tamilnadu epaper

புனிதர்

புனிதர்

புனிதர்

 

    " திருவெண்காடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்தார் ஆசிரியர் நரசிம்மன்.

 

     நரசிம்மனின் மனைவி ரேவதி மாணவர்களுக்கு தமிழ் திருமுறை இலவசமாக கற்றுக் கொடுத்தார் . அவர்களுக்கு ஒரே மகள் அமிர்தா . சின்ன குடும்பம் ஆனாலும் சிந்திக்க வைக்கும் குடும்பம் .

 

     மாணவர்களுக்கு தரமான கல்வி அறிவியல் அறிவு , புதுப்புது கண்டுபிடிப்பு தேடல் . அறிவியல் அரங்கம் என்று புதுமை பல செய்தார் நரசிம்மன்.

 

      மாணவர்களும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து ஆர்வமாக அறிவியல் பாடம் கற்றுக் கொண்டனர் .

 

    அதன் தொடர்ச்சியாக அறிவியல் கண்காட்சி ஒன்றை நடத்திட பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மாணவர்களுக்கு புதுப்புது லேட்டஸ்ட் இன்வென்சன் , டெக்னாலஜியில் பல கருவிகளை கண்டுபிடித்து இயக்க பயன்படுத்த வழிகாட்டினார் .

 

     மாணவர்களும் புதிது புதிகாக தங்கள் கண்டுபிடிப்புகளை கொண்டு வந்து பார்வைக்கு வைத்தனர் .

 

      அன்று அறிவியல் கண்காட்சி துவங்கியது அந்த ஊரில் இருந்த அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியோடு கலந்த கொண்டனர்.

 

    அந்த மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு கருவிகளுக்கு அதை செய்து காட்டிய மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு அளித்து பாராட்டினார் . பள்ளி கல்வி நிர்வாகத்தையும் பாராட்டினார் மாவட்ட ஆட்சியர்.

 

      அறிவியல் ஆசிரியர் நரசிம்மனின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்து கெளரவித்து ஷீல்டு நினைவுப் பரிசாக வழங்கினார் மாவட்ட ஆட்சியர் .

 

     பள்ளி நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் சென்ற பிறகு பள்ளியின் சார்பாக நரசிம்மனுக்கு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினார்கள் . மாணவ மாணவியர்களும் தங்கள் அன்பை அறிவியல் ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டனர் .

 

      மிகுந்த மகிழ்ச்சியில் மனநிறைவில் அனைவரிடம் இருந்து விடை பெற்ற அறிவியல் ஆசிரியர் நரசிம்மன் விரைவாக வீடு திரும்பினார் .

 

         அறிவுத்திறன் குன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் தன் மகள் அமர்த்தாவை வீட்டுக்கு அழைத்து வர சென்றார் எந்த சலனமும் இல்லாமல் நரசிம்மன் .

 

- சீர்காழி. ஆர். சீதாராமன்.

- 9842371629 .