tamilnadu epaper

பயங்கொள்ளலாகாது பாப்பா!

பயங்கொள்ளலாகாது பாப்பா!


"மித்ரா...! ஓடாதே..! நில்லு. " என்று மகளைப் பிடிக்க , கண்ணன் பின்னாடி ஓடிய யசோதை ப் போல் ஓடிக் கொண்டிருந்தாள் கமலா. 


" மாட்டேன்...! போ...! நீ என்னை சாயங்காலம் கோவிலுக்கு கூட்டிட்டு போவேன் என்று சொன்னாதான் சாப்பிட வருவேன் " என்று பிடிவாதம் பிடித்தாள் எட்டு வயது செல்லப் பெண் மித்ரா. 


'அழகே உன்னை ஆராதிக்கிறேன் ' என்று பார்த்த உடனே சொக்கி நிற்க வைக்கும் அழகு குட்டி தேவதை மித்ரா.  


 பல வருடங்கள் குழந்தை இல்லாமல், மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி உறக்கமின்றி தவித்து இருக்கிறாள் கமலா. வேண்டாத தெய்வம் இல்லை. எத்தனை வைத்தியங்கள். ஏதோ கடவுள் அருளால் அழகான பெண் குழந்தை பிறந்தாள். 


இன்று குட்டி தேவதையாக வலம் வரும் அவளை தங்கள் உயிரை விட மேலாக போற்றி வந்தனர் கமலாவும் அவள் கணவன் ரகுவும். 


ஐந்து மணி ஆனவுடன் மித்ரா அன்னையிடம், " வாம்மா, கோவிலுக்கு போகலாம், அந்த குளத்தின் படியில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கலாம்" என்றாள்.


 மாமியாரிடம் சொல்லிக் கொண்டு கமலா கிளம்பினாள். 

பாட்டி, " மித்ரா..! பத்திரமா போய் வா. யார் கூப்பிட்டாலும் போகாதே! யாராவது 

கடத்திட்டு போனால், கண்ணை குருடாக்கி, கையை முடமாக்கி பிச்சை எடுக்க வைப்பாங்க. ஜாக்கிரதை." என்று சொல்லி அனுப்பினார். 


கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, குளக்கரையில் உட்கார்ந்து சந்தோஷமா விளையாடி விட்டு திரும்பினாள் மித்ரா. வெளியில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்தாள் அம்மா. அவர்களை கடந்து வந்தனர் அம்மாவும் பொண்ணும்.


வீட்டிற்கு வந்த மித்ரா, சாப்பிட்டு தூங்கினாள். தூக்கத்தில் கத்தினாள். எல்லோரும் என்ன என்று கேட்டதற்கு பதில் இல்லை. அதற்கு பின் மித்ரா பேசவில்லை. 'கொரானாவாக இருக்குமோ? அதனால் பேச முடியவில்லையோ?' என்று கவலைப் பட்டார்கள் பெற்றோர்.


மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் இரண்டு நாட்களுக்கு மருந்து கொடுத்தார். கொரானா பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. மனநல‌ மருத்துவருக்கு பரிந்துரை செய்தார். 


  பரிசோதனைகள் தொடர்ந்தது. பெற்றோர்கள் கவலை அடைந்தனர். "பரிகாரம் செய்யுங்க , கோவிலுக்கு போங்க " பல இலவச ஆலோசனைகள். 


குழந்தையை கடைசியாகச் சென்ற கோவிலுக்கு அழைத்துச் சென்றார் மருத்துவர். அந்த கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் குழந்தையைப் பார்த்ததும் மயக்கம் அடைந்தாள். ' ஆழ் மனதின்' உள் சென்று அறியும் முறையில் மருத்துவர் பேசாத காரணத்தை ஆய்ந்து அறிந்தார். 


பாட்டி, குழந்தை கடத்தல் பற்றி சொன்னது ஆழ் மனதில் பதிந்தது. அதே சமயம் அந்த பிச்சைக்கார குழந்தையை பார்த்ததும் மனதில் பயம் ஏற்பட்டுள்ளது. அன்றே பாட்டி பார்க்கும் தொலைக்காட்சி நாடகத்தில் குழந்தையை கடத்திச் செல்லும் காட்சியைப் பார்த்ததும் 'பயம் 'மனதின் ஆழத்திற்கு சென்றது. 


 அந்த குழந்தை இடத்தில் தன்னைக் கற்பனைச் செய்து கொண்டு தான் கடத்தப் பட்டு இருப்பதாக நினைத்துக் கொண்டாள். வாய் திறந்தால், 'அடிப்பாங்க' என்று பேச பயந்து பேசாமல் இருந்து இருக்கிறாள். 


மருத்துவர், காரணம் தெரிந்ததால் விரைவில் குணப்படுத்தினார் . மாத்திரையும் மருத்துவர் தந்த சிகிச்சையும் சில மாதங்களில் பழைய மித்ராவாக துள்ளிக் குதித்து ஓடினாள். 


மருத்துவர் குழந்தைக்கு புரியும் படி கூறி அந்த குழந்தையின் பெற்றோர்கள் பிச்சைக்காரர்கள். கடத்தப்பட வில்லை என்று தெளிவு படுத்தினார்.


"குழந்தைகள் நம் வார்த்தைகளை நம்ப கூடியவர்கள். அதனால் கவனத்துடன் குழந்தைகளிடம் பேச வேண்டும்". என்று பெற்றோர்க்கும் பெரியவர்களுக்கும் அறிவுரைக் கூறினார்.


மித்ரா அந்த குழந்தைக்கு தேவையானவற்றை அளித்து அந்த பெண்ணை பள்ளியில் சேர்க்கக் கேட்டுக் கொண்டாள்.


"வாங்க.. மா..!.கோவிலுக்கு போகலாம்" என்ற அழைத்த மித்ராவுடன் பாட்டியும் சென்றார். 


-ருக்மணி வெங்கட்ராமன் 


இந்த கதை என்னுடைய சொந்த கதை என்று உறுதியளிக்கிறேன்.