tamilnadu epaper

பெரிய மனசுக்காரங்க..

பெரிய மனசுக்காரங்க..

        

            காய்கறி விற்கும் கிழவிக்காக காத்திருந்தாள் கல்பனா. திடீரென்று வீட்டிற்கு விருந்தாளி வந்து விட்டனர். கையில் காசு இல்லை. வீட்டுக்காரர் ஆட்டோ

டிரைவர். சவாரிக்கு சென்று விட்டார். இன்று ஒரு நாள் மட்டும் கடன் சொல்லி கிழவியிடம்

காய்கறி வாங்கிக்கொள்ளலாம் என்ற தெம்போடு வீட்டு வாசலில் நின்றிருந்தாள்.

        "பாட்டியம்மா...நாளைக்கி காசு தரேன்

காய்கறி தரியா..."

         "மாமுலா கொடுக்குறவங்களுக்கே

காய்கறி இல்லம்மா..." கடன் என்று கேட்டவுடனே சாக்கு சொல்லிவிட்டு கிளம்பினாள் கிழவி. 

  ஓர் அப்பார்ட்மெண்டில் நான்கைந்து பெரிய இடத்து வாடிக்கையை பிடித்து வைத்திருந்தாள் . அவர்களுக்கு விற்றது போக மீதமுள்ளதை இரண்டு தெருவில் விற்றுவிட்டு கிளம்பிவிடுவாள்.

          அன்று சொல்லி வைத்தாற்போல்

மாமுலாக வாங்கும் பெரிய இடத்துவீட்டில்

யாரும் காசு கொடுத்து வாங்கவில்லை.

     " என்னபாட்டி... மாமுலா உன்கிட்டதான் காய்கறி வாங்குறோம்...இன்னைக்கி ஒருநாள் கடனா கொடுத்தா என்ன...?"

         "என் யாபாரமே அன்னன்னக்கி வித்து

காசாக்குனாதான் முதல் தேறும்....

கடனா கொடுத்டுட்டு மறுநாள் முதலுக்கு

நான் எங்க போறது... இன்னைக்குன்னு பாத்து எல்லாருமே கடன் சொல்றீங்க...

கோவிச்சிக்காம கடன் சொல்லாதீங்க..."

         எவ்வளவோ கேட்டு பாத்தும் யாரும்

காசு கொடுத்துவாங்கவில்லை கடனாகத்தான் வாங்கினார்கள். பெரிய இடத்து வாடிக்கைக்காரர்களிடம்

மறுத்தும் பேசமுடியவில்லை

          " விளங்காதவ மொத யாபாரமே கடனுக்கு கேட்டா... எல்லாருமே கடன் சொல்றாங்க..." கல்பனாவை மனதுக்குள் திட்டிக்கொண்டே" சரி நாளைய மொதலுக்கு எப்படியாவது சமாளிக்கவேண்டியதுதான்..." மீதமுள்ள காய்கறியை விற்றுவிட்டு கிளம்பினாள்.

           மறுநாள் , கிழவி நினைத்தது நடக்கவில்லை. வியாபாரிகள் யாரும் கடனுக்கு காய்கறி தரவில்லை.

"இன்னைக்கி யாபாரம் கெட்டு போச்சே..."

மார்க்கெட்டுக்கு வெளியே கவலையோடு

உட்கார்திருந்தாள்.அந்தபக்கமாக காரில் வந்த வாடிக்கைக்காரம்மா கிழவியை

பார்த்து என்ன என்று கேட்க அவளும் நிலமையை சொல்ல கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள். 

        அடுத்து மார்க்கெட்டில் சவாரியை

இறக்கிவிட்டு திரும்பிய ஆட்டோ ஒன்று , கிழவி அருகே வந்து நின்றது.கல்பனாவின் கணவர். பாட்டியின் நிலவரத்தை தெரிந்து

கொண்டு,தன்னிடம் இருந்த ஐநூறு ரூபாய்க்கு வியாபாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொடுத்து கிழவியையும் ஆட்டோவில் ஏற்றி தெருவில்

வந்து இறக்கினான். கல்பனாவை பார்த்தவுடன் கிழவி கூனி குறுகிப் போனாள்.

             பெரியஇடத்து வாடிக்கையாளர்களை நம்பி வாழ்ந்த கிழவி, இல்லாதப்ப உதவிய பெரிய மனசுக்காரங்களை தன் மனதில் மரியாதையுடன் பார்த்தாள்.

 

சுகபாலா,

திருச்சி.