tamilnadu epaper

பிடிமானம்

பிடிமானம்

   

               சாலாட்சி தயக்கத்துடன் வந்து நிற்க; உமையாள் " "என்ன" என்பது போல் ஏறிட்டுப் பார்த்தாள். " மேடம்! எனக்கு மனசு சரியில்லை! இன்று மதியம் நான் குன்றக்குடி கோவில் போய் சாமி கும்பிட்டு நாளை வேலைக்கு வரேன்" என்றாள் சாலாட்சி.

" அதற்கென்ன; தாராளமாய் போய் வாயேன். நான் பார்த்துக்கிறேன்" என்றாள் உமையாள்.

" ஏன் மனசு சரியில்லை; என்று கேட்க மாட்டீங்களா" என்று மனதிற்குள் குமைந்தவாறே கிளம்பினாள், சாலாட்சி. 

           சாலாட்சி வீட்டில் சமையலுக்கு உதவி செய்பவள் மட்டுமல்ல; உமையாளுக்கு உற்ற தோழியும் கூட. " அவள் கவலை என்னவாயிருக்கும்" என்று யோசித்து இவளுக்கு கவலையாயிற்று.

            சற்று நேரத்தில் தோட்டத்தின் கேட்டை திறந்து கொண்டு பேராசிரியர் சண்முக நாதனும் சாலாட்சியின் பையன் சிவ குமரனும் வந்தார்கள். " வாங்க" என்று கணவனுக்கு முகமன் கூறின உமையாள் சிவ குமரனிடம், " உன் அம்மா வீட்டுக்கு கிளம்பி போய் விட்டாளே! இன்று குன்றக்குடி போய் சாமி கும்பிட்டு நாளைக்குத்தான் வருவேன் என்று சொன்னாள். மனசு சங்கடமாயிருக்கு, என்றாள்,. என்ன வருத்தம் அவளுக்கு? " என்று கேட்டதற்கு சிவ குமரன் பேசாமல் நின்றான். " துபாயிலிருந்து ஒரு மாசம்தான் வந்திருக்கே. வந்ததும், வராததுமாக என்ன பிரச்சனை? பாவமாய் இருந்தது; அவளைப் பார்க்க. நான் ஒன்றும் விசாரிக்கவில்லை. நாளை மனது சமாதானமாகி அவளே சொல்வாள்" என்றாள்

                  " பட பட வென பேசிட்டே போகாதே. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சற்று பொறுமையாக கேள்" என்றார், சண்முக நாதன்.

                ஊஞ்சல் சங்கிலியை பற்றியவாறு, நின்றிருந்த சிவ குமரன், " மேடம்! நீங்கதான் அம்மாவிடம் பேசி புரிய வைக்க வேண்டும்." என்றான்

              "ராதிகாவின் அப்பா அவளுக்கு வீட்டடி மனை கொடுத்திருக்கிறார்.

 அதில் வீடு கட்ட பணம் பேங்கில் ஏற்பாடு செய்து விட்டேன். ஆயினும் நம் பங்கு பணத்திற்கு அம்மா தனது பதினைந்து பவுன் நகையை விற்று கொடுத்திருக்கிறாள். பெரிய உதவிதான். ஆயினும் வீட்டை தன் பேரிலும் பதிவு செய்ய வேண்டுமென நிர்ப்பந்தம் செய்து, இரண்டு நாட்களாக வீட்டில் ரகளை. ராதிகா இதற்கு சம்மதம் சொல்ல தயங்குகிறாள். அம்மா கொடுத்த நகைக்கு பதிலாக தன் நகையை அம்மாவுக்கு கொடுத்து விடுவதாகவும்;வீடு என் பேரிலும் அவள் பேரிலும்தான் பதிவு செய்ய வேண்டுமென முரண்டு பிடிக்கிறாள். அம்மா பேரில் இருந்தால் நாளை சட்ட சிக்கல் வரும், என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் அதை அம்மாவிடம் எப்படி சொல்வது? அக்கா வள்ளியும். தங்கை தேவயானியும் எப்படி பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இருவர் திருமணத்தையும் நான் தான் பொறுப்பேற்று நடத்தினேன். எனக்கே இப்போது இரண்டு குழந்தைகள் ஆயிற்று. இனியாவது நான் வாழ்க்கையைப் பார்க்க வேண்டாமா?இத்தனை நாள் சுமுகமாகப் போய் கொண்டிருக்கும் உறவு முரண்பட்டு நிற்கிறது. அதுதான் பிரச்சினை" என்று புலம்பினான்

                   உமையாள்" சரி ! நீ கிளம்பு! நாங்கள் அம்மாவிடம் பேசிப் பார்க்கிறோம்" என்றாள் மறு நாள் வேலை முடித்து கிளம்பாமல் சாலாட்சி இங்கேயே படுத்து விட்டாள். "என்ன! சாலாட்சி வீட்டுக்கு போகவில்லையா? என்று உமையாள் கேட்க" ஆமாம்! அது ரொம்ப முக்கியம்! " என்று சலித்துக் கொண்டாள்

                " என்ன சாலாட்சி? என்ன பிரச்சினை," என்று கேட்க; " சிவகுமரன் கட்டிவரும் புது வீட்டிற்கு என் பதினைந்து பவுன் நகையையும விற்றுக் கொடுத்திருக்கேன். வீட்டை என் பேரில் பதிவு செய்ய மாட்டானாம். அவன் பேரிலும், ராதிகா பேரிலும்தான் பதிவு செய்வானாம். என்ன நியாயம் இது? கொடுத்தும் கொல்லை வழி அனுப்பும் மருமகளையும் மகனையும் எந்தக் கணக்கில் வைக்கிறது? பணம் கொடுத்ததிற்கு எனக்கொரு பிடிமானம் இருக்க வேண்டாமா? இப்பவே இப்படி இருக்க, வயதான காலத்தில் நிற்க ஒரு நிழல் இல்லாம போகுமே," என்று ஆத்திரத்துடன் பேசினாள்

              " சாலாட்சி! நான் சொல்வதை அமைதியாகக் கேள். வள்ளிக்கும் தேவயானிக்கும் சிவ குமரன் தானே பணம் புரட்டி கல்யாணம் செய்து இன்று வரை சீர் செனத்தி செய்கிறான். தேவயானியை படிக்க வைத்து வேலை வாங்கி கொடுத்திருக்கிறான்‌ அப்போதெல்லாம் அவன் உன்னிடம் ஏதாவது காசு பணம் கேட்டானா? தன் வருமானம் முழுவதும் இவர்களுக்கும் வீட்டிற்கும் தானே செலவழித்தான்,! அவனுக்கு எந்த பிடிமானம் இருந்தது? ராதிகாவும் ஒத்துழைத்ததால் தானே அவனால் செய்ய முடிந்தது? துபாயில் அவன் இருக்கும்போதும் ராதிகா உன்னை நல்லபடியாகத் தானே நடத்துகிறாள்‌. உன்னிடம் இருக்கும் நகைக்கு ஏற்கனவே அக்காவும் தங்கையும் போட்டி போடுகிறார்கள். நகையை நீ ராதிகாவுக்கு கொடுத்தால் சும்மா இருப்பார்களா? வயதான காலத்தில் நம் போன்ற சாதாரணமானவர்கள் பெண் வீட்டில் போய் இருக்க முடியுமா? வீடு உன் பேரிலும் இருந்தால் நாளை அதில் அவர்கள் பங்கு கேட்க மாட்டார்கள் : என்று நிச்சயமாக சொல்ல முடியுமா? அதற்கு இப்போதே அவர்களிடம் பேசி விடுதலை பத்திரம் எழுதி வாங்க முடியுமா? உன் பிடிமானம் ராதிகாவும் சிவகுமரனும் உன் மேல் வைத்துள்ள அன்பும், மரியாதையும் மட்டும்தான். இத்தனை வருடங்களிலும் அவர்கள் உன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்று சிந்தித்துப் பார். உனக்கே புரியும்." என்று உமையாள் பேசுவதைப் கேட்க , சாலாட்சிக்கு ஏதோ புரிவது போல்தான் இருந்தது. " சரி மேடம்! நான் கிளம்புகிறேன். பேத்தி ஸ்கூலில் இருந்து வரும் நேரமாச்சு. ராதிகாவும் சாப்பிடாமல் எனக்காக காத்திருப்பாள்" என்று கூறிய சாலாட்சியைப் பார்த்து மனம் மகிழ்ந்தாள், உமையாள்.

 

-சசிகலா விஸ்வநாதன்