எதிர்பார்க்காத நிகழ்வுகள் எதிர்பார்த்து நடப்பதில்லை. எதிர்பாரா வேளையில்தான் நடக்கின்றன. அதுவும் இப்படி நடக்குமா என்று வியக்கும்படியே நடக்கின்றன.
அப்படித்தான் இன்று நடந்துவிட்டது.
நாளை நிச்சயதார்த்தம் என்பது இருபது நாள்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. செந்திலுக்கும் பாமினிக்கும் பெரியவர்கள்தான் நிச்சயித்திருந்தார்கள். பிரபல துணிக்கடையில் பாமினிக்கு கேசியர் வேலை. பிரபல மருந்துக்கடையில் செந்திலுக்கு வேலை. காதல் திருமணமில்லை. இருந்தாலும் பாமினிக்குள் இருந்த காதல் ஈவு இரக்கமின்றி நிராகரிக்கப்பட்டது.
வேறு வழியில்லை. பாமினியைப் பெற்றவர்கள் வழக்கம்போல தங்கள் உயிரை வைத்து மிரட்டாமல் சொல்லிப் பாமினியைப் பணிய வைத்திருந்தார்கள்.
விதி என்று ஒன்று இருக்கிறது. அது பலமாகத்தான் எப்போதும் தன் வேலையைச் செய்கிறது. நம்புகிறவர்கள் நம்புகிறார்கள். நம்பாதவர்கள் நடந்தவுடன் மாறுகிறார்கள்.
எல்லோரும் நிச்சயதார்த்தத்திற்குத் தயாரானபோது செந்தில் என்ன காரணம் என்று தெரியாமல் நண்பனின் அறையில் தற்கொலை செய்து பிணமாகக் கிடந்தான். காரணம் காதல் என்றார்கள். காவல்துறை விசாரிக்கிறது.
பாமினி அதிர்ந்துபோனாள். அவளின் பெற்றோர்கள் துடித்துப போனார்கள். பாமினி வாழ்க்கை என்ன வாகும்?
ஊரும் உறவுகளும் அதிர்ந்துபோனது. அவரவர் எல்லையில் கிடைத்த அவச் சொற்களை, துக்கிரிச் சொற்களை எடுத்து பாமினி நோக்கி வீசினார்கள்.
நல்ல ராசியான பொண்ணுதான்.. வரும்போதே தாலி கட்டப் போறவன தூக்கிடிச்சு.. கல்யாணத்துக்கு முன்னமே புருஷனே முழுங்குது.. இது போற வீடு விடிஞ்சாப்பலத்தான்.. வீட்டையே விழுங்கிடும்.. ராட்சத ராசி போலருக்கு..
ஓயாமல் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.
ஒருநாள் இரவில் பாமினி வீட்டுக் கதவைத் தட்டினான் தேவன். தட்டியவன் பாமினியைக் காதலித்தவன். மனசாரக் காதலித்தவன். வீட்டுச் சூழ்நிலையைச் சொல்லி.. தன்னால் உன்னோடு வாழமுடியாது என்று சொன்னபோது அமைதியாக விலகிப்போனவன் தேவன்.. ஒரு வார்த்தை சொன்னான்.. நான் எதுவும் செய்யமாட்டேன்.. உண்மையான காதல் என்பது தன்னால் நேசிக்கப்படும் பொருள் துளியும் துன்பப்படக்கூடாது என்பதுதான்.. நீ மகிழ்ச்சியாய் இரு.. என்று ..
பாமினியின் பெற்றோரிடம் சொன்னான்.. இப்பவாவது எனக்குப் பாமினியைத் தாருங்கள்.. நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்றான்.. இதையும் பேசுவார்கள் பேசட்டும். தெளிந்து முடிவெடுத்தார்கள்.
என் பெண்ணை அழைத்துக்கொண்டுபோய் திருமணம் செய்துகொள்.. மனமார வாழ்த்துகிறோம் என்று சொன்னார்கள் பாமினியின் பெற்றோர்கள்.
ஹரணி, தஞ்சாவூர்.