tamilnadu epaper

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!

2025 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் நிலையில் மகரசங்கராந்தி எனப்படும் தைப்பொங்கல் தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்து, மகத்தான மகசூலை பெற்று, சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாளை அவர்களுடன் நாமும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும், உணவளித்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு எந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். தேவர்களுக்கு ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாத காலம் தட்சிணாயன காலம் என்றும், அது இரவு பொழுதாகவும், தை முதல் ஆனி வரையிலான ஆறு மாத காலம் உத்தராயண காலம் என்றும், அது பகல் பொழுதாகவும் இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 2025 ஆம் ஆண்டு தை மாதம் பூச நட்சத்திரம், கும்ப லக்னத்தில் பிறக்க இருக்கிறது. தை மாதம் பிறக்கும் முதல் நாள் தேவர்களுக்கு உத்திராயண காலம் துவங்குகிறது. வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி, ஒளிமயமான எதிர்காலம் துவங்கக் கூடிய இந்த நல்ல நாளில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதால் சகல விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. -

 2025 பொங்கல் வைக்க சிறந்த நேரம்: இவ்வருடம் தை மாதம் பிறக்கும் பொழுது சுக்கிர ஹோரையில் பொங்கல் வைத்தால் சுபயோக புண்ணிய பாக்கியங்கள் கிடைக்கும். சுக்கிர ஹோரை செவ்வாய்க் கிழமையில் காலை 8 மணியில் இருந்து 9:00 மணி வரையிலான காலமாக இருக்கிறது. இவ்வருடம் இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் யோகமாக அமையும். வழக்கமாக பொங்கல் வைக்கக் கூடிய நல்ல நேரம் அன்றைய நாள் (14/01/2025) காலை 7:30 மணியிலிருந்து 8:30 மணி வரையிலும், 10:30 மணியிலிருந்து 11:30 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்திலும் நீங்கள் பொங்கல் வைத்து சூரியனை வழிபடலாம்.

பொங்கல் வைக்கும் முறை : பசுஞ்சாணத்தால் மேடை அமைத்து அதில் பசுஞ்சாண பிள்ளையார் வைத்து முதலில் வழிபட வேண்டும். இரண்டு பசுஞ்சாண பிள்ளையார் தயார் செய்து கொள்ள வேண்டும். அவருக்கு மஞ்சள், சந்தன, குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூசணிப் பூ போன்றவற்றாலும் மேடையை அலங்கரியுங்கள். பொங்கல் கோலம் வாசலில் போடுவது போல, இம்மேடையில் சூரிய கோலம் வரைய வேண்டும். பின்னர் தலைவாழை இலை போட்டு அதில் காய்கறிகளும், பழங்களும் வைத்து பிள்ளையாரை முதலில் வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.

போகிப் பண்டிகை அன்று வாங்க வேண்டிய 5 மங்களப் பொருட்கள்:

பிள்ளையாருக்கு சிவப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிள்ளையாரை இவ்வாறு வணங்கிய பின்பு புதுப் பானையில் வழக்கம் போல மஞ்சள் கொத்து கட்டி, பொங்கல் தயார் செய்து, குலவை சத்தம் போட்டு, சூரிய காயத்ரி மந்திரம் உச்சரித்து, சூரிய பகவானை நோக்கி நன்றி செலுத்தி வழிபட வேண்டும். மகர சங்கராந்தியில் நாமும் சூரியனுக்கு இவ்வாறு நன்றி செலுத்துவதன் மூலம் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும். துன்பங்கள் மறைந்து வறுமை நீங்கி சுகபோக வாழ்க்கை கிட்டும். உற்றார், உறவினர்களுடன் நண்பர்களுடன் மகிழ்ந்து உரையாடி இந்த பொங்கலை இனிமையாக கொண்டாடுங்கள். நம் அனைவருக்கும் இந்த பொங்கல் புதுமையான, ஏற்றம் நிறைந்த நற்பலன்களை நல்கட்டும். பொங்கலோ பொங்கல்!
___________அனுப்புதல்:
ப.கோபிபச்சமுத்து
பாரதியார் நகர் பிரதான சாலை 
கிருஷ்ணகிரி -1