அந்தக் கல்யாண பந்தியில் எனக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவனை எரிச்சலோடு பார்த்தேன்.
இலையெங்கும் ஏகப்பட்ட பதார்த்தங்களை வாங்கிக் குவித்து வைத்துக் கொண்டு, அதை கோழி கொத்துவது போல் ஒற்றை விரலில் தொட்டுத் தொட்டுச் சாப்பிட்டான்.
அது கூட எனக்கு ஆத்திரத்தை தரவில்லை இலையில் அத்தனை பதார்த்தங்கள் அப்படியே வைத்துக் கொண்டு ப்ரிமாறுபவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு வாங்கி இலையை நிரப்பி கொண்டிருந்தான்.
"ச்சை... இந்தக் கல்யாணத்தை நடத்துற பொண்ணு வீட்டுக்காரங்க எத்தனை சிரமப்பட்டு கடனை வாங்கி உடனை வாங்கி... இந்த கல்யாணத்தை நடத்துறாங்க... அது கூடப் புரியாம இப்படிச் சாப்பாடு ஐட்டங்களை வேஸ்ட் பண்றானே இந்தப் பாதகன்"
அப்போது என் ஆத்திரத்தை நூறு மடங்கு அதிகரிக்கச் செய்யும் விதமாய் அத்தனை பதார்த்தங்களோடு அவன் இலையை மூடிவிட்டு எழுந்து நகர்ந்தான்.
ஆத்திரத்தில் பற்களை "நற்...நற"வென்று கடித்தேன்.
சாப்பிட்டு முடிந்து கை கழுவச் செல்லுமிடத்தில் அந்த நபர் என்னிடம் வசமாகச் சிக்கினான்.
"சார் ஒரு நிமிஷம்... நீங்க பொண்ணு வீட்டு சைடா? ... இல்லை மாப்பிள்ளை வீட்டு சைடா?" கேட்டேன்.
"ஏன்?... எதுக்குக் கேட்கறீங்க?" அவன் சற்றும் பயமில்லாமல் சாதாரணமாய்க் கேட்டான்.
"இல்லை... இலை நிறைய ஐட்டங்களைக் கேட்டு கேட்டு வாங்கி வெச்சீங்க... சரி நல்லா சாப்பிடுற ஆளு போலிருக்கு!ன்னு நினைச்சேன்... ஆனா நீங்க அத்தனை ஐட்டங்களையும் வேஸ்ட் பண்ற மாதிரி இலையைப் 'பொசுக்'குன்னு மூடி விட்டு வந்திருக்கீங்களே?... இந்தக் கல்யாணத்தை நடத்துறவங்க எத்தனை கஷ்டப்பட்டு இதை நடத்துறாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?.... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?" பொரிந்து தள்ளினேன்.
மெலிதாய்ச் சிரித்தவன், "சார் கொஞ்சம் என் கூட வாங்க!" என்று சொல்லி என்னை மண்டபத்திற்கு வெளியே அழைத்து வந்து, அப்படியே பின்புறம் கூட்டிச் சென்றான்.
"அங்க பாருங்க சார்"
அவன் காட்டிய திசையில் பார்த்தேன். கிட்டத்தட்ட 20 பேர் மண்டபத்திலிருந்து வெளியே விழும் இலைக்காகக் காத்திருந்தனர்.
"சார் வெளிய வந்து விழற அந்த இலைக்காகத்தான் சார் அவங்க உட்கார்ந்துட்டிருக்காங்க!...நாமளே நம்ம இலையைக் காலி பண்ணித் துடைச்சு வச்சுட்டா... இவங்களுக்கு என்ன சார் இருக்கும்?.... ஸ்வீட் இருக்குமா?...பூரி கிடைக்குமா?... இல்லை புதினா சாதம்தான் கிடைக்குமா?.. கிடைக்காது சார்... அதான் நான் நிறைய வாங்கி மூடி வச்சிட்டு வந்தேன்... என்னுடைய இலை வெளியே வந்து விழுந்தால் நிச்சயம் மூணு பேராவது வயிறு நிறையச் சாப்பிடுவாங்க!...... சார் அங்க பாருங்க சார்" பேசிக் கொண்டிருந்தவன் நிறுத்தி விட்டுக் கையை காட்டினான்.
காம்பவுண்டுக்குள்ளிருந்து இலைகள் வெளியே கொட்டப்பட்டன.
பாய்ந்து சென்ற பட்டினில் கூட்டம் நாய்களை விடக் கேவலமாய் இலைகளைப் பறித்து ஏதாவது மிச்சம் மீதி இருக்கிறதா என்று தேடினர்.
சட்டென்று அந்த நபரின் கையைப் பற்றி, "சாரி சார்" என்றேன்.
ஒரு புன்னகையை எனக்கு பதிலாய்த் தந்துவிட்டு நடந்தார் அந்த மனிதர்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்.