புதுடெல்லி, ஆக. 22–
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக, போலந்து நாட்டுக்கு நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரை சந்திக்கும் மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பேசுகிறார்.
இந்த பயணம் தொடர்பாக, எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருந்ததாவது:
போலந்து தலைநகர் வார்சா கிளம்பி செல்கிறேன். இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்பட்டு, 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் நேரத்தில் இந்த பயணம் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. போலந்துடனான ஆழமான நட்புறவை, இந்தியா கொண்டாடி வருகிறது. ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 45 ஆண்டுக்கு பின், இந்திய பிரதமர் ஒருவர் போலந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி, உக்ரைனுக்கு நாளை செல்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது இது முதல் முறையாகும்.
போலந்தில் இருந்து உக்ரைனுக்கு பிரதமர் மோடி ரயிலில் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயணம் செய்வோரை கவரும் வண்ணம் ரயிலின் உட்புறம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தலைவர்கள் தங்க அறைகள், முக்கிய ஆலோசனை நடத்த விசாலமான கூடங்கள், மேஜைகள், சொகு சோபா மற்றும் டிவி பொருத்தப்பட்டு உள்ளது.
உக்ரைனில் 7 மணி நேரம் இருக்கும் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுகிறார்.
உக்ரைன் பயணம் தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில் உக்ரைன் செல்ல உள்ளேன். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்த இது உதவும். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமைதியான முறையில் தீர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
நம்முடைய நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில், அந்த பிராந்தியத்தில் விரைவில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், போலந்து தலைநகர் வார்சாவை மோடி சென்றடைந்தார். வார்சா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
===