tamilnadu epaper

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே

மணியின் தந்தை சுந்தருக்கு ஒரு கெட்ட பழக்கம். வழியில் எவரேனும் தவறிவிட்ட பொருள் இருந்தால் எடுத்துக் கொண்டு விடுவான். அது யாருடையது என்று தெரிந்தாலும் திருப்பிக் கொடுக்க மாட்டான்.

ஒருமுறை சுந்தர் ஆறு வயது மகன் மணியுடன் ஸ்கூட்டரில் காய்கறிக் கடைக்குச் சென்றான். வண்டியை நிறுத்திக் கடையை நோக்கிச் செல்கையில், ஒரு பெண் பை நிறைய காய்கறியுடன் அவர்களைத் தாண்டிச் சென்றாள். அவளுடைய பையிலிருந்து மணிபர்ஸ் வீதியில் விழுந்த்து.

ஓடிச் சென்று பர்ஸை எடுத்த மணி “ஆன்ட்டி, ஆன்ட்டி” என்று கூப்பிட்டுக் கொண்டே பின்னால் சென்று பர்ஸை கொடுத்தான். பர்ஸில் கத்தை கத்தையாக நோட்டுகள். அந்தப் பெண்மணி “குட் பாய்” என்று மணியைப் பாராட்டிவிட்டுச் சென்றாள்.

“எத்தனை பணம் அந்த பர்ஸில், கோட்டை விட்டு விட்டேனே என்று நொந்து கொண்டான் சுந்தர். மகனிடம் சொன்னான்.

“மணி, வீதியில் கீழிருந்து எது கிடைத்தாலும் அதை எடுத்து உன்னுடைய பையில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்தப் பின் அதை அப்பாவிடம் கொடுக்க வேண்டும். அப்பா அதை உரியவரிடம் சேர்ப்பித்து விடுவார்” என்றான் சுந்தர்.

கறிகாய் வாங்கிய பின் ஸ்கூட்டர் சாவியைத் தேடினான் சுந்தர். கிடைக்கவில்லை. விதியை நொந்து கொண்டே மணியை ஸ்கூட்டரில் அமர்த்தி மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீட்டிற்கு வண்டியைத் தள்ளிச் சென்றான்.

வீட்டில் நுழைந்தவுடன் என்ன ஆயிற்று என்ற கேட்ட மனைவிக்கு “சாவி, தொலைந்து விட்டது” என்றான் சுந்தர்.

அப்போது மணி தன்னுடைய பாக்கெட்டிலிருந்து வண்டி சாவியை எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.

“அப்பா, நீங்க கடையில பர்ஸ் எடுக்கும் போது சாவி கீழே விழுந்தது. நீங்க தரையில விழுந்ததை எடுத்து வீட்டில வந்து தரணும்னு சொன்னீங்க இல்லையா. அதனால தான் சாவியை இப்ப எடுத்துக் கொடுத்தேன்” என்றான் மணி.

கே.என்.சுவாமிநாதன், சென்னை