போட்டுடு... இனி மேலும் தினமும் போடு" என்றபடி கார்க் கதவை சாத்தினார்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்