tamilnadu epaper

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம்


      நல்லமாங்குடி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை இந்த ஆண்டிலும், சிறப்பாக நடத்துவதற்கு கிராமத் தலைவர் நல்லதம்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செயலாளர் விசுவநாதன், பேசும் போது இந்த ஆண்டு நடக்க இருக்கும் கோவில் திருவிழாவில் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியே நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

பொருளாளர் பூபதி தனது பங்கிற்கு பக்கத்து ஊரிலுள்ள பொம்மலாட்டக் குழுவினரை அழைத்து வந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தினால் ஒரு மாற்றமாக இருக்கும் என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய செயற்குழு உறுப்பினர் செகநாதன் ஆர்கெஸ்ட்ரா வேண்டாம். சினிமா பாடல்களை அவர்கள் ஆபாசமாக பாடி ஆடுவார்கள்.அதனால் கோவில் திருவிழா வில் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று தீர்மானமாகத் தெரிவித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த கிராம மக்களில் சிலர் ஆர்கெஸ்ட்ரா தான் வேண்டும் என்று பலத்த சத்தமிட்டனர்.

அப்போது கிராமத்தலைவர் எழுந்து நின்று சற்று அமைதியாக இருங்கள்.கூச்சல் போடவேண்டாம்... நாம் எல்லாம் பேசி நல்ல முடிவை எடுக்கலாம் என்று அனைவரையும் அமைதி படுத்தினார்.

சற்று நேரத்தில் கூச்சல் அடங்கி அமைதி நிலவியது.

கிராமத் தலைவரே மீண்டும் பேசினார்.வருடா வருடம் நாம் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆர்கெஸ்ட்ராவில் பாடுகிறவர்கள் இது கோவில் திருவிழா என்று கூட பார்க்காமல் சினிமா பாடல்களை ஆபாசமான முறையில் ஆடிப்பாடுவது அருவருப்பாக இருப்பதாக பலபேர் குறைசொல்லி க் கொண்டே இருக்கிறார்கள். பெண்களும் திருவிழாவில் கலந்து கொள்வதால் இதனை பார்ப்பதால் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விடும்.ஆதலால் இந்த ஆண்டு புதுமையாக பொருளாளர் தெரிவித்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தினால் கோவில் திருவிழா சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அடுத்து பேசிய செயலாளர் விசுவநாதன் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நமது தமிழர்களின் பாரம்பரியமான கலையாக, அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான கலையாக இருந்துள்ளது. இது ஒன்றும் புதுமையான கலை இல்லை. நமது பழமையான கலை நிகழ்ச்சி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கலை நலிந்து விடாமல் இருக்க கிராமக் கோவில் திருவிழாக்களில் இதுபோன்ற பழமையான கலைகளுக்கு நாம்தான் வாய்ப்பு தரவேண்டும்.

இங்கே இருக்கிற நம்மில் எத்தனை பேருக்கு பொம்மலாட்டம் பற்றி தெரியும். எத்தனை பேர் பொம்மலாட்டம் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது.

நான் கூட ஆர்கெஸ்ட்ரா நடத்தலாம் என்றுதான் விருப்பம் தெரிவித்தேன்.

ஆனால் பொம்மலாட்டம் போன்ற பழமையான, பாரம்பரியக் கலைகளைப் போற்றி பாதுகாக்கவே நம்மவூரு கோவில் திருவிழாவில் பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நடத்துவதே சிறப்பாக அமையும்.

கூட்டத்தில் ஏகமனதாக பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

மாரியம்மன் கோவில் திருவிழாவின் மூன்றாம் நாள் ஸ்ரீகனநாதர் பொம்மலாட்ட சபாவின் சிவசக்தி என்ற நாடகம் நடைபெறுவதாக விளம்பரமும் செய்யப்பட்டது.

நிகழ்ச்சி நடைபெறும் அன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் வைதேகி பொம்மலாட்டம் நிகழ்ச்சியை கண்டு ரசித்து வெகுவாக பாராட்டிப் பேசினார்.

மேலும் நமது பாரம்பரிய மிக்க இதுபோன்ற கலைகளை அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டுமென்றால், நாம் நடத்தும் விழாக்கள் அனைத்திலும் பொம்மலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று கிராம நிர்வாகிகளை பாராட்டினார்.பொம்மலாட்டக் குழுவினரையும் போற்றி புகழ்ந்து பேசினார். பொம்மலாட்டம் நிகழ்ச்சியை பக்கத்து ஊர் மக்களும் திரளாக கலந்து கொண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

-------------------------------------


ஆக்கம்:

-நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.