அப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு நேரம் .எனக்கு மிகவும் கடினமான கணக்கு பரிச்சை.
கணக்கென்றாலே எனக்கு வேப்பங்காய் .
தாத்தா தான் கூட உட்கார்ந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார் .
தாத்தா கணக்கு அருமையாக போடுவார். நான் கூட அவரை தாத்தா உங்களுக்கு 'சீமாச்சு' என்று பெயர் வைத்ததை விட, 'ராமானுஜம்' என்ற பெயர் வைத்திருக்கிலாம் என்று சொல்லி இருக்கிறேன்.
ரசித்து சிரித்து இருக்கிறார்.
அவர் சிரிக்கும் போது நான் கேட்டிருக்கிறேன்..
" தாத்தா .. இவ்வளவு அன்பா இருக்கீங்களே? அப்புறம் ஏன் பாட்டியை அடிக்கிறீங்க? ஏன் குடிச்சிட்டு வரீங்க? ஏன் கெட்ட வார்த்தைகள் திட்டுகிறீர்கள் என்று.!"
அதற்கு " உனக்கு புரியாதும்மா இன்னும் கொஞ்சம் வயசு ஆகணும் உனக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்க " என்றார்.
அவர் பாட்டியோடு சண்டை போடுவது போதெல்லாம் நான் பயந்து சுவரோடு சுவராய் ஒட்டி இருக்கிறேன்.
தாத்தா இறந்து போனார்.
இப்படியாக கணவனின் குடி, அடி, வசவுகள் நிறைந்தது பாட்டியின் மணவாழ்க்கை. பாட்டி நிறைய அழுதாள். எனக்கும் கூட தாத்தாவின் இறப்பு பேரிழப்பு தான் .அந்த கணக்கு பாடத்தை இனி யார் சொல்லித் தருவார்கள்?
பதினோராவது நாள் சடங்குக்காக, பாட்டிக்கு புடவை எடுக்க, அம்மாவும், அத்தையும் கடைக்குக் கிளம்பினர்.
அந்த மாலைப் பொழுது, இப்போதும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது.
அம்மா பாட்டியிடம் போய் `"அம்மா, உங்களுக்கு புடவை வாங்கப்போகிறோம். என்ன 'கலர்' புடவை வேண்டும்? " என்று கேட்கிறார். எனக்கு அம்மா மீது எரிச்சலாக இருந்தது. பாட்டி இதற்கு என்னவென்று பதில் சொல்லுவார்... இப்ப போய் இந்த கேள்வியை கேட்கிறாளே என்று அம்மாவுக்கு எது பிடித்ததோ அதை வாங்கிக் கொண்டு வர வேண்டியதுதானே? `புருசனே போயிட்டாரு, எனக்கு என்ன கலர்ல புடவை இருந்தா என்ன ?’ என்பது போன்ற பதிலை எதிர்பார்த்திருந்த என்னுடைய பிற்போக்குத்தனமான பொதுப்புத்தியில் சம்மட்டியாக விழுந்தது பாட்டியின் பதில் .
`எனக்கு மாம்பழ மஞ்சள் வண்ணத்தில் புடவை வேண்டும்மா. அழுத்தமான மஞ்சள் இல்லை. அந்த நிறத்தில் புடவை எடுங்கள்’ என்று விவரித்துச் சொன்னார். அசந்து போனேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை
தாத்தாவின் இறப்பு அவருக்கு அளித்த 'விடுதலை' உணர்வை கொஞ்சமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஏனோ சற்று அதிர்ச்சியாகக் கூட இருந்தது.
ஆர். சுந்தரராஜன்
சிதம்பரம்-608001