நான் வெட்டலை
நான் வெட்டலை..... நான் வெட்டவே இல்லை......
அப்படியெல்லாம் சொன்னா, எல்லாம் நம்பிடுவாங்களா! ஊருக்கே தெரியுமே!
நீதான் இந்த வேலையை செய்ய றேன்னு.....!
அய்யோ.... நான் செய்யலை! என்னை வுட்டுடு.....என்னை பயமுறுத்தாதீங்க....
திரும்பவும் நான் செய்யலை....என்னை வுட்டுடுனு எப்படி உன்னால சொல்ல முடியுது! இந்த மூனு அடுக்கு மாளிகை...ஊரு பூரா அடுக்கு மாடி குடியிருப்பா கட்டிகிட்டு இருக்கியே...... இந்த சொத்தெல்லாம் உனக்கு எப்படி வந்தது?
எங்களை மாதிரி வாயில்லா ஜீவன்களை வெட்டி வித்துபுட்டு கிடைக்கிற பணத்துலதான இப்படி சொகுசா ஊருலேயே பெரிய பணக்காரனா வாழ்ந்துகிட்டு இருக்க!
இப்படி அநியாயமா சேர்த்து வச்சிருக்குற சொத்துக்கள பாதுகாக்கறத்துக்குத்தான அரசியல் கட்சியில தஞ்சம் புகுந்துருக்கேன்னு ஊருல எல்லாருக்கும் தெரியுமே!
உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? உன்னை நாங்க சும்மா விடமாட்டோம்.....
பளபளக்கும் வாளை வச்சு எங்களை துண்டு துண்டா அறுத்து போடறப்ப எங்களுக்கு எப்படி வலிக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருப்பீயா?
இப்படி கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாம எங்களை வெட்டி சாய்க்கிறீங்களே....!
அநியாயமா எங்களை கொலை பண்ணிட்டு இருக்குற உங்களையெல்லாம்
எப்படி நிம்மதியா தூங்க விடுவோம்?
இல்லை... இல்லை...
நான் செய்யல..நான் வெட்டல....என்னை ஓன்னும் பண்ணீடாதீங்க...!
அய்யோ... எனக்கு ரொம்ப பயமாயிருக்கு! என்னை வுட்டுடுங்க....
அப்படியெல்லாம் சொல்லி நீ தப்பிக்க முடியாது..ஆயிரக்கணக்கா எங்களை வெட்டி சாய்ச்சுகிட்டு இருக்கற உன்னை மாதிரி இருக்கற படுபாவிக்கெல்லாம் இனிம எப்படி தூக்கம் வருதுன்னு பார்த்துடுவோம்...
நாங்க எல்லாம் இப்ப ஒன்னா சேர்ந்துட்டோம்!
இனிமேதான் இருக்கு! எங்க ஆட்டமெல்லாம்.....பாரு...வாய்பேச முடியாம இருக்கற மரமாகிய எங்களை வெட்டி சாய்கிற உன்னை மாதிரி மரம்வெட்டிகளால
மனித இனத்திற்கு இனிமேதான் ஆபத்தே இருக்கு..
நாங்க பாட்டுக்க கடும் வெயில்லயும், மழையிலயும் ஒரே இடத்துலே இருந்து கிட்டு பூமிக்கு பாதுகாப்பா இருந்து கிட்டு இருந்தோம்...
எல்லா உயிரினங்களுக்கும் நல்லா நிழலை தந்துகிட்டு இருந்தோம்.... எங்களாலதான் பூமிக்கு நல்ல மழை கிடைச்சுது..... பூமியும் குளுமையா இருந்துச்சு.... நல்ல ஆக்ஸிஜனை கொடுத்துகிட்டு இருந்தோம்.... அதுக்கு ஏதாவது நாங்க உங்ககிட்ட பலனை எதிர்பார்த்தோமா?
உன்னை மாதிரி மனுசங்க எங்களை அழிச்சிகிட்டு இருக்கறதுனால, சூரியனுக்கே கோபம் வந்து உங்களை அழிக்க புறப்பட்டுடுச்சு.... சுட்டெரிக்கும் வெப்பத்துலேயே வெந்து சாகப் போறீங்க....!.
உன்னை நாங்க ஏதும் செய்யப்போறதுல்ல.... மனுசங்க நீங்க செய்யிற இந்த கொடிய செயலால பூமியில வாழ்ந்துகிட்டு இருக்குற மத்த வாயில்ல ஜீவன்களும் அழிஞ்சு போயிகிட்டிருக்கு!
ஆமாம்...அதோட ஆறறிவு படைச்ச அதிபுத்திசாலி மனுசங்களும் அழியப் போறீங்க...
என்னை வுட்டுடுங்க
.என்னை வுட்டுடுங்க....
அய்யோ.... வேண்டாம்..... நான் ஒன்னும் செய்யல.... நான் ஒன்னும் செய்யல....
என்னாங்க! ஏங்க இப்படி புலம்பிக்கிடே படுத்திருக்கீங்க.. எந்திரிங்க.......
தேவி.... நான் எங்க இருக்கன்...என்னை சுத்தி கையில பெரிய அரிவாளோடு மரங்கள் எல்லாம் நின்னுகிட்டு என்னை வெட்ட ப் பார்க்குதுங்க... எனக்கு தூக்கமே வரலை..ஒரே பயமாயிருக்கு....
என்னாங்க...கண்ணை திறந்து பாருங்க.... நீங்க நம்ம வீட்டு பெட்ரூம்ல தான் படுத்திருக்கீங்க..... திடீர்னு உங்களுக்கு என்ன வந்துடுச்சு....எந்திரிங்க .... இந்த தண்ணீயை குடிங்க....
என்னா ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்க.....
தன்னை ஆசுவாசப்படுத்திகிட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்த நாகலிங்கம், தனது மனைவி கொடுத்த பாட்டிலை வாங்கி தண்ணீரை ஒரு மடக்கு குடித்தார்.....
ஏங்க... என்னாங்க ஆச்சு! ஓரு மாதிரியா இருக்கீங்க.... படுக்கையில புலம்பிகிட்டே வேற இருந்தீங்க.....
சொல்லுங்க...என்று நாகலிஙகத்தின் மனைவி தேவி பதறினாள்.......
தேவி.... நல்லாத்தான் தூங்கிகிட்டு இருந்தன்.... திடீர்னு ஒரு கனவு... அதுவும் கெட்டக் கனவு.... அந்த கனவுல என்னைச் சுத்தி எல்லா மரங்களும் ஒன்னுகூடி கையில அரிவாளை வச்சுகிட்டு என்னை வெட்டிச் சாய்க்க பார்க்குது.... எனக்கு ஒரே பயமாயிருக்கு....!
சரி... அதெல்லாம் ஒன்னுமில்ல...ஏதோ பிரமை யா இருக்கும்....!
சரி ..படுங்க.... எல்லாம் சரியாயிடும்....!
என்று சொல்லியபடி தேவி மீண்டும் தூங்குவதற்கு தயாரானாள்......
+++++++++++++++++++
ஆக்கம்:
--------------
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.