tamilnadu epaper

பிறவிக் கடமை

பிறவிக் கடமை

 

என்னுடன் பணி புரியும் நாராயணன் வீட்டில் திருட்டுப் போய் விட்டதற்காக கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்த போதுதான் அந்த இன்ஸ்பெக்டரை பார்த்தேன்.

 

லாக்கப்பில் வைத்து இரண்டு பேரை துவம்சம் செய்து கொண்டிருந்தார்.

 

  "ஐயோ... அம்மா" என்று அவர்கள் கத்திய கத்தலில் என் ஈரக்குலையே அறுந்து விழும் போலானது. "இவனெல்லாம் மனுசனா?.. இல்ல மனுஷன் உருவத்தில் திரிகிற ராட்சசனா?"

 

அடித்து முடித்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் வெளியே சுவரோரமாய் உட்கார்ந்து இருந்தவனை நான்கு மிதி மிதித்து விட்டு தன் மேஜைக்கு வந்து என் நண்பன் நீட்டிய புகாரை வாங்கிக் கொண்டு, சில சம்பிரதாயக் கேள்விகளைக் கேட்டு முடித்து விட்டு, "நீங்க கிளம்புங்க... நாங்க எப்ப வேணாலும் போன் பண்ணுவோம்.... உடனே புறப்பட்டு வந்திடணும்... என்ன?" என்றார் தகரக் குரலில்.

 

 "சரி" என்று தலையாட்டி விட்டு வெளியேறினோம்.

 

 "இவனை மாதிரி ஒரு மிருகத்து கையில் அதிகாரம் என்பது நம்மளோட தலைவிதி!" என்றேன்.

 

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

 

 கோவிலுக்கு வெளியேயிருந்த சர்பத் கடையில் அமர்ந்து கூல்ட்ரிங்ஸ் அருந்திக் கொண்டிருந்தேன். 

 

வந்து நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கிய அதே இன்ஸ்பெக்டர் நேரே வரிசையாக அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களிடம் சென்றார்.

 

 "போச்சு... இன்னைக்கு பிச்சைக்காரன்களுக்கு செம பூஜைதான்" நினைத்துக் கொண்டேன்.

 

 ஜிப்பிலிருந்து கான்ஸ்டபிள் கொண்டு வந்து கொடுத்த வேஷ்டி, சட்டை, சேலைகளை அங்கிருந்த பிச்சைக்காரர்களுக்கு விநியோகம் செய்து விட்டு, உணவுப் பதார்த்தங்கள் அடங்கிய கேரிபேக்கையும், கொஞ்சம் பணத்தையும் தன் கையாலேயே அவர்களுக்கு வழங்கி விட்டு வேக வேகமாகச் சென்று ஜிப்பில் ஏறிப் பறந்தார்.

 

நான் சர்பத்து கடைக்காரரிடம் விசாரித்தேன். "ஆமாங்க... பத்து நாளைக்கு ஒரு தரம் வந்து துணிமணிகள், சாப்பாடு, பணம் எல்லாம் கொடுத்துட்டு போவார்... சில பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இந்த பிச்சை எடுக்கிற தொழிலில் இருந்து விடுவித்திருக்கிறார்!" என்றார்.

 

சக ஊழியரின் கம்பளைண்ட் பற்றி விசாரிக்க சென்ற போது, இன்ஸ்பெக்டரிடம் நேரிலேயே கேட்டேன். "சார் இங்கே பார்த்தா வேற மாதிரி இருக்கீங்க!...கோயில்ல பார்த்தா வேற மாதிரி இருக்கீங்களே?"

 

  "ஹா... ஹா" என்று ஓங்கிச் சிரித்தவர், "இது உத்தியோகக் கடமை... இங்கே இப்படித்தான் இருந்தாகணும்!... அது பிறவிக் கடமை!.. மனிதனாய்ப் பிறந்தால் சக மனிதருக்கு இயன்றவரை உதவணும்... அதுதான் மனித பிறவியின் கடமை" என்றார்.

 

 நான் மெய் சிலிர்த்துப் போனேன்.

 

 (முற்றும்)

 

 முகில் தினகரன்,

 கோயம்புத்தூர்.