ஊரே விழா கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் .
வருடத்துக்கு ஓரு முறை நிகழும் கோவில் திருவிழாவில் இன்று தேரோட்டம் .
கோயில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காகவே, சென்னையிலிருந்து தன் மகள் தீபாவுடன் வந்திருந்தாள் ரஞ்சனி .
அவளது கணவர் ராகவன் அலுவலத்தில் ஆடிட்டிங், வேலைபளு , என்று சொல்லி வர மறுத்துவிட்டான் .
பொதுவாகவே கோவில் , திருவிழா போன்றவற்றில் அவனுக்கு ஆர்வம் இல்லை.
மேலும், ரஞ்சனி இல்லாத அந்த சில நாட்களாவது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கலாம் என நினைப்பான் .
ரஞ்சனியும் , ராகவனை வற்புறுத்தாமல் மகளை அழைத்துக்கொண்டு தாய்வீடு வந்து சேர்ந்தாள் .
இரண்டு மூன்று நாட்களாக அம்மாவுடன் ,கோவில், திருவிழா கடைகள் என சுற்றி சுற்றி வந்து மகிழ்ச்சியாக , பொழுதை கழித்தாள் ரஞ்சனி .
இதோ இன்று தேரோட்டம் . எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், தேரை வடம் பிடித்து இழுக்க ஆர்வமுடன் ஏராளமான ஆண்களும் , பெண்களும் காத்திருந்தார்கள் .
ரஞ்சனி, தன் மகளையும் அழைத்துக்கொண்டு அப்பாவுடன் தேர் வடம்பிடிக்க வேகமாக நடந்து கொண்டிருந்தாள் .
அப்போது அந்த தெருவின் திருப்பத்தில் ஓரமாக கையில் குழந்தையுடன் ஓரு பெண் நின்று கொண்டிருந்தாள் .
ரஞ்சனியை பார்த்ததும் , “அம்மா தர்மம் பண்ணுங்கம்மா,”என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
அவளை பார்த்ததும் , வெறுப்புடன் “தள்ளி போ , கிட்டே வராதே “என கூறிக்கொண்டே வேகமாக நடந்தாள் ரஞ்சனி.
அந்த பெண்ணும் ,விடாமல் இவளிடம் ,”அம்மா ,ஏதாவது தர்மம் பண்ணுங்கமா”என்று வற்புறுத்தி கேட்டப்படி தொடர்ந்து வந்தாள் .
“ போன்னு சொன்னா போகமாட்டியா, எங்களை தொந்தரவு செய்யாதே “ என அந்த பிச்சைக்காரியை திட்டிகொண்டே நடந்த ரஞ்சனி , சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் தடுமாறி அருகிலிருந்த சாக்கடைக்கு அருகில் விழுந்தாள் .
இதை பார்த்தவுடன் கூட வந்த ரஞ்சனியின் அப்பா ,பதறிப்போய் பேத்தியை ,நிற்க வைத்துவிட்டு ஓடிப்போய் ரஞ்சினியை தூக்கினார். அருகில் இருந்தவர்களும் ரஞ்சனிக்கு உதவி செய்தார்கள் .
அதிர்ச்சியும் ,அவமானமும் அடைந்த ரஞ்சனி,உடன் எழுந்து நின்று ,மகளின் கையை பிடித்து இழுத்தபடி வேகமாக நடக்கலானாள் .
சிறிது தூரம் கடந்தபிறகும் அந்த பிச்சைக்காரி தொடர்ந்து கூப்பிடுவதை கவனித்து ,வெறுப்புடன் கூட்டத்தில் புகுந்துவிட்டாள் .
ஒரு வழியாக தேரை வடம் பிடித்து கொஞ்ச தூரம் இழுத்த பிறகு அப்பாவுடன் திருப்தியுடன் ரஞ்சனி வீடு திரும்பி கொண்டிருந்தாள் .
கொஞ்ச தூரம் நடந்தவுடன் எதேச்சையாக தன் கழுத்து பகுதியை தடவி பார்த்தவள் , தான் அணிந்திருந்த தங்க நெக்லஸ் காணாமல் அதிர்ச்சியடைந்தாள் .
உடனே ,அப்பாவிடம் கூற, அவரும் அதிர்ச்சியுடன் “என்னம்மா சொல்றே ?
சரியா பாரு , நீ நெக்லசை போட்டுக்கிட்டு வந்தியான்னு ஞாபகப்படுத்தி பாரு,”என்றார் .
அதற்குள் ரஞ்சனியின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ,”இல்லப்பா , நல்லா ஞாபகம் இருக்கு , போட்டுக்கிட்டுதான் வந்தேன் . அவருக்கு தெரிஞ்சா என்னை கோபமா திட்டுவார்னு “
சொல்லிட்டு அழ ஆரம்பித்தாள் .
“சரி ,சரி ,அழாத , வந்த வழியே திரும்பி போய் பார்ப்போம் , ஏதாவது மண்ணுல விழுந்து புதைந்து போய் இருக்கான்னு பார்க்கலாம் , கிடைக்கலனா , போலீஸ்ல புகார் செய்யலாம்”என மகளை சமாதானம் செய்தார் அவர்.
அவர்கள் வந்த பாதையிலேயே சென்று பார்த்தபோதும், நெக்லஸ் கிடைக்கவில்லை .
“அப்பா அந்த பிச்சைக்கார பொண்ணு நம்மகிட்ட பிச்சை கேட்டு பின்னாடியே வந்துகிட்டு இருந்தாளே? ஒருவேளை அவ கையில கிடைச்சு எடுத்துட்டு போயிருப்பாளோ”?என சந்தேகத்துடன் கேட்டாள்.
“தெரியல , எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்துடலாம் , யாராவது பிக்பாக்கெட் அடிக்கிறவங்க எடுத்திருந்தா ,கண்டுபிடிச்சு வாங்கி கொடுத்துடுவாங்க” என்றார் ரஞ்சனியின் தந்தை .
வழி நெடுகிலும் ரஞ்சனி அழுதுகொண்டும், புலம்பிக்கொண்டும் வந்தாள் .
காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக்கொண்ட காவலர் ,”ஊர்ல திருவிழா கூட்டம் “ நீங்கதான் உங்க நகையெல்லாம் பத்திரமா பாத்துக்கணும் ,”
நாங்களும் கண்டுபிடிச்சி தர நடவடிக்கை எடுக்கறோம் , இப்போ நீங்க போயிட்டு வாங்க என்றார் .
அப்போது ,காவல் நிலையத்தின் வாசலில்,காலையில் ரஞ்சனி விரட்டிய பிச்சை எடுக்கும் பெண் வந்து நின்றாள் .
அதை கவனித்த காவலர் , அவளிடம், “ஏய் , இங்க உள்ள எல்லாம் வரக்கூடாது , அப்படியே போய்டு” ,என மிரட்டும் தொனியில் கூறினார் .
அதற்கு அந்த பெண் , அவரிடம் , “இல்லைங்க ஐயா , அந்த அம்மாகிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் ,
அந்தம்மா கிட்ட என்ன பேசப்போறே ?என கேட்டார் .
அப்போது ,அவளை திரும்பி பார்த்த ரஞ்சனி , உடனே காவலரிடம் “இந்த பெண் காலையிலிருந்து பிச்சை கேட்டு என்னை தொந்தரவு செய்கிறாள்” என்றாள் .
அப்போது அங்கு வந்த பெண் காவலர் அந்த பெண்ணை அடிக்க கை ஓங்கியபடி , “மரியாதையா ஓடிப்போய்டு , புடிச்சு உள்ள போட்டுடுவேன்” என்றாள் .
அந்த பெண் ,”அம்மா என்னை தப்பா நினைக்காதீங்க ,
அந்தம்மா ,காலையில தேருக்கு போகும்போது தடுக்கி விழுந்துட்டாங்க ,
அப்போ அவங்க போட்டிருந்த இந்த நகை கழண்டு சாக்கடையில விழுத்துருச்சு , அதை இவங்களும்
பாக்கல ,வேறு யாருமே பாக்கல,. அது என் கண்ணுல பட்டது, நான் உடனே சாக்கடையில் கையை விட்டு நகையை எடுத்துட்டு ,
“அம்மா , அம்மான்னு” கூப்பிட்டுக்கிட்டே பின்னாடியே போனேன் ., இவங்க கவனிக்காம கூட்டதுக்குள்ள போய்ட்டாங்க என முடித்தாள் .
நானும் , இவங்கள எல்லா இடத்துலயும் தேடி பார்த்தேன் ,பாக்க முடியல , அதனால போலீஸ் ஸ்டேஷனிலே ஒப்படைச்சுடலாம்முன்னுட்டு
இங்க வந்தேன் , வந்த இடத்துல அவங்களே இங்கு இருக்காங்க என்றாள் .
இதை கேட்டவுடன் ரஞ்சனியின் முகம் பிரகாசமானது .
ஆனால் , அந்த பெண் காவலர், அந்த பெண்ணின் முடியை பிடித்து உலுக்கி “என்னடி ,நகையை திருடிட்டு கதை சொல்றியா” என கேட்டாள் .
அந்த பெண் அழுதுகொண்டே ,”பொய் சொல்லலமா , நீங்களே அந்த அம்மா கிட்ட கேளுங்க” என்றாள் .
உடனே ,ரஞ்சனி அவசரமாக , மேடம் , அவ சொல்றது உண்மைதான் , நான் காலையில் தேருக்கு போகும்போது ,
கல் தடுக்கி கீழ விழுந்துட்டேன் , அப்போ இந்த நெக்லஸ் கழண்டு விழுந்ததை நான் கவனிக்கல , விழுந்த அதிர்ச்சியில் நான் உடனே எழுந்து நடந்து போய்ட்டேன் என்றாள் .
ஆமாம் மேடம் , இந்த பொண்ணு கூப்பிட்டப்பகூட கவனிக்காமல் வேகமா போய்ட்டோம் என்றார் ரஞ்சனியின் அப்பா .
பிறகு ,அந்த பெண்ணிடமிருந்து நெக்லஸை வாங்கி ரஞ்சனியிடம் கொடுத்த காவலர் , “இனிமேலாவது கவனமா இருங்க” என்றார்.
நீங்க கொடுத்த புகார் மனுவை திரும்ப வாங்கிக்கிடுங்க என்றாள் .
ரஞ்சனி ,அந்த பெண்ணிடம் , “நீ என்னை தொடர்ந்து வந்தவுடன் ,
பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதாக நினைத்து ,வேக, வேகமாக சென்றுவிட்டேன், என்னை மன்னித்துவிடு” என்றாள் .
நீ செய்த உதவிக்கு மிகவும் நன்றி என்றபடியே ,அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தாள் ,
அதை பெற்றுக்கொள்ள மறுத்த அந்தப்பெண் , ஏதோ ,”வவுத்து
பொழப்புக்காக பிச்சை எடுக்கிறேன் ,
இவ்ளோ ரூவால்லாம் எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தாள் .
ரஞ்சனி அவள் போவதையே வியப்புடன் பார்த்தவாறு நின்றாள் .
-கோபாலன் நாகநாதன்.
சென்னை -33.