சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் 41 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி அடுத்த பந்தில் ஒரு ரன் அடிக்க முயற்சித்து மறுமுனைக்கு செல்வார். அப்போது அவர் மறுமுனையை அடைந்த பின்னர் பீல்டர் எறிந்த பந்தை தனது கைகளால் தடுத்து நிறுத்தினார். அவர் எல்லைக்கோட்டை தாண்டினாலும், கிரிக்கெட் விதிப்படி இது தவறாகும்.
ஐ.சி.சி. விதிமுறையின் படி, பீல்டரின் அனுமதி இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் பந்தை தடுத்து நிறுத்தினால் தவறாகும். எதிரணி வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தால் அந்த பேட்ஸ்மேன் உடனடியாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறுவார். எனவே நேற்று விராட் கோலிக்கு பாகிஸ்தான் வீரர்கள் அப்பீல் செய்திருந்தால் அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விராட் கோலியை இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அவர் (விராட் கோலி) பந்தை தனது கைகளால் தடுத்து நிறுத்தினார். பாகிஸ்தான் வீரர்கள் இது குறித்து நடுவரிடம் அப்பீல் செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் விராட் அப்போதே ஆட்டமிழந்து வெளியேறி இருப்பார். பந்து வந்து கொண்டிருக்கும்போது விராட் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. அதிர்ஷ்டவசமாக யாரும் அப்பீல் செய்யவில்லை" என்று கூறினார்.