tamilnadu epaper

பொருத்தம்

பொருத்தம்

அவளுக்கும் எனக்கும்பொருந்தாதுப்பா...விட்டுடுங்க இந்த பேச்சை என்று கடுப்பும் வெடிப்பும் ஆக சொல்லிவிட்டு நகர்ந்தான் சரவணன்.

 

ஏன் பொருந்தாது? எப்படி பொருந்தாது? அவளை விட நல்ல பெண் உனக்கு கிடைப்பாளா? சொல்லிட்டு போடா என கர்ஜித்தார் சுந்தரம்.

 

பிறகு சமையல் கட்டு பக்கம் திரும்பி பார்த்தார் அங்கே எந்த சத்தமும் வரவில்லை. ஏ பாப்பா எங்கே இருக்க என்று தன் மனைவியை அழைத்தார்.

 

என்னங்க என வந்த மனைவியிடம் சிடுசிடுத்தவாரே "என்னடி அவனுக்கு ஆச்சி...சரியான கிறுக்கு பயலா இருக்கானே...என் நண்பன் துரையோட மக பிரியாவை பெண் பார்க்க போலாம்னு கூப்பிட்டா அவளுக்கும் எனக்கும் பொருந்தாது அந்த பேச்சையே விட்டுடுங்கன்னு சொல்லிட்டு போறான் உன் மகன். என்னதான் நெனச்சிட்டு இருக்கான் மனசுல? ஒருவேளை யாரையாவது காதலிக்கிறானாமா? கொஞ்சம் கேட்டு சொல்லு அவளையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என கோபத்தோடு வெளியே போய் விட்டார்.

 

ஏன் தன்மகன் சரவணன் அப்படி சொன்னான் என்று அங்கயற் கண்ணிக்கும் புரியவில்லை.ஏனென்றால் சிறுவயதில் இருந்து ஒருவருக்கொருவர் அதிகம் அறிமுகம் உண்டு. அதிகம் பழகிக் கொள்ளவில்லை என்றாலும் பார்த்தால் புன்னகைத்துக் கொள்வதும்,ஹாய் சொல்லிக் கொள்வதும் உண்டு. பிரியாவும் நல்ல அழகி தான் குண நலன்களிலும் உயர்ந்தவள்தான் இந்த காலத்திலும் யாரிடத்தும் அதிகம் பழகிடாத பெண். எந்த குறையும் சொல்லிட முடியாத பெண் அவள். அங்கயற்கண்ணிக்கு ஒரே ஆற்றாமையாக இருந்தது.

 

 செல்போனை எடுத்து சரவணனுக்கு ஒரு கால் செய்தாள்

"ஹலோ சரவணா எங்கடா இருக்க"

 "ஆபீசுக்கு போயிட்டு இருக்கேன்மா" "வண்டில போறியா...சரி... சரி ஓய்வாய் இருக்கும் போது போன் பண்ணு"

" இல்லம்மா டீக்கடையில் டீ குடிக்கிறேன் நீ சொல்லுமா" என்றான் சரவணன்.

 

 ஒன்னும் இல்லப்பா உன் அப்பா பிரியாவை பொண்ணு பார்க்க போலாம் என்று கேட்டாராம் நீ கடுப்பாக பேசிட்டு வந்துட்டியாம் என்ன காரணம்னாவது சொல்லிட்டு போயிருக்கலாமில்ல.

அம்மா அவள் பேச்சையே எடுக்காதம்மா அவளுக்கும் எனக்கும் செட்டாகாது..

 

ஏன் செட் ஆகாது?அவள் நல்ல குணம் உள்ளவதானே? யாரையாச்சும் லவ் பண்றாளா?

 

அதெல்லாம் இல்ல ....அவள் பேச்சு வேணாம் என்ன விடு என்றபடி ஃபோனை வைத்து விட்டான்.

 

அரை மணி நேரம் கழித்து ஆச்சரியப்படும் விதமாக பிரியாவும் அவள் அம்மா மீனாவும் வந்தார்கள் வீட்டுக்கு.

 

"அடடே வாங்க மீனா, வாம்மா பிரியா" என வரவேற்று உட்கார வைத்து சமையல் அறையில் டீ வைக்கப் போனாள் அங்கயற்கண்ணி..கூடவே மீனாவும்.

 

பிரியாவுக்கு அவர்கள் இருவரும் சமையலறையில் புலம்பியது தெளிவாக காதில் கேட்டது. கசங்கிய கண்களோடு வெளிவந்த அங்கயற்கண்ணியிடம் "ஆன்ட்டி நீங்க பேசியதெல்லாம் எனக்கும் கேட்டது, கவலைப்படாதீங்க ஒரு நிமிஷத்துல நான் தீர்த்து வைக்கிறேன் என்றாள் பிரியா.

பெரியவர்கள் இருவரும் மலங்க மலங்க விழித்தனர்.

 

 கைபேசி எடுத்த பிரியா யாருக்கோ போன் செய்து "தொந்தரவுக்கு மன்னிக்கணும், இனிமே தொந்தரவே இருக்காது... 12 வருஷமா நீங்க என்னிடம் காதலிக்க சொன்னதை மறுத்து உங்க மனசு உடையற மாதிரி பல தடவை பேசிட்டேன். நீங்களும் ஒரு வருஷமா என்கிட்ட பேசறது இல்ல ....நானும் ரொம்ப வருத்தமா தான் இருக்கேன் அதை சொன்னா புரியாது .

ஆனா அந்த கோவத்துல வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைக்கவா செய்வீங்க?

போன் பண்ணி உங்க அப்பா அம்மாவுக்கு ஓகே சொல்லுங்க 12 வருஷமா நீ கேட்ட ஐ லவ் யூக்கு நான் பரிபூரணமா ஓகே சொல்றேன் ஐ லவ் யூ டூ ....

 

 

இந்த ஈகோ பிடிச்ச கழுதைகளுக்கு பத்து பொருத்தம் இருக்கோ இல்லையோ ஈகோ பொறுத்தம் நல்லாவே இருக்கு என்றபடி சிரித்தனர் இரு தாய்மார்களும்.

 

பசுமைத்தமிழன்

தகடூர் சு தமிழரசன்.