பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி
மதுரை அருகே அழகர் கோயில், பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகரையும், மலையையும் காவல் காத்து வருகிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. மிகப்பெரிய அரிவாள்கள் பல பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது.
அநியாயங்கள் செய்பவர்களை தண்டிக்காமல் விடமாட்டார் என்பதால் இந்த பகுதி மக்களுக்கு கருப்பண்ணசாமி மீது பயமும் பக்தியும் அதிகம். பதினெட்டாம்படியான் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் கருப்பண்ணசாமியை வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.
கருப்பண்ணசாமி எப்படி காவல் தெய்வமாக இங்கே வந்தார் என்பதே ஒரு சுவாரஸ்யமான கதையாகும். கேரளாவை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் பாண்டிய நாட்டுக்கு வந்தான். திவ்விய தேசமான திருமாலிருஞ்சோலைக்கு வந்திருந்த போது அங்கே எழுந்தருளியிருக்கும் கள்ளழகரின் அழகைக் கண்டு மயங்கினான். அழகரை கடத்திக்கொண்டு போய் தனது நாட்டில் வைத்துக்கொள்ள திட்டமிட்ட அந்த அரசன் நாடு திரும்பிய உடன் மந்திர,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 மந்திரவாதிகளை தேர்வு செய்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பினான்.அழகரை தூக்கி வரும்படி கட்டளையிட்டான். பதினெட்டு பேரும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள். மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி பதினெட்டு பேருக்கு முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே மந்திரவாதிகள் அழகர்மலைக்கு வந்தனர்.
அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம், கருப்பண்ணசாமி அப்படியே அழகரின் அழகில் மயங்கி மெய் மறந்து நின்றது. 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து, தங்க ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணத்தில் கருவறை நோக்கி சென்றனர். இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட பக்தர் ஒருவர், ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல, மக்கள் அனைவரும் திரண்டு வந்தனர். மந்திரவாதிகள் 18 பேரையும் கொன்று, பெரிய கோபுரத்தின் முன்பாக பதினெட்டு படிகள் செய்து, படிக்கு ஒருவராக புதைத்தனர்.மந்திரவாதிகளுக்கு காவலாக வந்து மயங்கி நின்ற கருப்பசாமிக்கு காட்சி தந்த கள்ளழகர் அழகர் மலையையும், தன்னையும் காவல் காக்குமாறு உத்தரவிட்டார். இதனையேற்று கருப்பசாமி அழகர் மலையிலேயே தங்கி இன்று வரை காவல் காத்து வருகிறார் என்பது நம்பிக்கை. 18 பேருடன் வந்த அவர் பதினெட்டு படிகளின் மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தருகிறார்.
- க. வில்லவன் கோதை
4/123, கயத்தூர்
ஏனங்குடி - 609701