யாரோ ஒரு பெண் கத்திக் கொண்டிருக்க, நர்ஸிடம் விசாரித்தார் லேடி டாக்டர் குணவதி.
"அந்த பொம்பளை தன்னோட மருமகள் ராணியை மூணாம் நம்பர் பெட்ல டெலிவரிக்காக கொண்டு வந்து அட்மிட் பண்ணி இருக்காங்க... ஆக்சுவலா அந்தப் பெண்ணுக்கு டெலிவரிக்கு இன்னும் ஒரு மாசமிருக்கு"
"அட அதுக்குள்ள என்ன அவசரமோ?".
'அந்த மருமகள் ராணி வயித்துல பேபியைச் சுமந்துகிட்டு... டூவீலர் ஓட்டிட்டு போய் கீழே விழுந்துட்டாளாம்... வயித்துல அடி.. கேஸ் ரொம்ப சிக்கலாயிடுச்சு!.. "என் பேத்தியோ... பேரனோ... நல்லபடியா பொறக்காமப் போகட்டும் இந்த மருமகளைத் தலை முழுகிட்டு என் மகனுக்கு வேற பொண்ணைக் கட்டி வெச்சிடறேன்"னு மாமியார்க்காரி கத்திக்கிட்டு இருக்காங்க"
மெலிதாய்ச் சிரித்தார் டாக்டர் குணவதி.
"சரி பத்தாம் நம்பர் பெட்ல அந்த சாந்தாவுக்கு எப்படி இருக்கு?...எப்ப டெலிவரி எதிர்பார்க்கலாம்?" கேட்டார்.
"அது இதை விடச் சோகக் கதை டாக்டர்... "ஏற்கனவே ரெண்டு பெண் குழந்தைகள் இருக்குது...மூணாவதும் பெண் குழந்தையைப் பெத்தே... வீட்டுக்கே வராதே அப்படியே உங்கப்பனூட்டுக்குப் போயிடு"ன்னு சொல்லிட்டு போயிட்டானாம் சாந்தா புருஷன்"
"ஹும்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை... எல்லாம் ஆண்டவன் சோதனை!" சொல்லியவாறு நகர்ந்தார் டாக்டர் குணவதி.
மறுநாள் காலை, மூன்றாம் நம்பர் பெட்டிலிருந்த ராணிக்கும், பத்தாம் நம்பர் பெட்டிலிருந்த சாந்தாவிற்க்கும் ஒரே நேரத்தில் பிரசவம் ஆனது.
வயிற்றில் அடிபட்டிருந்த ராணியின் குழந்தை இறந்தே பிறந்தது.
பெண் குழந்தையை வேண்டாம் என்று இருந்த சாந்தாவிற்கு மறுபடியும் பெண் குழந்தையே பிறந்தது.
நர்ஸ் வந்து தகவல் சொன்னதும் சில நிமிடங்கள் தன் தாடையைத் தட்டிக் கொண்டு யோசித்த லேடி டாக்டர் குணவதி, "நர்ஸ் இப்ப நான் செய்யப் போற காரியம் தவறா?.. சரியா?..ன்னு எனக்கு தெரியாது... ஆனால் இந்த காரியத்தாலே மூணாம் நம்பர் ராணியோட மாமியார் சந்தோசப்படுவார்... பத்தாம் நம்பர் சாந்தா புருஷன் நிம்மதி அடைவான்!..." என்றார்.
"புரியலையே டாக்டர்' நர்ஸ் புருவங்களை நெரித்துக் கொண்டு பார்க்க,
"சாந்தா பெற்ற பெண் குழந்தையை ராணி கிட்ட வெச்சுடு... "பெண் குழந்தை எந்தவித சேதாரமும் இல்லாமல் பொறந்திடுச்சு"ன்னு சொல்லிடு... அந்த
மாமியார்க்காரி சந்தோஷமாயிடுவா"
"டாக்டர்...."
"அதே மாதிரி இறந்தே பிறந்த ராணியோட குழந்தையை பத்தாம் நம்பர் சாந்தா பெட்ல போட்டுட்டு... சாந்தா புருஷன் கிட்ட "குழந்தை இறந்தே பிறந்திருச்சு!"ன்னு சொல்லிடு".
அடுத்த நாள் காலை ராணியின் மாமியார் பேத்தியை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு சந்தோசமாய் வெளியேற.
அன்று மாலை சாந்தா கணவன் தன் மனைவியை மட்டும் சந்தோசமாய் டிஸ்சார்ஜ் செய்து கூட்டி சென்றான்.
"நடந்தவை நடந்தவையாகட்டும் இனி நடப்பவை நல்லவையாகட்டும்!" என்று யாரோ பாடிக் கொண்டே சென்றனர்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்.