நாங்கள் விரும்பிய படியே
நகரின் மையத்தில் அமைந்திருந்தது.
வாசலில் எங்கள் தலையைப் பார்த்ததும்,
ஓடோடி வந்து
சிகப்பு கம்பளம் விரித்தாள்_ அந்த
நடுத்தர வயதுக்கும் சற்று குறைவான பெண்மணி_வீட்டை
உள்ளும் புறமும் சுற்றி காட்டினாள்
பெயிண்ட் வண்ணம் உட்பட எல்லாமே
எங்களுக்கு இணக்கமாயிருந்தது.
அமர்ந்து குளிர் பானம் பருகினோம்.
' புரோக்கர் விபரம் சொல்லிருப்பாரே..
நெஞ்சுவலின்னு மயங்கி விழுந்தார்
அஞ்சு நிிமிஷத்துல முடிஞ்சு போச்சு..
தவணை கடந்த பாக்கி கேட்டு பேங்க்ல யிருந்து
நோட்டீஸ் மேல் நோட்டீஸ்...
இந்த மாசம் செட்டில் பண்ணியாக ணும்..'
முட்டிய கண்ணீரை
முகம் காட்ட விடாமல்
முந்தானையில் துடைத்தாள்..
அமைதியும் ஆமோதிப்புமாய்
தலையசைத்து விட்டு _ இதமாய்
இரண்டொரு வார்த்தை சொல்லி
விடை வாங்கும் போது,
' இவன்பெரியவன்..எட்டாங்கிளாஸ்
இது சின்னவன்..ஆறாங்கிளாஸ்..'
ஆகக்குறைந்த டெசிபலில்
அறிமுகப் படுத்தி வைத்தாள்.
' தந்தை' ஒளி இழந்த _அந்த சிறுவர்களின் உச்ச சோகத்தில்
எங்கள் விழிகளில் மனமாற்றம் புரிந்து,
சட்டென்று படபடத்து விதிர்விதித்தாள்...
'சென்டிமென்ட்டா ஃபீல்பட்டு
வீட்டை வாங்கும் முடிவுல 'பேக்' அடிச்சிடாதீங்க...ப்ளீஸ்...
நெல்லை குரலோன்
பேரன்பு
பொட்டல் புதூர் --627423
தென்காசி மாவட்டம்